ஞாயிறு, 15 மே, 2022

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

திருநெல்வேலியில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை  பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல்   பிறந்தார்.

இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.

ஐந்து வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது ஆசிரியர் சீதாராம நாயுடு அவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை கற்றுக் கொடுத்தார்.
முருகன் மீது பக்தி உருவாயிற்று.

ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார்.

முருகப்பெருமானின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட
சேய் தொண்டர்களில் ஒருவர்.

தமிழகத்தில் வாழ்ந்த
“சமூக சீர்திருத்தப் போராளி” ஆவார்.

தமிழ் மொழி மேல் அப்படி ஓர் மகா ஈடுபாடு கொண்டவர்.

“மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட”
என்றார்.

சுமார் ஒரு இலட்சம் பாடல்களை பாடியவர் இவர்.

தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டு வந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.

பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

தனது மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள்.

மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள்.

அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

இவர்
வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார்

ஒன்பதாம் வயதில் சங்கரலிங்கம் தென்காசியில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்த போதே, பாடல் இயற்றும் திறமை அவருக்குள் ஊற்றெடுத்து கிளம்பியது.

ஒரு நாள் சுரண்டை என்ற ஊருக்கு அருகில் உள்ள சித்திரா நதிக்கரைக்கரையில் அமைந்த அம்மன் “பூமி காத்தாள்” எனும் தேவியைப் போற்றி ஒரு வெண்பா பாடினார்.

பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை அதில் விளக்கி இருந்தார்.

முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும்,

திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

1864ஆம் ஆண்டு திருநடைப்பயணம் சென்றபோது சுவாமிகள் வேலூரில் தங்கினார்.

அப்போது வடமொழி வாணர்கள் அவரிடம் நேரில் சென்று வாதிட்டனர். தமிழ்மொழியே வடமொழியைவிட உயர்ந்தது என்று சுவாமிகள் வாதிட்டார்.  

மொழிகளில் உயர்வு கொண்டது ‘வடமொழி’ என்பதை ஏற்பீர்களா? என்றனர்.

அதற்குச் சான்று தர முடியுமா?
என சுவாமிகள் கேட்க,

வேதம் வடமொழியில் தான் இருக்கிறது. இது ஒன்று போதுமே!

 வேதம் வடமொழியில் இருக்கிறதா? தமிழ் மொழியிலும் வேதம் இருக்கிறது தெரியுமா? என சுவாமிகள் பதில் சொல்ல,

தெரியாது என்றனர் வாணர்கள்.

ஆட்டையும், மாட்டையும் அடித்துப் போட்டு , ஊன் அவி பெய்து உண்ணும்படி சொல்வது உங்கள் வேதம்.

 “அவி சொரிந்து ஆயிரட் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று” எனப் பேசுவது எங்கள் வேதம்…

தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றார்.

ஒரு பகலும் , ஒரு இரவும் கழிந்த பின் இரு தரப்பினரும் முடிவை எட்ட வில்லை.

பின்னர்

இறைவனுடைய திருவடியில் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள
சம்மதம் தெரிவித்தனர்.

ஈசன் திருவடிக்கு முன்பு திருவுளச் சீட்டு எழுதிப் போடப்பட்டது.

அதில், “தமிழே உயர்ந்தது” என்னும் சீட்டு எடுக்கப்பட்ட போது சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அப்போது, “தமிழே உயர்ச்சி யென்று சீட்டுக் கொடுத்த பெருமானே!”
என திருப்புகழ் பாடி முடித்தார்.

தமிழின் சிறப்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு கூறும் இப்பாடல் “தமிழலங்காரம்” என்று அழைக்கப்படுகிறது.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.

சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்

முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார்.

அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார்.

தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் சென்று முருகபக்தி
வளர்த்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் கவுமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்க்கப் பாடுபட்டார்.

திருவாமாத்தூரில்
இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் (1898) மறைந்தார்.

இவரது சீடராகிய இராமநந்த சுவாமிகள் சிரவண புரத்தில் (கோயம்புத்தூர்) இன்னொரு திருமடத்தை நிறுவி, தண்டபாணி சுவாமிகள் செய்த இறைப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இந்த இரு மடங்களும் “கெளமரம் மடம்” என்று அழைக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை: