செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சீதை ராமனுக்கு கூறிய மூன்று விதமான பாவங்கள்!

ஒரு கணவன் கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு பிறருடன் அனாவசியமாக சண்டைப் போட்டால் மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும். மாறாக அவன் தவறு செய்யும் போது அதை அனுமதித்து விட்டு துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. செய்தக்க அல்ல செயக்கெடும் என்பது போலவே செய்தக்க செய்யாமையினும் கெடும் அல்லவா? இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போன போது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி அவர்களைத் தண்டிக்கும் படி கேட்டுக்கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார். பின்னர் சீதாபிராட்டி இதைத் தவறு என்று கருதி அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீ ராமபிரானுக்குச் சொன்னாள். உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது, 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும் அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும் மூன்றாவது தோஷம் ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை.

ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்து விட்டான். தியானம் முடிந்த பின் அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன் படுத்தி தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வரலாறு உண்டு. தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால்  நினைவுபடுத்துகிறேன். எதற்கும் தம்பி லட்சுமணனைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம் என்றாள். இதைக் கேட்ட ராமபிரான் நீ சொல்வது தான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களைத் தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே அவர்களை அழிக்க முற்படுகிறேன் என்றார். இது போல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்த போது வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிரமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம் என்று சொல்லித் தடுத்தும் வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான். அது போலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்த போது மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள். ராமர் பிறந்த இடமான அயோத்தியைச் சுற்றி புராதன பல குளங்கள் உள்ளன. அவை ராமாயணம் சார்ந்த பல கதாபாத்திரங்களை நினைவூட்டுகின்றன.

பிரம்ம குளம் : அயோத்தியின் டெக்ரி பஜாரிலிருந்து ராஜ்காட் செல்லும் பாதையில் பிரம்ம குளம் உள்ளது. பிரம்மா இங்கு தங்கி யாகம் செய்து பலன் பெற்றதாக ஐதீகம். இந்தக் குளம் அருகில் பிரம்மாவுக்குக் கோயில் உள்ளது. இந்தக் குளத்தில் குளித்து பிரம்மாவை தரிசித்து மனமார வேண்டினால் பிரம்மலோகம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

சீதா குளம் : ராமர் காலார நடந்த பகுதியை அசோக வனம் என அழைக்கின்றனர். இதனுள் சீதாகுளம் உள்ளது. இந்தக் குளத்தை உருவாக்கியதே சீதா தான் என்பது நம்பிக்கை. வருடா வருடம் அகர்காயன் கிருஷ்ண சதுர்த்தியிலும், வைகாசி சுக்ல நவமியிலும் இந்தக் குளத்தில் குளித்து சீதையை வணங்கினால் பெண்களின் மனம் போல் வாழ்வு அமையும்.

வசிஷ்டர் குளம் : அயோத்தி நகருக்குள் சக்கர தீர்த்தத்தின் அருகே வசிஷ்டர் குளம் உள்ளது. இதன் அருகில் வசிஷ்டர் தன் மனைவியுடன் வசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குளத்தில் குளித்தால் வசிஷ்டர் போல் ஞானம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் அருகிலேயே வசிஷ்டர் கோயில் உள்ளது. அவருடன் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்ணர், சீதா ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.

தசரத குளம் : பஞ்சகோசி பரிக்கிரமா சாலையில் தசரத குளம் உள்ளது. பத்ரலாத் பூர்ணிமா தினத்தன்று இங்கு நீராடி பக்தர்களுக்கு அன்பளிப்பு வழங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.

ஹனுமான் குளம் : 250 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஹைக்ரீவ் மகராஜ் இந்த பகுதிக்கு வந்த போது இந்த இடத்தில் தங்க இடம் கொடுத்ததுடன் குளமும் வெட்டிக் கொடுத் தாராம். அப்போது கிடைத்த சலவைக்கல்லாலான அழகிய அனுமன் சிலையை குளத்தின் அருகிலேயே நிறுவியுள்ளனர்.

தன்ட்தவான் குளம் : இந்தக் குளத்தில் தான் ராமரும் சகோதரர்களும் அதிகாலையில் நடந்து வந்து பல்தேய்த்து முகம் அலம்புவார்களாம். ஸ்ரீ ராமநவமியன்று இங்கு நீராடினால் ஜன்ம பாபம் விலகும் என நம்புகின்றனர். இந்த இடத்தில் கௌன்டில்ய முனிவர் ஒரு காலத்தில் தவம் செய்து வந்ததாகவும் அப்போது அவர் அமர்ந்து கொள்ளும் மான்தோல் குளத்தில் விழ... அதிலிருந்து உயிருள்ள மான் ஒன்று எழுந்து கரையேறி முனிவரை தரிசித்து விண்ணுலகம் சென்றது.

வித்யா குளம் : அயோத்தி - தர்ஷன் நகர் வழியில் இந்தக் குளம் உள்ளது. இங்கு வித்யா (சரஸ்வதிக்கு) ஆலயம் உள்ளது. அஷ்டமியன்று பக்தர்கள் இக்குளத்தில் குளித்து, சரஸ்வதியை வழிபட்டு சகல பேறுகளும் பெறுகின்றனர்.

விபிஷணன் குளம் : அயோத்தி ராஜ்காட் பாதையில் தபால் நிலையம் அருகே இந்தக் குளம் உள்ளது. இதில் நீராடினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சூர்ய குளம் : அயோத்தியிலிருந்து ஆறாவது கிலோ மீட்டரில் இந்தக் குளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இதில் நீராடி சூரியனை பக்தர்கள் வணங்குகின்றனர். சூரிய வம்சத்தைச் சார்ந்த கோஷ் என்ற மன்னன் இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்த போது அங்கு குளம் போன்று தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தான். அப்போது அவர் உடலில் நீண்டகாலமாக இருந்த தோல் நோய் முற்றிலும் நீங்கியது. பின்னர் அந்தக் குளத்தை புனரமைத்து அருகில் சூரியனுக்கு கோயிலும் கட்டி வைத்தான். இந்தக் குளத்தில் நீராடி, சூரியனை மனமார வேண்டினால் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் மறைந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

ஷோன்கார் குளம் : வைகாசி சுக்லதுவாதசியன்று இந்தக் குளத்தில் நீராடினால் செல்வசெழிப்பு ஏற்பட்டு சுகபோகத்துடன் வாழ்வர் என்பது நம்பிக்கை. இதனால் மாசி மகத்தன்று மாமாங்க குளத்தில் குளிப்பது போல் நம்பிக்கையுடன் நீராடி ராமபிரான் அருளைப் பெறலாம்.
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: