ஞாயிறு, 15 மே, 2022

தங்கம் தோன்றிய கதை பகுதி மூன்று

 தங்கம் தோன்றிய கதை 3

வஸிஸ்டர் பரசுராமர் உரையாடல் தொடர்ச்சி ;

தேவர்கள் அனைவரும் அக்னியை தேடி மறுபடியும் அலையத்தொடங்கினார்கள். அக்னி தவளைக்கு சாபம் கொடுத்துவிட்டு அரசமரத்தில் சென்று தஞ்சம் அடைந்தார். அப்போது தேவர்கள் அக்னியை தேடிவர, அங்குள்ள ஒரு யானையானது " அக்னியானார் அரசமரத்தில் இருக்கிறார் " என்று கூறிற்று. உடனே அக்னியனவர் யானைக்கு " உனது நாவானது தலைகீழாக மாறிப்போகும்" என்று சாபம் கொடுத்து விட்டு அரசமரத்தில் இருந்து வன்னிமரத்தில் புகுந்தார்.

தேவர்கள் தனக்கு உதவி செய்த யானைக்கு வரம் அளித்தனர். யானைகளே! மாறிப்போன நாவினாலும் எல்லா ஆகாரங்களையும் உண்பீர்கள். எழுத்துக்களில் தெளிவில்லாமலே உரத்தகுரலால் வாக்கை சொல்வீர்கள் என்று வரம் தந்து அக்னியை தொடர்ந்தனர்.

பின்பு வன்னிமரத்தில் புகுந்த அக்னியை ஒரு கிளியானது தேவர்களுக்கு காட்டிக்கொடுக்க மீண்டும் அக்னியானவர் கிளிக்கு வாக்கில்லாமல் போவாய் என்று சபித்தார். அதுகண்ட தேவர்கள் கிளிக்கு " நீ! அடியோடே வாக்கில்லாமல் போக மாட்டாய், உன் பேச்சு வளர்ந்த குழந்தையின் பேச்சு போல தெளிவில்லாமலே அழகாக இருக்கும் " என்று வரமளித்தனர்.

( இதுதான் கிளிபேச்சுன்னு சொல்வது).

உடனே தேவர்கள் அக்னியை வன்னிமரத்தில்கண்டு ,அந்த வன்னிமரத்தையே எல்லா கிரியைகளுக்கும் அக்னிஸ்தானமாக செய்தனர். அப்போது முதல் அக்னியானது வன்னிமரத்தில் காணப்படுகிறது.

பிறகு தேவர்கள் அக்னியிடம் உமாதேவியின் சாபம் மற்றும் தாரகன் வதம் பற்றி கூறி வேண்டிக்கொள்ள, அக்னியானவன் கங்கையின் இடத்திற்க்கு சென்று அங்கே கங்கையுடன் சேர்ந்து கர்ப்பத்தை உண்டு பண்ணினார்.கங்கை அக்னியின் வீரியத்தால் மயக்கமுற்று கொடிய தாபத்தை அடைந்து அதை தாங்கமாட்டாமல் போனாள். பின்பு அக்னியிடம் தன்னால் வீர்யத்தை தாங்க முடியவில்லை என்று கூற அக்னி சமாதானம் செய்து கர்பத்தை தாங்கும்படி செய்தார்.

ஆனால் கங்காதேவி , ருத்திரரின் வீர்யமும் கலக்கப்பட்டிருப்பதால் வீர்யத்தை தாங்காமல் மேருமலையில் விட்டாள். பிறகு , அக்னி கங்கையிடம்" உமது கர்ப்பம் ஸுகமாக வளருகிறதா! என்ன குணமுள்ளது ? எவ்வகை நிறமுள்ளது ?என சொல் என்றார்.

அதற்கு கங்கை, குற்றமற்றவனே! அந்த கர்ப்பமானது உன்னை போல பிரகாசமாகவும் தாமரை கடம்ப மலர் போல குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அது சூரியனொளி சேர்ந்தது போல பொன்மயமாக காணப்படுகிறது. அந்த வீரியமானது மலை அருவி நதியில் பாய்ந்ததால் மூவுலகங்களையும் ஒளியினால் விளங்க செய்கிறது.  ஒளியில் உன்னையும் சூரியனையும் போலவும் அழகில் இரண்டாவது சந்திரனை போலவும் இருப்பான் என்றாள். இந்த காரியத்தாலே அக்னிக்கு ஹிரண்யரேதஸ் என்னும் பெயரை கூறுகின்றனர்.

அப்போது அந்த கர்ப்பம் தேவலோகத்தில் நாணல் காட்டை அடைந்தது.அப்போது கிருத்திகை தேவிகள் அன்பு கூர்ந்து முலைப்பால் சுரப்புகளால் வளர்த்தனர். சிறந்த ஒளியுள்ள அந்த குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் பெற்றது. ரேதஸ் சிந்தினதால் ஸ்கந்தன் என்றும் குகையில் இருந்ததால் குகன் என்றும் பெயர் பெற்றது. இப்படியாக பொன்னானது அக்னிக்கு பிள்ளையாக பிறந்தது.

பொன்னிலும் ஜாம்பூநதம் என்னும் தங்கம் மிகச்சிறந்தது. அதுவே தேவர்களுக்கு ஆபரணமாகுகிறது. அதனாலே பொன் ஜாதரூபம் என்று சொல்லப்படுகிறது. அது ரத்தினங்களில் பரிசுத்தம். மங்களங்களுக்கு மங்களம். அதனால் பொன் என்பது அக்னி பகவானும் சிவபெருமானும் இருப்பது.

 பரிசுத்தங்களில் பரிசுத்தம் கனகமே! தங்கமானது அக்னியும் ஸோமனுமாக இருப்பதென்று சொல்லப்படுகிறது.

இப்படியாக தங்கமானது வியாபித்து நிற்கிறது.

இதே போலவே அக்னியானது அரச, வன்னி மரத்தில் நிலைத்திருப்பதும்.

#தங்கம்
#பரசுராமர்
#வசிஸ்டர்
#பீஷ்மர்
#மஹாபாரதம்


கருத்துகள் இல்லை: