திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 29

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 29

திருக்கைத்தல சேவையுடன் பெரிய பெருமாள்,  இராமானுஜரை எதிர்கொள்வதும், இராமானுஜர் பெரியபெருமாளைக் கண்டு தரிசிக்கும் நிகழ்வையும் இன்று அறியலாம்.

 

வாழி எதிராஜன்!..
வாழி எம்பெருமானார்!..

சொல்லுவோம் அவன் நாமங்களே..

திருக்கைத்தல சேவை

ஸ்ரீமந்நாராயணனான நம்பெருமாள் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்தருளுவது போல திருக்கைத்தல சேவையில் எழுந்தருளி புறப்பட்டு இராமானுஜர் எதிரே வந்தார். யாருக்கும், எந்த ஜென்மத்திலும் அவ்வளவு எளிதில் கிட்டாத பாக்கியம் இராமானுஜருக்குக் கிடைத்திருக்கிறது. இராமானுஜர் உள்ளே வருகிறார். இராமானுஜர் உள்ளே வரும் பொழுது மூன்று அர்ச்சகர்களை நம்பெருமாள் பெரிய பெருமாள் அழைத்தார்.

'எப்பொழுது இராமானுஜர் நம் இராஜ்யத்தினை ஏற்றுக்கொள்ள வந்தாரோ, நாம் அவரை முன்னின்று வரவேற்க வேண்டும்' என்று தான் திருக்கைத்தலத்திலிருந்து வெளியே புறப்பட்டருளினார்.

திருக்கைத்தல சேவை என்பது மூன்று அர்ச்சகர்கள் உற்சவர் அழகியமணவாளனை கைகளால் தாங்குவதாகும். ஒருவர் தன் மார்பில் பிடித்துக்கொள்ள, வலதுபக்கம் ஒருவரும், இடதுபக்கம் ஒருவருமாக பெருமாளைத் தாங்குவார்கள்.

தோளுக்கிணியானும் கிடையாது. பல்லக்கும் கிடையாது. இன்றும் திருக்கைத்தல சேவை சில நாட்கள் நாம் சேவிக்கலாம். வைகுண்ட ஏகாதசி அன்று இராப்பத்து கடைசி நாள் சேவையில் நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும் பொழுது திருக்கைத்தல சேவை நடைபெறும். இங்கே தேவ தேவனான எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வருவதை நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. இராமானுஜருக்காக எம்பெருமான் பல்லக்கு முதலியவற்றைத் துறந்து, தானே எதிர்கொள்ள வந்தார்.

இப்போது நடக்கும் நிகழ்வினால் தான் இராமானுஜர் உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சாரியானாகி, ஜகத்திலுள்ள அத்துனை பேருக்கும் மோட்சம் கொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.

🌺🌹 தரிசனம்

எத்தனையோ ஆச்சாரியார்கள் இருந்திருக்கலாம். ஆனால், யாரும் மோட்சம் கொடுக்கப் போவதில்லை. இப்பொழுது அப்பேர்பட்ட பாக்கியம் நடக்கப்போகிறது.

பெரிய பெருமாளை இராமானுஜர் தரிசிக்க, திருப்பாணாழ்வாருக்கு எப்படி தன் திவ்வியத் திருமேனியைக் காட்டினாரோ பெரிய பெருமாள்,  அதேபோல் இராமானுஜருக்கும் காட்டினார். இராமானுஜரும் பாதகமலங்கள் முதல், எம்பெருமானின் ஆடை, நான்முகன், பகவானின் திருமார்பில் அமர்ந்திருக்கக்கூடிய பிராட்டியாரைச் சேவித்தார், கழுத்தினைச் சேவித்தார், உலகத்திற்கே சர்வ ஸ்லோகங்களை அளித்த திருவாயினைச் சேவித்துக் கொண்டார். தன் ஈரப்பார்வையால் உலகத்தையே இரட்சிக்கக்கூடிய திருக்கண்களைச் சேவித்துக் கொண்டார், பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சேவித்துக் கொண்டார்.

இராமானுஜர் பெரிய பெருமாளைச் சேவிக்கவும், பெரிய பெருமாளுக்கும் ஆசை ஏற்பட்டு சடகோப பிரசாத மரியாதை எல்லாவற்றையும் இராமானுருஜக்குக் கொடுத்தார். "இதோ நம் திருவடித் தாமரைகளை உமது தலைக்கு அணிய அணிவிக்கிறோம்" என்று ஸ்ரீசடகோப பிரசாத மரியாதையைக் கொடுத்து, மாலைப் பரிவட்டங்களையும் கொடுத்த பின்பு பெரிய பெருமாளான அரங்கநாதப் பெருமாள் சொல்கிறார்.

🌺🍁 அரங்கன் திருவாய் மலர்ந்தருளியது

"நமக்கு இரண்டு விபூதி சொத்தாக இருக்கிறது". அது என்ன என்றால், ஸ்ரீரங்கநாதன் எப்போ புறப்பாடு என்றாலும் அவருக்குப் பின் எப்பொழுதும் செங்கோல் இருக்கும். செங்கோல் என்றால் நீளமான தங்கக் கோல். அதைக் கையில் பிடித்துத்தான் சக்கரவர்த்தித் திருமகன் போலே, உலகம் அத்துணையும் பெருமாள் ஆள்கிறார். ஆண்டாள் நாச்சியார் கூட ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார். 'பூலோகம், விண்ணுலகம் அத்துணையும் ஆளும் எம்பெருமான் செங்கோலுடைய திருவளர்செல்வன் அரங்கன்'. செங்கோலானது சுவாமி புறப்பாட்டின் பொழுது உற்சவரிடம் இருக்கும். புறப்பாடு முடிந்ததும் உற்சவர் உள்ளே வந்துவிட்டால், செங்கோல் பெரிய பெருமாளுடைய மூலஸ்தானத்தில் வைத்து விடுவார்கள். மூலவர் அரங்கநாதப் பெருமாளின் கீழ் செங்கோலை வைத்து விடுவார்கள்.

அதனால்தான் அரங்கநாதப்பெருமாளை "ரங்கராஜா, ரங்கராஜா" என்று அழைக்கிறோம். இந்த செங்கோலுக்குப் பெயர்தான் 'உடைய விபூதி'. "'லீலா விபூதி'யும் 'உடைய விபூதி'யும் பெரிய பெருமாளுடையது. இப்பொழுது இந்த இரண்டையும் கொடுத்து உமக்கு ஒரு பெருமை சேர்க்கப் போகிறோம். இந்தாரும், பெற்றுக்கொள்ளும்" என்று இரண்டு விபூதியையும் எடுத்து இராமானுஜரின் கையில் கொடுத்து இனி, "உடைய விபூதியும், லீலா விபூதியும் உம்சொத்து. நீர் பார்த்து யாருக்கு மோட்சம் கொடுக்கின்றீரோ, அவருக்கு அவசியம் ஸ்ரீ வைகுண்டத்திலேயே இடத்தைக் கொடுத்து விடுவோம்".

"நீர் இரண்டு விபூதியையும் உடையவராய் இருப்பதனால் உமக்கு "உடையவர்" என்கிற பெயரைச் சூட்டினோம்!" என்று பெரிய பெருமாள் அறிவித்தார்.

1. இராமானுஜரின் முதல் பெயரான 'இளையாழ்வான்' பெரிய திருமலை நம்பிகள் சாற்றியது என்று பார்த்தோம்.

2. இரண்டாவது பெயரான 'இராமானுஜ முனி' தேவப்பெருமாள் சாற்றியது என்று பார்த்தோம்.

3. மூன்றாவதான "உடையவர்" என்னும் திருநாமம் பெரிய பெருமாளான அரங்கநாதப் பெருமாளே கொடுக்கிறார்.

நம் அத்துணை பேரையும் உடையவர் பெருமாளையே உடையவர். உடைய விபூதியையும் உடையவர். அவரை விரும்புவருக்கு தன்னையே உடையவராக ஆக்கக்கூடியவர் இராமானுஜர். இராமானுஜர் பெரிய பெருமாளிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டார்.

"இவை அத்தனையையும் இராமானுஜரான உமக்கு மட்டும் கொடுக்கவில்லை. உமக்கும், உம் உடையாருக்கும் கொடுத்தோம்" என்றார் பெரிய பெருமாள். நாம் யாரெல்லாம் இராமானுஜர் சம்பந்தம் பெற்றோம் என்று சொல்லிக் கொள்கிறோமோ, நம் அனைவருக்கும் மோட்ச சாம்பிராஜ்யத்தைக் கொடுப்பார் 'உடையவர்' இராமானுஜர்.

#திருவாழத் #திருவாழி
    #சங்கம் வாழத்
#திருவனந்தன் #கருடன்
    #சேனையர்கோன் வாழ
#அருள்மாறன் முதலா
     #மாழ்வார்கள் வாழ
அளவில்குணத் #தெதிராசன்
     #அடியார் வாழ
இருநாலு #திருவெழுத்தின்
      ஏற்றம் வாழ
#ஏழுலகும் #நான்மறையும்
      இனிது வாழப்
பெருவாழ்வு தந்தருள்
      #நம்பெருமாள் எங்கள்
பெரியபெருமாள்
      #அரங்கர் ஆடிர் #ஊசல்

#அஷ்டப்பிரபந்தம்
#பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்


இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏


கருத்துகள் இல்லை: