திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 23

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 23

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனி காணலாம்.

🌺🌻 கோவிந்தனை சிஷ்யனாக அழைத்தல்

தம்மைச் சுற்றி உற்சாகமும் நம்பிக்கையும் கொண்ட ஒரு சிஷ்ய பரம்பரையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் இராமானுஜர். மக்களிடையே இச்சமயம் பரவ வேண்டுமானால் தீவிரமான பிரச்சாரம் தேவை. இதற்கு ஓர் இயக்கம் வேண்டும். அதுமட்டுமல்லாது ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுவதற்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே, இந்த பணியில் பலரைச் செயல்படுத்த முனைந்தார்.

அவரது சிற்றன்னையின் மைந்தன் கோவிந்தனின் நினைவு வந்தது. ஆனால், அவர் காளஹஸ்தியில் தங்கி அத்வைத மதத்தைத் தழுவியுள்ளார். அவர் அத்வைதமதம் தழுவ காரணம் என்னவென்றால், யாதவப் பிரகாசர் இராமானுஜரை கொல்லத் திட்டம் போட்டு கங்கை யாத்திரைக்கு சென்றார்கள் அல்லவா?  

கோவிந்தன் கங்கையில் குளிக்கும் பொழுது அவரது கையில் சிவலிங்கம் கிடைத்தது. அதை இறையருள் காரணமாக ஏற்றுக் கொண்ட அவர் காளஹஸ்திக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

இவரைத்தான் இப்பொழுது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்குள் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் இராமானுஜர்.

🌻🌺 பெரியதிருமலை நம்பிகளிடம் சொல்வது

இராமானுஜர் இரண்டு சீடர்களை அழைத்தார். அவர்களை திருமலை சென்று அங்கே இறைவனுக்கு கைங்கரியம் செய்யும் தன் தாய்மாமனான பெரியதிருமலை நம்பிகளிடம் கோவிந்தனைத் தாங்கள் திருத்தி அழைத்துவர வேண்டும் என்று கூறும்படிச் சொன்னார்.

சீடர்கள் திருமலை சென்றார்கள். பெரியதிருமலை நம்பிகளைக் கண்டு வணங்கி இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சன்னியாசம் ஏற்று மடத்தின் பொறுப்பில் இருக்கிறார். அவர் கோவிந்தரை திருத்தி ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தினராக ஆக்குவதற்கு, நீங்கள் தான் கோவிந்தரை சந்தித்து அவருக்கு மனமாற்றம் ஏற்படுத்தி, இராமானுஜரிடம் அனுப்பிவைக்க வேண்டும் என்றனர். பெரியதிருமலை நம்பிகளும் அதற்கு சம்மதித்தார்.

அதன்பின் இருவர் இராமானுஜரின் சீடராக வந்து சேர்ந்தனர். அவர்களை விட்டு இன்று வரையும் இராமானுஜர் பிரிந்ததில்லை. அவர்கள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


கருத்துகள் இல்லை: