கதிர்காம ஸ்வாமிகள்
ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகள். ஸித்துகள் அதிகம் நிகழ்த்தி இராத சித்த புருஷர் இவர். தான் இருந்த வரையிலும் எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாதவர். தன்னைப் பலர் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாதவர். தனக்குப் பிறகு இவர்தான் சிஷ்யர் என்று எவரையும் அடையாளம் காண்பிக்காதவர். சுத்த சன்னியாசி, பரம யோகி. கதிர்காம சுவாமிகளின் குருவருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் பலரும். சுவாமிகள் இன்றைக்கும் ஜீவித்து வருவதாகச் சொல்கிறார்கள். தங்களது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஸ்வாமிகள் உடன் இருந்து நல்ல பல தீர்வுகளை வழங்கி வருவதாக மெய்சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். பக்தர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறிதும் பொய்த்துப் போகாமல் இருக்க. சிக்கலான நேரங்களில் அவர்களை இனிதே நல்வழிப்படுத்தி இன்றளவும் இயக்கி வருகிறார் ஸ்ரீகதிர்காம சுவாமிகள்.
சில ஆண்டுகளுக்கு முன் கோரமான ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு. உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துமனைவில் அனுமதிக்கப்பட்டார் ஸ்வாமிகளின் பிரபலமான பக்தர் ஒருவர். நிச்சயம் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டார் அவர். ஆனால் கதிர்காம சுவாமிகளின் அருளால் அன்றைய தினம் இரவு. அவரது உடல் முழுவதும் யாரோ ஒருவர் திருநீறு பூசுவது போல் உணர்ந்தார் அவர். பிறகென்ன.... மருத்துவ உலகமே கைவிடப்பட்ட அவர், ஸ்வாமிகளின் அருளால் இன்றும் பூரணத் துடிப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம்?
உமையம்மையால் ஞானப் பால் பெற்ற திருஞானசம்பந்தரின் அவதாரத் தலமான சீர்காழிக்கு அருகே ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் காவிரியின் உபநதியான உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்வாமிகளின் அதிஷ்டானம். 19.11.1962-ஆம் வருடம் பிலவ ஆண்டு கார்த்திகை 4-ஆம் தேதியன்று திங்கட்கிழமை தினத்தில் மக நட்சத்திரத்தன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி ஆனார். அதுவரை சீர்காழித் தெருக்களில் நடமாடி, பக்தர்களை ஆசிர்வதித்து வந்த ஸ்ரீகதிர்காம சுவாமிகள். இப்போது அதிஷ்டானத்தில் இருந்தபடியே நகரையும் தம் மக்களையும் காத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத மக நட்சத்திர தினத்தில் ஸ்வாமிகளின் குருபூஜை ஆராதனை விழா. அவரது பக்தர்களால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மகான்களின் அவதாரத்தை அறிய முடியுமா? அது போல் ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அவதார தினத்தை இதுவரை எவரும் அறியவில்லை. பூர்வாஸ்ரமத்தைப் பற்றிய குறிப்புகளும் பெருமளவில் புலப்படவில்லை. ஸ்வாமிகளின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான பல பக்தர்கள் இன்றளவும் சீர்காழி. சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். கதிர்காம ஸ்வாமிகளுடன் தாங்கள் அளவளாவிய அந்த நாட்களைப் பற்றி அவரது பக்தர்கள் பேச ஆரம்பித்தாலே, உருகிப் போகிறார்கள். கிட்டத்தட்ட தங்களின் பலரும் ஸ்வாமிகளை வழிபடுகிறார்கள்.
ஸ்வாமிகள் சரித்திரத்தில் இருந்து சில செய்திகள்.
ஸ்வாமிகள் பூவுலகில் வசித்த காலம் இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் என்று சொல்லப்படுகிறது. வங்காள தேசத்தைச் சேர்ந்த பிரம்ம குலத்தில் அவதரித்தவர். நேபாள மந்திரி ஒருவரின் திருமகனார் என்றும் குறிப்பு உண்டு. வசதிகள், வாய்ப்புகள் இருந்தும் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் செல்லாமல். துறவறத்தை நாடியது சுவாமிகளின் மனம். இறைவனின் சித்தம் அதுவாக இருந்தால், எவர்தான் என்ன செய்ய முடியும்! எனவே, இளம் பிராயத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
ஊர் ஊராகத் திரிந்தார். வயிற்றுப் பசிக்கு பிக்ஷை கைகொடுத்தது. இறைப் பசிக்கு தவம் கைகொடுத்தது. பல நாட்கள் பயணம் செய்து. பல ஊர்களைக் கடந்து ஆன்மிகத்தின் தாயகமான இமயமலைச் சாரலை அடைந்தார். தவ சீலர்களின் சொர்க்கபுரியான இமயம். இவரை இரு கரம் நீட்டி வரவேற்றது. ஏகாந்தமான சூழ்நிலையில் தன் தவத்தைத் துவங்கினார்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இமயமலையில் தவம் இருந்த காலத்தில்தான் ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளை (திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூர் தபோவனத்தில் அதிஷ்டானம் கொண்டுள்ள மகான்) சந்தித்தார். மகான்களின் மனங்கள் இரண்டாறக் கலந்தன. இறைவன் இருவரையும் இணைந்து வைத்தான். தவத்திலும் யோகத்திலும் நாட்களைக் கழித்தார்கள் இருவரும். அதன் பின் இருவரும் இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது.கதிர்காம முருகன் இவர்களை ஆட்கொண்டான். புராணங்கள் புகழும் கதிர்காமத்தின் அடர்ந்த மலைப் பகுதிகளில் இருவரும் நீண்ட காலம் தவம் புரிந்தார்கள். சாதாரண தவம் அல்ல... சுமார் 65 ஆண்டு காலத்துக்கு இந்த தவம் நீடித்தது. அறப் பணிகள் புரிந்தனர்.இவர்களின் பக்தியிலும் தவத்திலும் பூரித்த கந்தப் பெருமாள் இருவருக்கும் காட்சி தந்து அருளினார் (இதனால் தான் கதிர்காம சுவாமிகள் என்கிற திருப்பெயர் பின்னாளில் இவருக்கு வந்தது சுவாமிகளின் இயற்பெயர் பாலசுப்பிரமண்ய சுவாமி என்பாரும் உளர்.) அப்போது, கதிர்காம சுவாமிகளை பக்தி மார்க்கத்திலும் ஞானானந்த கிரி சுவாமிகளை ஞான மார்க்கத்திலும் செல்லுமாறு முருகப் பெருமானே வழிநடத்தியதாக. சுவாமிகளின் சரிதம் சொல்கிறது. 65 ஆண்டு கால தவம் முடிந்த பிறகு கதிர்காம சுவாமிகளும் ஞானானந்த கிரி சுவாமிகளும் தமிழகம் திரும்பும்போது, பிரியத் கூடாத உறவினர்களைப் பிரிவதுபோல், அந்த வனத்தில் உள்ள துஷ்ட மிருகங்கள் எல்லாம் துயரத்தால் கண்ணீர் விட்டதாக சுவாமிகளின் பக்தர்கள் சிலர் மெய் சிலிர்த்துச் சொல்கிறார்கள். அப்படித் திரும்பிய கதிர்காம சுவாமிகள் சீர்காழியைத் தேர்ந்தெடுத்தார். ஞானானந்த கிரி சுவாமிகள் திருக்கோவிலூரைத் தேர்ந்தெடுத்தார்.கதிர்காமத்தில் ஸ்ரீபிரம்மானந்தா என்கிற யோகிடம் சன்னியாச தீட்சை பெற்றார் சுவாமிகள். அதன் பின் காஷ்மீர், இமயமலை, பர்மா போன்ற தேசங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக சீர்காழிக்கு வந்து உப்பனாற்றங்கரையில் ஒரு சில பக்தர்கள் பனைமட்டை ஓலையால் அமைத்துத் தந்த குடிசையில் தங்கலானார். தன் உணவுத் தேவைக்காக சட்டநாதபுரம் மற்றும் தென்பாதி அக்ரஹாரத்தில் உள்ள வீடுகளுக்கு பிக்ஷை கேட்டுச் செல்வார். இதை அன்னக் காவடி என்கிறார்கள். துவக்க காலத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொண்டார் சுவாமிகள். மிகவும் எளிமையான உணவு. மிளகு, கீரை, பருப்பு, சேர்த்த பதார்த்தத்தை உண்பார் சுவாமிகள். அதுவும் பிசைந்த அன்னத்தில் இருந்து மூன்றே மூன்று கவளங்கள் மட்டும் உட்கொள்வார். உணவில் உப்பு சேர்ப்பதை சுவாமிகள் விரும்ப மாட்டார். இரவில் பால் அருந்துவார். இட்லியும் அதற்குத் தொட்டுக்கொள்ள நெய் கலந்த சர்க்கரையும் சுவாமிகளுக்கு விருப்பம் என்று அவரது பக்தர் ஒருவர் சொன்னார்.
கப்பல்கார செட்டியார் எனப்படும் தனவந்தர் வீட்டுக்கு மாலை வேளைகளில் சென்று உணவருந்தி, அவரிடம் மனம் விட்டு உரையாடுவார் சுவாமிகள். இத்தகைய அற்புத மகான் ஒருவர், தங்கள் ஊருக்கு வந்து தங்கி இருக்கிறார் என்பதை அறிந்த சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் அவ்வப்போது பெருமளவில் திரண்டு வந்து. தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுமாறு கதிர்காம சுவாமிகளை நமஸ்கரித்துக் கேட்பார்கள். அவர்களில் பலருக்கு சுவாமிகள் அனுக்ரஹமும் செய்துள்ளார். வரும் பக்தர்களில் பலர் இனிப்புகள், திராட்சை, கல்கண்டு, பழங்கள், முந்திரி போன்றவற்றை சுவாமிகள் சாப்பிடட்டுமே என்று ஆசைப்பட்டு வாங்கி வருவார்கள். ஆனால், அவற்றின் மேல் தன் திருக்கரங்களைப் பதித்துவிட்டு, குழந்தைகளுக்கும் அங்குள்ள பக்தர்களுக்கும் தருமாறு சொல்லி, அதில் இருந்து எதையும் எடுத்துகொள்ள மாட்டார் சுவாமிகள்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் உப்பனாற்றங்கரைக்கு வந்து ஓலைத் குடிசையில் அமர்ந்த காலத்தில் அந்தப் பகுதியே காடு போல காட்சி அளித்தது. பிறகு, சுவாமிகளின் முயற்சியால் ஏற்றம் போட்டு நீர் இறைத்து அந்தப் பகுதியையே மணக்கும் நந்தவனமாக மாறினார். நந்தவனமாக இந்தப் பகுதி மாறுவதற்கு முன் ஏராளமான பாம்புகள் இங்கே நடமாடும். அவற்றுள் சில பாம்புகள் சுவாமிகளின் திருமேனி மேல் விழுந்து சுற்றிக் கொள்ளும். சுவாமிகளும் ரொம்ப சுவாதீனமாக, சரி... போ உன் இருப்பிடத்துக்கு. சிலர் உன்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று சொல்ல... உடலில் இருந்து பாம்புகள் தரையில் இறங்கி ஊர்ந்து போய்விடும். இந்தக் காட்சியை நேரில் பார்த்த அன்பர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். தன் பக்தர்களிடம் பாம்பைக் கண்டு பயப்படாதீர்கள். அதைப் பார்த்தவுடன் ஜெய சீதாராம்..... ஜெய சீதாராம் என்று சொல்லுங்கள் அடுத்த கணமே அவை நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் என்பார் சுவாமிகள்.
அடியார்களுக்கு அன்னதானம் செய்வதென்றால் கொள்ளைப் பிரியம் சுவாமிகளுக்கு. தினமும் குறைந்தது பதினாறு பரதேசிகளுக்காவது தன் கைப்பட அன்னம் எடுத்துக் கொடுப்பார் சுவாமிகள். எது இருக்கிறதோ இல்லையோ, தயிர் சாதமும் ஊறுகாயும் நிச்சயம் இந்த அன்னதானத்தில் இடம் பெறும். அன்னதானம் முடிந்து சாதுக்கள் புறப்படும் போது. அவர்கள் கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவார். இதெல்லாம் சாதாரண நாட்களில் நடக்கும் அன்னதானம் விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சீர்காழியில் வசிக்கும் ஒருவர் தன் தந்தையார் கூறியதாக நம்மிடம் சொன்னார். பூசனிக்காயை சாம்பாரில் போடுவதற்காக உளியால் அதை சரசரவென்று வெட்டுவார்கள். கத்தியால் நறுக்கிக் கொண்டிருந்தால் நேரம் போதாது. இரண்டு கைகளாலும் பிடிக்கக்கூடிய அளவில்தான் லட்டு தயார் செய்யச் சொல்வார் சுவாமிகள். சாம்பார் இருக்கும் மிகப் பெரிய அண்டாவில் குனிந்து அதை எடுக்க முடியாது என்பதால், ஒரு வாளியில் கயிறு கட்டித்தான் சாம்பாரை எடுத்துப் பரிமாறுவார்கள். அப்படி என்றால், அந்த அண்டா எத்தனை பெரிதாக இருக்கும் என்று யோசியுங்கள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பார்த்து அனுபவித்தவர்கள், எத்தனை பாக்கியம் பெற்றவர்கள்! சுவாமிகளின் அனுபவங்களைப் பல பக்தர்களும் நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்கள். அவற்றுள் சிலவற்றுள் இவை! பேச்சு சரியாக வராத தன் பெண்ணைக் கூட்டி வந்தார் ஒரு அம்மணி. இருவரையும் உப்பனாற்றில் மூழ்கிவிட்டு வரச் சொன்னார் சுவாமிகள். தரிசித்துவிட்டு நம்பிக்கையுடன் புறப்பட்டவர்கள். அவர்கள் ஊர் போய்ச் சேருவதற்கு முன்பாக, பாதி வழியிலேயே அந்தப் பெண்ணுக்குப் பேச்சு அட்சர சுத்தமாக வந்துவிட்டது.சதா எந்நேரமும் மது குடித்தே தன் வாழ்க்கையைத் தொலைந்துவிட்ட ஒரு அன்பர். சுவாமிகளைச் தரிசிக்க வந்தர். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை இதற்கே செலவழித்ததால். குடும்பம் நிர்க்கதியாகிப் போய்விட்டது. வீட்டிலும் நிம்மதி இல்லை. அந்த மது ப்ரியருக்கு. கதிர்காம சுவாமிகளிடம் போனால் எல்லா பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதாகச் சொல்கிறார்களே.... நாமும் போய்த்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் உப்பனாற்றங்கரைக்கு சுவாமிகளின் குடிசைக்கு வந்தார். அந்த மது ப்ரியர். வந்தவரின் மனதில் உள்ள எண்ணத்தைப் புரிந்துகொள்வதில் சுவாமிகளுக்கு சிரமம் இருக்குமா என்ன?
வந்த மது ப்ரியரின் கையில் ஒரு சொம்பை கொடுத்து உப்பனாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருமாறு சொன்னார் சுவாமிகள். அவரும் குழப்பத்துடனே உப்பானற்றுக்குப் போய் நீர் முகர்ந்து வந்து சுவாமிகளிடம் கொடுத்தார். அதைப் பத்து நிமிடங்கள் தன் கையில் வைத்திருந்தபடியே அவரிடம் சில விஷயங்களைப் பேசினார் சுவாமிகள். பிறகு, அந்தச் சொம்பு நீரை அவரிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அந்தச் சொம்பு நீரை மடமடவென்று குடித்து முடித்த அவர் அதிர்ந்து போனார். காரணம்-மதுவில் இருக்கும் அதே சுவை. கொஞ்சமும் குறையாமல் அந்த நீரிலும் இருந்ததுதான் சுவாமிகளின் அருளால் சாதாரண குடிநீர் இப்படி மாறிப் போய்விட்டிருந்தது. அன்பரே.... பாவம் எத்தனை நாட்களுக்குத்தான் கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கிக் குடிப்பீர்கள்? இன்று ஒரு நாளைக்காவது நீங்கள் இலவசமாகக் குடிக்கலாமே என்றுதான் இப்படிச் செய்தேன் என்றார் சுவாமிகள் புன்னகையுடன் வந்திருந்தவருக்கு வெட்கமும் அவமானமும் சேர்ந்து கொண்டது. கண்ணீர் மல்க, சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். நாளை முதல் குடிக்கிற எண்ணம் உனக்கு வருதானு பார் என்று சொல்லி அனுப்பினார் சுவாமிகள்.
என்னே ஆச்சரியம்! மறுநாளில் இருந்து அந்த அன்பர் குடிப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார். இதை சுவாமிகளிடம் வந்து சந்தோஷமாகச் சொல்லிவிட்டுப் போனார் அவர். சில நேரங்களில் சுவாமிகள் தனியே அமர்ந்திருப்பார். ஆனால், எதிரே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் இருக்கும். அது போன்ற வேளைகளில் ஞானானந்த கிரி சுவாமிகளிடம் கதிர்காம சுவாமிகள் உரையாடிக் கொண்டிருப்பதாகப் பின்னாளில் அவரின் பக்தர்கள் சொன்னார்கள். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத வித்தையும் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டுச் செய்யும் நவகண்ட யோகமும் சுவாமிகளுக்குப் பரிச்சயமானவை. நவகண்ட யோகத்தில் சுவாமிகள் இருக்கும்போது பாம்புகள் அவரைச் சுற்றி இருக்கும். அந்த வேளையில் பக்தர்கள் எவராவது திடீரென முன்னேறிவிப்பே இல்லாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்! இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள பக்தர்களிடம் கதவு மூடி இருந்தால், திறந்துகொண்டு உள்ளே வரும்போது ஜெய் சீதாராம் என்று சொல்லிவிட்டு உள்ளே வாருங்கள் என்பார் சுவாமிகள். அதாவது அப்படிச் சொல்லிவிட்டு, அவர்கள் உள்ளே வருவதற்குள் சுவாமிகள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்.சீர்காழி தென்பாதியில் சுவாமிகளே கட்டிய முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கு முருகப் பெருமான் பிரதான மூலவராகவும், தவிர விநாயகர் மற்றும் வேணுகோபாலன் ஆகிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை ஆகி உள்ளன. சுவாமிகள் பயன்படுத்திய சில பொருட்களும் தரிசிக்கக் கிடைக்கும் இந்த கோயில் பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. நாயன்மார்கள் திருநட்சத்திரத்தன்று அபிஷேக, ஆராதனைகள் செய்யும் வழக்கத்தை சுவாமிகள் இந்த கோயிலில் துவக்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் அடிக்கடி தங்கும் வழக்கம் சுவாமிகளுக்கு உண்டு. இங்கே தான் கட்டிய ஆறடி அகலமும் ஆறடி ஆழமும் உள்ள தனி அறையில் அவ்வப்போது சென்று நிஷ்டையில் கூடி விடுவது சுவாமிகளின் வழக்கம். நிஷ்டையில் உட்கார்ந்தால் ஸமாதி நிலைக்குப் போய்விடுவார் சுவாமிகள். இந்த ஸமாதி நிலைக்கு நேரம் காலம் எல்லாம் தீர்மானிக்க மாட்டார் சுவாமிகள். சில வேளைகளில் மூன்று நாட்கள், ஒரு வாரம். ஒரு மாதம் என்றெல்லாம்கூட நிஷ்டையின் நாட்கள் நீட்டிக்கப்பட்டு விடும்.
இந்தக் காலத்தில் அன்னம், ஆகாரம் எதுவும் இல்லை. சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது பெரிய சைஸில் உள்ள நல்ல பாம்பு ஒன்று சுவாமிகளின் தலைக்கு மேலே படம் எடுத்த கோலத்தில் அவரைக் காவல் காத்து வரும் எப்போதாவது முக்கியமான பக்தர்கள் எவராவது வருவதாகத் தெரிந்தால், சுவாமிகளின் காதில் உஸ் உஸ் என்று சத்தம் எழுப்பி, அவருக்குத் தகவல் கொடுக்கும். உடனே சுவாமிகளும் நிஷ்டை கலைந்து. சரி... நீ போகலாம் என்று பாம்புக்கு விடைகொடுத்து வெளியே வருவார் சுவாமிகள். ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இருநூறு வயதைத் தாண்டியவர் என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. எப்படி என்பதற்கும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவுக்கு வந்து ஆட்சி செய்ததைப் பற்றித் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அப்போது கதிர்காம சுவாமிகள் இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. தவிர காஷ்மீரில் 25 வருடம் பர்மாவில் 25 வருடம். இமயமலையில் 25 வருடம். இலங்கையில் 65 வருடம் என்று அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுவாமிகள் வயதை ஊகிக்கலாம் என்கிறார்கள் அவருடைய பக்தர்கள்.1962-ஆம் வருடம் நவம்பர் மாதம் 19-ஆம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு சுவாமிகள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தார். தான் சமாதி ஆகப் போவதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட ஸ்ரீகதிர்காம சுவாமிகள். முதல் நாள் முக்கியமான சில பக்தர்களை வரவழைத்தார். அடுத்த நாளின் திதி, நட்சத்திரம் இவற்றைச் சொல்லிவிட்டு, நாளை ஒரு முக்கியமான தினம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதோடு உப்பு. சாம்பிராணி, கற்பூரம், விபூதி இவற்றைப் பெருமளவில் இன்றே வாங்கி வையுங்கள் என்றும் சொன்னார். சுவாமிகள் எது சொன்னாலும் அதை உடனே நிறைவேற்றும் அவரது பக்தர்களும் அன்றைய தினமே அந்தப் பொருட்களை வாங்கி வைத்து விட்டார்கள்.
அடுத்த நாள் நள்ளிரவு அமர்ந்த நிலையிலேயே சுவாமிகள் சமாதி ஆனார். அதுவரை, இதற்காகத்தான் பொருட்களை முதல் நாளே வாங்கி வைக்கச் சொன்னார் என்பது எவருக்கும் புரிபடவில்லை அதன் பின், சுவாமிகள் இருக்கும்போதே குறிப்பால் உணர்த்திய இடத்தில் அவரது நிர்விகல்ப சமாதி அமைந்தது. அதன் மேல் லிங்க பிரதிஷ்டையும் அமைந்தது. இந்த கோயில் உப்பனாற்றங் கரையில் அமைந்துள்ளது. பலிபீடம், நந்திதேவர், கருவறை, பிராகாரம் என்று இந்த அதிஷ்டானத் திருக்கோயில் காணப்படுகிறது.
தகவல் பலகை:தலம் :சீர்காழி.சிறப்பு :கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத் திருக்கோயில்.
இருப்பிடம்: சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளது சுவாமிகளின் அதிஷ்டானம்.மயிலாடுதுறையில் இருக்கும் சீர்காழிக்கும், சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கும் எண்ணற்ற பேருந்துகள் உள்ளன. இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் - உப்பனாறு. அங்கே இறங்கிக்கொண்டால். உப்பனாற்றங்கரையில் ஓரத்தில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.
தொடர்புக்கு:
டாக்டர்: ஆர்.வி. நாதன் (தங்குடு),
ப.எண்: 16, பு.எண்: 29, வல்லபபாய் படேல் தெரு, தென்பாதி, சீர்காழி - 609 111, நாகை மாவட்டம், போன்: 04364 - 270650,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக