திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 24

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 24




இரண்டு சீடர்கள் இல்லாமல் இராமானுஜர் இருந்ததில்லை. அவர்கள் யார்?

 இரண்டு சீடர்கள்

இரண்டு சீடர்களில் ஒருவர் கூரத்தாழ்வான் மற்றொருவர் முதலியாண்டான். இவர்கள் தண்டம், பவித்ரத்தைப் போலே. முதலியாண்டான் இராமானுஜரின் தண்டம், கூரத்தாழ்வான் இராமானுஜரின் பவித்ரம் என்றும் அழைக்கப் பெறுவார்கள். எப்படி திரிதண்டத்தை விட்டுட மாட்டாரோ, கையில் போட்டிருக்கும் பவித்ரத்தை விட்டுட மாட்டாரோ அந்த ஸ்தானத்தில் தான் இராமானுஜருக்கு இவர்கள் இருவரும் இருந்தார்கள். நாம் எந்தக் கோவில் சென்றாலும் சித்திர ரூபத்தில் பார்த்தால் கூட முதலியாண்டான், இராமானுஜர் நடுவில், கூரத்தாழ்வார் இருப்பார்கள்.

முதலியாண்டான் 1027ல் பிறந்தவர். சித்திரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். கூரத்தாழ்வான் இராமானுஜருக்கு முன்பாகவே 1009லேயே, தை மாதம் அஸ்தம் நட்சத்தில் திருஅவதாரம் பண்ணியவர்.

கூரத்தாழ்வானுக்கு 'ஹரீத குலதிலகர்' என்பது பேரு. முதலியாண்டானுக்கு 'தாசரதி' 'வாஹீத குலதிலகர்' என்பது திருநாமம். இப்படி இருவரும் அருகிலேயே இருந்தார்கள். கூரத்தாழ்வானுக்கு காஞ்சிபுரத்தின் அருகிலுள்ள 'கூரம்' என்ற ஊர்; முதலியாண்டானுக்கு காஞ்சிபுரம். முதலியாண்டான் இராமானுஜரின் அக்கா மகன், இராமானுஜருக்கு மருமகன்.

இவர்கள் இருவரும் சுவாமி இராமானுஜரை ஆச்சாரியாக ஏற்க வந்தார்கள்.

🌺🌻 கூரத்தாழ்வான்

காஞ்சிபுரத்தில் அரக்கோணம் அருகில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் பெயர் கூரேசர். நல்ல ஞானமும், ஒழுக்கமும் நிறைந்தவர். நித்யப்படி தினமும் 1000 பேருக்கு அன்னதானம் நடக்கும் கூரேசர் வீட்டில். அவர் வீட்டின் திருமாளிகை எவ்வளவு பெரியது என்றால்  இரவு வாசற்கதவை சாற்றுவார்கள், அதில் பொருத்தியிருக்கும் மணிகள் எல்லாம் 'சடார்' என்று சத்தம் போடுமாம்.

அந்தச் சந்தம் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் பெருந்தேவித்தாயார் காதில் விழுந்ததாம். அதைக்கேட்ட பெருந்தேவித்தாயார் தேவப்பெருமாளைப் பார்த்து "யாருடைய மணிச்சத்தமோ கேட்கிறதே?! யாரோ பெரிய பணக்காரர்கள் இருப்பார்கள் போலே!" அத்தனை பணத்திற்கு தேவதையே பிராட்டியார் தான். ஆனால், அவரோ பெரிய பணக்காரரா இருப்பார் போலே?! என்று கேட்கிறார் எனில், அவர் எத்தனை செல்வந்தராக இருந்திருப்பார்?

இதைக்கேட்டது தான் தாமதம், உடனே தேவப்பெருமாள் திருவுளத்தில் ஏற்றுக்கொண்டார். 'அப்போ அதெல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்' என்று.

தவறாக நினைக்க வேண்டாம்! சுவாமியின் கணக்கு வேறு.

யாரை அனுக்கிரகிக்க வேண்டும் என்று சுவாமி ஆசைப்படுறாரோ, முதலில் அவர்களின் பணத்தை வாங்கிடுவார். செல்வம் இருக்கிறவன் பகவானிடத்தில் வரமாட்டான். அதை வாங்கிவிட்டால் தான் அவனுக்கு பகவான் ஞாபகமே வரும். அப்போதுதான் பகவானிடத்தில் வருவான்.

இனி, 'கூரத்தாழ்வானுக்கு நிலையில்லாத செல்வத்தை நீக்கி, நிலையான செல்வத்தை நாம் அவருக்குக் கொடுப்போம்' என்று திருவுளம் கொண்டார்கள் தேவப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும்.

தேவப்பெருமாள் திருவுளத்தை அறிந்த கூரத்தாழ்வான், இனி சகல ஐஸ்வர்யங்களையும் துறந்து இராமானுஜரின் திருவடி தரிசனம் பெறுவோம் என்று தன் தர்மபத்தினி ஆண்டாளை அழைத்துக் கொண்டு, காட்டு மார்க்கமாக புறப்பட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும்?

இன்னும் அனுபவிப்போம்...

வாழியெதிராசன் வாழியெதிராசன்

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏

கருத்துகள் இல்லை: