புதன், 28 ஆகஸ்ட், 2019

சதாராவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆந்த்ராவில் பீலேரு என்ற க்ராமத்தில் ஒரு ஸ்கூல் கட்டிடத்தில் பெரியவா தங்கியிருந்தார். அப்போது ஒரு பக்தர் மூன்று பெரியவாளையும் ஒருசேர தர்சனம் பண்ணும் ஆசையில் பீலேரு வந்தார். அவர் வந்த போது பெரியவா ஒரு தட்டி மறைவில் அமர்ந்து கொண்டு ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்..

நாங்க காஸிக்கு யாத்ரையா கெளம்பினவொடனே, மடத்ல இருந்த எல்லாருக்கும் காஸிக்குப் போகணும்ன்னு ஆசை வந்துடுத்து ! காஸி ராஜா அத்தனை நன்னா ஏற்பாடு பண்ணியிருந்தார். சும்மா சொல்லப்...டாது, உபசாரங்களுக்கு கொறைவில்லே! ஆனா என்னாயிடுத்துன்னா...திரும்பி வரச்சே, விசாகப்பட்ணத்ல உக்ராண தட்டுப்பாடு வந்துடுத்து! ஆந்த்ர ஜனங்கள் அங்க இருக்கற வரைக்கும் எங்களுக்கு ஒரு கொறையும் வெக்கலே! ரொம்ப நன்னா கவனிச்சிண்டா. ராமேஸ்வரம் வந்தப்பறந்தான் கஷ்டதசை ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து! மடத்ல இருந்த தங்க சாமானையெல்லாம் வித்தோம்! அப்போல்லாம் சவரன் என்ன வெலை தெரியுமோ? பதினஞ்சு ரூவாய்க்கும் கொறைச்சல். ஆனா, அப்றம் தஞ்சாவூர்க்காரா எல்லாத்தையும் மறுபடி பண்ணிக் குடுத்துட்டா....ஆமா..ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ண தாரா பாத்ரம் ஒண்ணு இருக்குமே? அது இருக்கோ? அது சொக்கத்தங்கம்! தெரியுமோ?...."

"பத்ரமா இருக்கு...." பதவிசாக, அடக்கமாக ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகளின் குரல் ஒலித்தது.

" கும்மோணத்ல ராமஸ்வாமி சாஸ்த்ரிகளை தெரியுமோ?...."

"தெரியுமே!...."

"அவர் இல்லே.....அவரோட பாட்டனாரைப் பத்திச் சொல்றேன். கும்மோண மடத்து சுவர்ல நோட்டீஸே ஓட்டிட்டார்! என்ன ஓட்டினார் தெரியுமா? "இந்த மடத்தை நம்பி கடன் குடுத்துடாதீங்கோ! திரும்பி வராது"...ன்னு" பெரியவா பலமாக சிரிக்கும் சப்தம் கேட்டது. [பெரியவா சிரித்தாலும், இன்றும் நமக்கு இது ஒரு வெட்கக்கேடு! நாமே நம் தலையில் மண்ணையும், சேற்றையும் வாரிப் போட்டுக் கொண்டோம். மஹா அல்பமான பணத்துக்காக மஹா அரிதான பகவானை, மஹான்களை எத்தனை ஈஸியாக கீழ்மைப் படுத்திவிடுகிறோம்!]

"இப்போ மடத்துக்கு பேரும் புகழும் வந்திருக்குன்னா....அது என்னாலதான்..ன்னு நெனைச்சிண்டு இருக்கா. அது அப்டி இல்லே! எல்லாம் கலவைப் பெரியவா குடுத்த பாக்யம்" [உண்மைதான்! கலவைப் பெரியவா குடுத்த மஹா பாக்யம் பெரியவாதானே?]

"நேக்கு ஒண்ணுமே தெரியாது பணத்தைப் பத்தி சுத்தமா எதுவுமே தெரியாது. செக், டிராப்ட் இதெல்லாம் நேக்கு பரிச்யமே இல்லே. பல விஷயங்களை எங்கிட்ட வர்ற பக்தாள்ட்டேர்ந்து துருவித் துருவிக் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். அப்டித் தெரிஞ்சிண்டதை மத்தவாகிட்ட சொல்றதால, என்னைப் பெரிய்...ய "ப்ராக்ஞன்" ன்னு எல்லாரும் நெனைச்சிண்டு இருக்கா...[பெரியவாளின் இந்த வார்த்தைகள், அவர் அமர்ந்திருக்கும் பாணி, அவர் பேசும் தொனி இந்த மூன்றும் சந்தோஷமாக த்யானிப்பதற்கு மிகவும் ரஸமானவை] மடத்துக்குப் பணக்கஷ்டம் வரக்கூடாது! ஊராளாத்துப் பிள்ளையை [பால பெரியவா] அழைச்சிண்டு வந்திருக்கோம்....அவனுக்குப் பணக்கஷ்டம் தெரியாம இருக்கணும்...."

"ஆமா.....வெலவாசி ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து. ஒரு தேங்கா அஞ்சு ரூவா விக்கறது! மடத்துக்குத் தபால் செலவே வர்ஷத்துக்கு ஒரு லக்ஷத்துக்கு மேல ஆறது......" இளைய பெரியவா கூறினார்.

"அதைக் கொறைக்காதே! வெள்ளைக்காரா....அதுலயும் "ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா" க்காரா நம்ம மதத்துக்காக எவ்ளோவ் செலவு பண்றா! எவ்ளோவ் ஒழைக்கறா !..."

"நீங்க எப்டி சொல்றேளோ அப்டியே பண்றேன்..."

பக்தருக்கு புளகாங்கிதமானது. இரண்டு பெரியவாளின் சம்பாஷணையை கேட்கும் பாக்யத்தை பெரியவாளன்றி யாரால் அனுக்ரஹிக்க முடியும்?
-------------------------

கருத்துகள் இல்லை: