திங்கள், 12 அக்டோபர், 2020

நமஸ்கார ஸ்லோகம்

நமஸ்கார ஸ்லோகங்கள்!

இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும்  சொல்லலாம்.

1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.

3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4. யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

இங்கே தூங்குவதைக் குறித்துக் கூடத் தேவியா என எண்ணினால் ஆம், தேவியே தான். அநேகமாய் நித்திராதேவி ஆக்கிரமித்துக் கொண்டாள் என பல எழுத்தாளர்களும் தூங்குவதைக் குறிப்பிட்டு எழுதுவதைக் கண்டிருக்கின்றோம் அல்லவா?? அந்த நித்திரையும் சாமானியமாய் மனிதருக்கு வந்து விடுகின்றதா என்ன??? எல்லாருமேவா நன்றாய்த் தூங்கி விழிக்கின்றார்கள்?? இல்லையே! பலருக்குத் தூக்கமே வருவதில்லை அல்லவா?? அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக உறையும் தேவியை தினமும் இரவில் நினைத்து நமஸ்கரித்து அனைத்தையும் அவள் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்துப் படுத்தால் தேவி தூக்க வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5. யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம!

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும், ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா?? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருக்க வேண்டும் அல்லவா? பஞ்ச பட்ச பரமான்னமாகவே இருந்தாலும் பசி இல்லை எனில் சாப்பிட மாட்டோம். இந்த உலகில் எதுவும் போதும் என்றே நாம் சொல்ல மாட்டோம். உடையா, இன்னும் வேண்டும். ஒரு நேரத்துக்கு நாம் உடுத்துவது என்னமோ ஒரு உடைதான். நகையா இன்னும் வேண்டும், வீடா, இன்னும் பெரியதாய், பணம், காசா, எத்தனை இருந்தாலும் போதலை. ஆனால் ஒருவரைக் கூப்பிட்டு சாப்பாடு மட்டும் போட்டுவிட்டால் அவர் இன்னும் வேண்டும் என்று சொல்ல மாட்டார். வயிறு நிறைந்துவிட்டது போதும் என்றே சொல்லுவார். ஆகவே போதும் என மனிதரைச் சொல்ல வைக்கும் அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி இருத்தலே நல்லது. அந்தப் பசி வடிவான தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6. யா தேவி ஸர்வ பூதேஷூ ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7. யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8. யா தேவி ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை, அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசை மட்டுமே. ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளாகவே இங்கே வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

9. யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

10. யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.


கருத்துகள் இல்லை: