திங்கள், 12 அக்டோபர், 2020

திருப்பனந்தாள் சிவன்கோயில்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் சிவன்கோயில்

கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.

கொள்ளிடம் , மண்ணியாறு  நதிக்கரையோரம் உள்ள தலம் திருப்பனந்தாள்..கும்பகோணம்- சென்னை சாலையில் கும்பகோணத்தில் இருந்து ௨௦கிமி தூரத்தில் உள்ளது.

திருக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது தேரோடும் பெரு வீதிகள் நான்கும் அமைந்துள்ளன. நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. மேலவீதி ‘இராசகம்பீரன் திருவீதி’ எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
,
மேற்கு நோக்கிய இறைவன் மேற்கில் ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. இறைவனுக்கு வலது புறம் இறைவி கிழக்கு நோக்கியுள்ளார்

 ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் இறைவன்  அருள் கிடைப்பது நிச்சயம்.

இறைவன்- அருணஜடேசுவர சுவாமி (தாலவனேஸ்வரர், செஞ்சடையப்பர், ஜடாதரர்).
இறைவி-  பெரிய நாயகி.
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்.
தலவிருட்சம் : பனை.
இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர்.  இத்தலத்தில் தாடகை என்னும் பெண் புத்திரப் பேறு வேண்டி பெருமானை வழிபட்டு வந்தாள்.  ஒருநாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது மேலாடை நெகிழ அதனை இருமுழங்கைகளாலும் பற்றிக் கொண்டு மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார்
சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.

தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். மனதுடைந்துபோனான்.

யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. மன்னன். துவண்டு திரும்பினான்.

தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகார பலத்திற்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது.

இதே காலத்தில் குங்கிலியக்கலயநாயனார் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார்.

திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்து  குங்கிலியத் புகையினை இட்டு தொண்டு செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு இணங்கும் அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.

நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு சரமாலையை சிவனுக்கு அணிவித்தார். எதிர்ப்புறத்தில் நின்று மறுமுனையை தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.

நிமிராவிட்டால் கயிறு இறுகி குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். அவருடைய அன்பு சிவனை அசைய வைத்தது. அடியவருக்காக மெல்ல நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.

 நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு  பாசத்தாலே

திண்ணிய தொண்டர் கூடி இளைத்த  பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு  கண்டபோதே

அண்ணலார் நேரே நின்றார் அமரரும்  விசும்பில் ஆர்த்தார்

- என்பது பெரிய புராணம்.

அன்புக்காக எதையும் செய்வார் சிவன்  அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.

இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது.
. முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர்? என்றப் போட்டி எழுந்தது.  அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார்.  ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை.
மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.  ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார்.  இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார்.  பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார்.  ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார்.  பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.
அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார்.  இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது.  பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது.  திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.
சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.

.  இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.  இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும்.  இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  தல மரமாக பனை உள்ளது.  பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன.
 

இக்கோயிலுக்கு நன்செய் புன்செய் என ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.

 இத்திருக்கோயிலைக் கட்டியவன்  திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது
சிவபெருமானை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. அதில் திருப்பனந்தாளும் ஒன்று

திருப்பனந்தாளில் காசி மடம் அமைத்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு பகுதியில் இம்மடம் உள்ளது. பல சிறப்புகள் கொண்டகாசி அதிபரையும் தரிசித்து செல்லலாம்.


கருத்துகள் இல்லை: