ஞாயிறு, 15 மே, 2022

தங்கம் தோன்றிய கதை பகுதி இரண்டு

தங்கம் தோன்றிய கதை - இரண்டு

வஸிஸ்ட பரசுராம உரையாடல்.

வஸிஸ்டர்  ; ஹே ராமா! உண்மையை ஆராயுங்கால் அக்னியும் சந்திரனும் சேர்ந்துதான் பொன் என்று அறி.

 செம்மறியாடு அக்னி; வெள்ளாடு வருணன்; குதிரை சூரியன் ; யானைகள், மான்கள், ஸர்ப்பங்கள் ,எருமைகள் ஆகிய இவை அஸுரர்கள்.

 ப்ருகு புத்திரரே! கோழிகளும் பன்றிகளும் ராக்‌ஷஸர்கள் ; யஜ்ஞமும் கோக்களும் பாலும் சந்திரனும் பூமி என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

உலகத்தையெல்லாம் கடைந்து ஒர் ஒளிகட்டியான பொன் உண்டாயிற்று. அதுவே சிறந்த ரத்தினம். இதை காரணம் பற்றிதான் தேவர்கள் கந்தர்வர்கள் அரக்கர்களும் மனிதர்களும் பிசாசர்களும் பல அணிகலன்களை கொள்கின்றனர். பொன்னே பூமியையும் கோக்களையும் விட சிறந்த பாவனமாக சொல்லப்படுகிறது. பொன்னை தானமாக கொடுத்தவர் எல்லாம் கொடுத்தவராகிறார். இது அக்னியின் உருவம்.  மேலும் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் ...

இது ஸ்வாயம்புமனு புராணகதை சொல்லும் போது நான் கேட்டது.  அதை கேள். சிவபகவான் ஆனவர் உமா தேவியை மணம் புரிந்து கையிலையில் இருக்கையில் தேவர்கள் வந்து நமஸ்கரித்து பின்வருமாறு சிவபகவானை பார்த்து கூறலானார்கள். ஓ! தேவரே ! உமக்கு உமாதேவியினடத்தில் சேர்கை உண்டாயிற்று. இருவரும் மிக சிறந்தவர்கள். உமது வீரியம் வீணாகாது. உங்கள் இருவருக்கும் பிறக்கும் சந்ததி மிக்க வலிமையுள்ளதாக இருக்கும் . அதை மீறி ஒன்றும் செய்ய இயலாது. ஆதலால் பிரபுவே ! மூவுல நன்மை கருதி எங்களுக்கு வரம் தாரும்.  

நீர் ! இந்த சிறந்த வீர்யத்தை அடக்கும். உங்களிருவருக்கும் பிறக்கும் சந்ததி தேவர்களை அழித்துவிடும். பூமி ஆகாயம் ஸ்வர்கம் ஒன்று சேர்ந்தாலும் உங்கள் இருவரின் வீர்யத்தை தாங்க முடியாமல் அதன் மகிமையால் எரிக்கப்படும் .அதனால் உமக்கு இந்த உமாதேவியினடத்தில் பிள்ளை பிறவாமல் இருக்க வேண்டும் என்றனர். அது கேட்ட சிவபகவான்  "அப்படியே ஆகட்டும்" என்று வரம் கொடுத்தலால் அவர் ஊர்த்வரேதஸாக ஆனார்.

ஆனால் கோபம் கொண்ட உமை, என் சந்ததிக்கு கெடுதல் செய்ததால் தேவர்களுக்கு சந்ததி இல்லாமல் போக கடவது என்று சாபமிட்டார். அந்த சாப காலத்தில் தேவர்கள் கூட்டதில் அக்னி மட்டும் இருக்கவில்லை.  

( கிளாஸ்க்கு ஆப்செண்ட் ஆயிட்டார் )

அப்போது ருத்திர தேவர் வீர்யத்தை அடக்க அதில் சிறிது சிந்தி பூமியில் விழுந்து அக்னியில் சேர்ந்தது.

இது இப்படி இருக்க , தாரகாசுரனுடைய கொடுமை தாங்காமல் தேவர்கள் பிரம்மதேவரை சரணடைந்தனர். உமாதேவியின் சாபத்தால் வீர்யமிழந்த தேவர்களை கண்டார்.  

பிரம்மதேவர், தேவர்களை பார்த்து, தேவர்களே உமையின் சாபகாலத்தில் அங்கு அக்னி இருக்கவில்லை .ஆனால் ருத்திரனுடைய வீர்யம் அக்னியில் கலந்து இரண்டாவது அக்னி போல பெரும் பொருளாயிற்று. அந்த பொருளை அக்னியானவன் கங்கையிடத்தில் உண்டாக்கப்போகிறான். விரைவில் அக்னிபுத்திரன் பிறப்பான். அதனால் அக்னியை தேடி கண்டுபிடியுங்கள் என்று சொன்னார்.அந்த செயலை செய்ய ஊக்குவியுங்கள் என்றார்.

தேவர்கள் அனைவரும் அக்னியை தேடினார். ஆனால் அக்னி தன் தேகத்தை ஜலத்தில் மறைத்து வைத்திருந்தார். அக்னியை தேடி சோர்ந்து வந்த தேவர்களை நோக்கி ஜலத்தில்  மறைந்திருந்த அக்னியின் வெப்பம் தாங்கமுடியாமல் இருந்த ஒரு தவளை தேவர்களை பார்த்து கூறலாயிற்று. தேவர்களே ! அக்னிபகவான் தன் ஒளிகளை ஜலத்தில் சேர்த்து அந்த ஜலத்தில் தூங்குகிறான். அவனால் நாங்கள் தாபமுண்டாக்கப்பட்டோம். அதனால் அவரை எழுப்புங்கள். அந்த ஜலத்தில் நாங்கள் வசிக்க இயலவில்லை என்றது.  

இப்படியாக தன் இருப்பிடத்தை காட்டிக்கொடுத்து கோள் சொன்ன தவளையை அக்னிபகவான் சபித்தார். ஹே! மண்டூகமே ! நீ சுவைகளை அறியாமல் போவாய் என்று கூறி வேறு இடம் சென்றார்.

( இப்படி அடுத்தவங்களை காரண காரியம் இல்லாமல் கோள் சொன்னால் கடைசிகாலத்தில் உண்ணும் உணவின் சுவையறியாமல் வாக்கு தடுமாறி நோயுறுவர் என்பது விதி)

ஆனால், தனக்கு உதவி செய்த தவளைக்கு தேவர்கள் வரம் அளித்தனர். அக்னியின் சாபத்தால் சுவை மறந்தாலும் அனேக வித வாக்குகளை உச்சரிப்பீர்கள். நீங்கள் வளைக்குள் உணவே உயிரோ பிரஜ்ஞையில்லாமல் இருந்தால் இந்த பூமியே உங்களை காப்பாற்றும். இருள் மூடின இரவிலும் சஞ்சரிப்பீர்கள் என்று தவளைக்கு வரமளித்து மீண்டும் அக்னியை தேடிச்சென்றனர்.

( இதனால் தான் தவளைகளின் வாக்கு பலவிதமாக உள்ளது ,அதனால் மழையையும் வருவிக்கின்றது).

#மஹாபாரதம்
#தங்கம்
#அக்னி

இந்த கதை முதலில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் ஏற்பட்ட உரையாடலில் பீஷ்மர் வஸிஸ்டருக்கும் பரசுராமருக்கும் நடந்த உரையடலை யுதிஷ்டிரருக்கு சொல்ல தொடங்கினார். அங்கே வஸிஸ்டர் பரசுராமருக்கு ஸ்வாயம்பு மனு தனக்கு (வஸிஸ்டர்) சொன்னதாக ஒரு கதை சொல்ல தொடங்கி உள்ளார்.

ஒரு மெயின் கதையில் உள்ள இரண்டாவது கிளைகதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேவர்கள் அக்னியை கண்டுபிடித்தாரா இல்லையா என்று ஒரு சின்ன commercial breakக்கு அப்பறம் நாளை பார்க்கலாம்.

ராம ராம ராம ராம


கருத்துகள் இல்லை: