புதன், 28 ஆகஸ்ட், 2019

அருள் மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

மூலவர் : தேவி கருமாரியம்மன்
தல விருட்சம் : கருவேல மரம்
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்
ஆகமம் பூஜை  : காமீகம்
பழமை :1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வேலங்காடு
ஊர் : திருவேற்காடு
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:கருமாரியம்மனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஆடி மாதத்தில் இங்கு நடக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில்களில் திருவிழா அதிகபட்சம் 15 நாட்கள் நடக்கும். அரிதாக சில அம்பாள் கோயில்களில் 48 நாட்கள் வரையில் விழா நடத்துவர். ஆனால், இக்கோயிலில் ஆடி முதல் வாரத்தில் துவங்கும் விழா புரட்டாசி மாதம் வரையில் மொத்தம் 12 வாரங்கள் நடக்கிறது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பிகைக்கு 108 குட அபிஷேகம் நடந்து வீதியுலா செல்கிறாள். 9ம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்பாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடாகிறாள். மாசி மகத்தன்று அம்பாள் வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று தீர்த்த நீராடுகிறாள். தை மாதம் பிரம்மோற்ஸவம், சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி, புரட்டாசியில் பெரிய திருவிழா, நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்.  
      
சிறப்பு: இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளை "மரச்சிலை அம்மன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே இவளிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.  
      
திறக்கும் நேரம்:காலை 5மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும். 
நிர்வாக அதிகாரி, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம்.போன்:+91-44-2680 0430, 2680 0487, 2680 1686. 
     
பொது தகவல்:பிரகாரத்தில் உற்சவ அம்பாள் ஊஞ்சலில் காட்சி தருகிறாள். கோயில் முகப்பில் அரசமரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். பால பிரத்யங்கிராவுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு அம்பிகை பால ரூபத்தில், சிம்ம வாகனத்துடன் நின்றிருக்கிறாள். அமாவாசையில் இவளுக்கு மிளகாய் வத்தல் யாகம் நடக்கிறது. நவக்கிரகம், வள்ளி, தெய்வானையுடன் முருகன், சீனிவாசர் பத்மாவதி, ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளது. வைகாசி விசாகத்தன்று சீனிவாசர் கருட சேவை சாதிக்கிறார். தெட்சிணாமூர்த்தி, அங்காள பரமேஸ்வரி, உச்சிஷ்ட கணபதி, காயத்ரி, மகாலட்சுமி, ராஜராஜேஸ்வரி, சாவித்திரி, துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
 
ஸ்தல பெருமை:சுயம்பு அம்பாள்: கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்கு பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். காலையில் கோபூஜை நடக்கிறது. தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை "பதி விளக்கு' என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு. மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.

புற்று சன்னதி: கோயிலுக்கு வெளியில் "திருச்சாம்பல் பொய்கை' தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர். புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார். இவர் வலது கையால் ஆசிர்வதித்து, இடது கையை அபய முத்திரையாக வைத்திருப்பது வித்தியாசமான அம்சம். தேவி கருமாரியம்மனை வழிபடுபவர்கள் இங்கும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். பூட்டு நேர்த்திக்கடன்: கைலாயத்தில் சிவன் திருமணம் நடைபெற்றபோது, தென்திசை வந்த அகத்தியருக்கு, இத்தலத்தில் சிவன் திருமணக்காட்சி கொடுத்தார். இவர், கருமாரியம்மன் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். அகத்தியருக்கு காட்சி தந்த வேற்கன்னி அம்பாள் இக்கோயிலில் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். அருகில் அகத்தியர் வணங்கியபடி இருக்கிறார்.
 
வரலாறு : முற்காலத்தில் இப்பகுதியில் நாக புற்று ஒன்று இருந்தது. இதனை மக்கள் அம்பிகையாக பாவித்து வணங்கி வந்தனர். ஒருசமயம் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, புற்று இருந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி கூறினாள். அதன்படி இங்கு கோயில் எழுப்ப, புற்றை பெயர்த்தனர். அப்போது புற்றின் அடியில் அம்பிகை, சுயம்பு வடிவில் எழுந்தருளியிருந்தாள். பின்பு இங்கு கோயில் கட்டப்பட்டது. அம்பிகை தானாக தோன்றியதால் இவளுக்கு, "கருவில் இல்லாத கருமாரி' என்ற பெயரும் உண்டு.

கருத்துகள் இல்லை: