திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 27

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 27



=======
ஸ்ரீரங்க வைஷ்ணவர்கள் காஞ்சி புரத்தில் தங்கியிருக்கும் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
========
வாழியெதிராசன் வாழியெதிராசன்

 ஸ்ரீரங்கத்தின் பெருமை

எல்லா வைஷ்ணவ அடியார்களும், ஆச்சாரியார்களும் அவதரிப்பது தொண்டை மண்டலமான காஞ்சி நகரிலே. ஆனால், அனைவரும் வந்து சேரும் இடம் ஸ்ரீரங்கத்தில்தான்.

வேதாந்த தேசிகன், 3 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் என அனைவரையும் பெற்றுக் கொடுத்தது தொண்டை மண்டலம் தான். அனைவரும் வந்து சேர்ந்தது ஸ்ரீரங்கத்திற்கு.

இப்போது திருவரங்கனாதனான அரங்கநாதப் பெருமாளே திருவுள்ளத்தில் கொள்கிறார், 'இனி நாம் இராமானுஜனை சம்பிரதாயத்திற்காக ஆக்கிவிட வேண்டும். அவருக்குத் தலைமை பொறுப்பை அலங்கரிக்கும்படி செய்ய வேண்டும்' என்று திருவுளம் கொண்டார். எல்லா ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களும், ஆச்சார்யார்களும் அரங்கரநாதனிடம் இராமானுஜர் ஸ்ரீரங்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள் அல்லவா?

திருவரங்கநாதன் அருகில் இருப்போரை அழைக்கிறார். அவர்கள் நம்பெருமாள் சன்னிதிக்கு சென்று, "இராமானுஜரை இங்கே நித்தியவாசம் பண்ணும்படி அழைப்பித்தருளவேண்டும்" என்று விண்ணப்பம் செய்தனர். பெரிய பெருமாளும் அப்போதே ஓலைச்சுவடியில் காஞ்சிபுரம் பேரருளாளனுக்கு திருமுகம் அனுப்புகிறார்.

(என்ன ஒரு திருவிளையாடல் பரந்தாமனுக்கு. திருவரங்கம் அரங்கநாதன், காஞ்சி தேவப்பெருமாளுக்கு ஓலைச்சுவடி அனுப்புவது. இவரும் அவர் அம்சம் தான். அவரும் இவர் அம்சம் தான். இராமானுஜரை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிராதாயத்திற்கு ஆக்கிக்கொடுக்க இருவருமே எப்பேர்ப்பட்ட நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் ).

 பேரருளாளன் மறுத்தல்

பேரருளாளனும் கேட்டருளி, "தன் அபிமானத்தை விட்டு கேட்டாலன்றி இராமானுஜரை அனுப்ப மாட்டோம்"  என்றார். "அந்த அளவிற்கு இராமானுஜர் எனக்கு அவ்வளவு நெருக்கம். ஆனால், அவரை விட்டுக் கொடுப்பதாக இல்லை. 'நான்' என்ற வார்த்தையை என்று மாற்றுகிறீரோ அன்று நாம் இராமானுஜரை அனுப்புவோம்" என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு ஓலை அனுப்பினார்.

🌺🌹 திருவரங்கப்பெருமாள் அரையர்

தேவப்பெருமாள் மறுத்ததை அறிந்த ஆழ்வார், திருவரங்கப் பெருமாள் அரையரை அழைத்தார். "நீர் போய் (காதிற்குள் இரகசியமாக பேசினார்) இராமானுஜரை திருவரங்கம் அழைத்துக்கொண்டு வாரும்" என்றார்.

திருவரங்கப் பெருமாளரையர் ஆளவந்தார் சீடர்களில் ஒருவர். அவர் மிகப்பெரிய இசை வல்லுநர். அவர் காஞ்சிக்குச் சென்று இசைமாரி பொழிந்தால், இசைக்காக எதையும் தரவல்ல காஞ்சி வரதராஜப்பெருமாள் இராமானுஜரைத் திருவரங்கத்திற்குத் தந்துவிடுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.

திருவரங்கப் பெருமாளரையர் காஞ்சியை அடைந்ததும் பேரருளாளன் திருக்கோவிலுக்குச் சென்றார். அங்கு இராமானுஜரும் பலரும் இருந்தார்கள். திருக்கச்சி நம்பிகளும் 'கச்சித்து வாய்த்தான்' திருமண்டபத்தில் ஆலவட்டம் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். காஞ்சி திருக்கச்சி நம்பிகள் அருளிய வரதராஜர் அஷ்டகத்தை அனுஷ்டித்துக் கொண்டு சேவிக்கிறார் இராமானுஜர்.

பெருமாளரையர் வருவதை எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறார் திருக்கச்சி நம்பிகள். மூலவரின் சன்னிதினானத்திற்கு அழைத்துச் சென்றார். திருவரங்கப் பெருமாளரையரும் தாளம் இசைத்து ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

 பேரருளாளன் காட்சி தருதல்

"என் நெஞ்சமுடையான்..." என்று தொடங்கி, "உலகமேத்தும் ஆழியான் அத்தியூரான்" என்றும், "திருவடி தாமரை மலரும் பேரருளாளன்" என ஆழ்வார்கள் பாடிய பாடல்களான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் சில பாடல்களை இயல், இசை, நாடகத்துடன் முத்தமிழோடு அரையர் அபிநயம் பிடித்துப் பாடினார்.

அப்போது காஞ்சி பேரருளாளன் நேரே உகந்தருளி தான் சாற்றியிருந்த முத்துமாலை, திருப்பரிவட்டமான தன் வஸ்திரம், சக்கர சாமராதி மற்றுமுள்ள பரிசில்களையும் கொடுத்தார்.

அப்போது திருவரங்கம் பெருமளரையார் மறுப்பு சொல்கிறார், "இதைப் பிரார்த்தித்து பெற அடியேன் வரவேயில்லை. நான் எதைப் பிரார்த்திக்கிறேனோ அதைக் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள்" என்றார். அக்காலத்தில் எம்பெருமானிடமே எப்படியெல்லாம் நேருக்கு நேர் வாதாடி பேசியிருக்கிறார்கள்?!

ஜகம் அத்தனையும் காத்து இரட்சித்து உலகத்தையே நடத்துபவர் பெருமாள். அவரிடத்திலே போய், 'நான் ஆசைப்பட்டதை கொடு' என்றார். தேவப்பெருமாளோ "என்ன ஆசைப்பட்டீர்?" சொல்லும் என்றார்.

"நாமும் என் பெண்டீரைத் தவிர மற்ற அனைத்தையும் கேளும்" என்கிறார் தேவப்பெருமாள். நாம் என்றால் - என்னைக் கேட்காதீர். எம் பெண்டீர் - பெருந்தேவித்தாயார் அவரையும் கேட்காதீர். மற்ற அனைத்தும் தருகிறோம். நீர் கேளும்! என்றார் தேவப்பெருமாள்.

இந்த வார்த்தைக்குத் தானே காத்துக் கொண்டிருந்தார் நம் அரையர். பெருமாளும் எங்கள் இருவரைத் தவிர மற்ற அனைத்தையும் தருகிறேன் வேறு சொல்லிவிட்டார். வசதியாகப் போயிற்று, நம் அரையருக்கு. அவர் தேவப்பெருமாளிடம் அங்கிருக்கும் இராமானுஜரைக் கைகாட்டி, "இவரை எனக்குத் தந்தருள வேண்டும்" என்கிறார்.

இதைக்கேட்ட தேவப்பெருமாள் "நீர் இவரைக் கேட்பீர் என்று தெரியாமல் சொல்லிவிட்டேனே! முதல் தடவையா நான் மாற்றிப் பேசுகிறேன், நம்மையும், நம்பெண்டீரையும், நம் இராமானுஜரையும் தவிர மற்ற அனைத்தையும் கேளும் நாம் தருகிறோம்" என்றார் தேவப்பெருமாள்.

அரையரோ "தேவரீர் இரண்டு வார்த்தை அருளிச் சொல்லலாமோ? நானோ ஒரு வார்த்தை தான் பேசினேன். தேவரீரும் ஒரு வார்த்தைதான் பேச வேண்டும்" என்றார்.

காஞ்சி தேவப்பெருமாளும் "சரி, நீர் கேட்டபடி நம் இராமானுஜரை அனுப்பி வைத்தோம்! நீர் அழைத்துச் செல்லலாம்" என்றார். ஒரே ஒரு பெண்ணை பெற்று, சீரும் சிறப்புமாய் வளர்ப்பதைப் போல் இராமானுஜரை வளர்த்து, இப்போது அழகிய மணவாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அழகிய மணவாளன் என்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதன் உற்சவரின் திருநாமம். திருவரங்கப் பெருமாளரையருக்கோ மகிழ்ச்சி.

இராமானுஜரோ பிறந்தகத்தில் இருந்து சொல்லிக் கொண்டு புறப்படுவது போல், கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் பார்த்தருளி, அவர்களையும் அழைத்துக் கொண்டு, மடத்திற்குச் செல்லாமல் (தேவப்பெருமாள், 'திருவரங்கம் போ!' என்று உத்தரவிட்டுள்ளார் அல்லவா?) திருவரங்கம் புறப்படுகிறார்.

திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரை வழி அனுப்பி வைத்துவிட்டு, கைங்கர்யத்திற்குப் புறப்பட்டார். இராமானுஜரும் திருவரங்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.

பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்.
எதிராஜரின் திருவரங்கப் பிரவேசம்
இராமானுஜர் துறவு பூண்ட விஷயம் கேள்விப்பட்டு பெரிய நம்பிகள் திருவரங்கத்தில் இருந்தபடி உள்ளம் பூரித்தார். அவதார புருஷர் என்று ஆளவந்தாராலேயே மதிக்கப்பட்ட எதிராஜரை திருவரங்கத்துக்கு அழைத்து வர மடத்தில் உள்ள அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். அந்தப் பொறுப்பும் பெரிய நம்பியிடமே ஒப்படைக்கப் பட்டது. போன முறை மனைவிகளின் பிணக்கினால் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முடியாமல் போனது. அதனால் இந்த முறை தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற அரங்கனின் அருளை வேண்டினார் பெரிய நம்பி. உள்ளம் உருகி வேண்டி நின்ற பெரிய நம்பியின் செவியில் படுமாறு ஒரு யோசனையைக் கூறினார் அரங்கன். “தெய்வீக இசையில் வல்லவர் உன் மகன் திருவரங்கப் பெருமாள் அரையர். அவரை காஞ்சிக்கு அனுப்பி வைப்பாயாக. கச்சிப் பெருமான் முன் நின்று இச்சையுடன் அரையரைப் பாடச் சொல். அப்பாட்டுக்கு மயங்கி வரதன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்பார், எதிராஜரே வேண்டும் என்று உறுதியுடன் கேட்கச் சொல். பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்” என்று அருளினார்.
அவ்வாறே நிகழ்ந்தது. மனமுருகிப் பாடியதும் என்ன வேண்டும் கேள் என வரதன் சொல்ல, எதிராஜரைப் பரிசாகத் தரவேண்டும் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் பிரார்த்தித்தார். அருளிச் செயல்களில் பித்தரான வரதரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எதிராஜரை திருவரங்கத்துக்கு அனுப்ப உடன்பட்டார். எதிராஜரும் வரதனைப் பிரிய மனமின்றி ஆனால் தன் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டுத் திருவரங்கம் கிளம்பினார்.
முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும் பின் தொடர எதிராஜர் திருவரங்கம் வந்தடைந்தார். திருவரங்கமே இவரை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருந்தது. பெரிய நம்பிகளின் தலைமையில் எதிராஜருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது. எதிராஜர் திருவரங்கப் பெருமாள் சன்னதிக்குள் சென்று அரங்கனை கண் குளிரக் கண்டு வணங்கினார். “வாரீர் எம் உடையவரே” என்று வாழ்த்தி வரவேற்றார் திருவரங்கப் பெருமான். அன்று முதல் இராமானுஜருக்கு உடையவர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.
பெரிய நம்பிகள் இவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். இராமானுஜரும் அவரின் தொடர்பினால் தான் தனக்கு அரங்கனுக்கு சேவை செய்யும் பேறு கிடைத்தது என்று நன்றி நவின்றார்.


இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

கருத்துகள் இல்லை: