புதன், 28 ஆகஸ்ட், 2019

ॐசிதம்பர ரகசியம் பகுதி : 19 { மிகவும் முக்கியமான பகுதி }ॐ

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் : சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லா சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப்படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒரு முறை இவருக்கும் அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும் சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப்படுகிறது. எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய் விடுவார்கள் எனறு சொல்லப்படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும் இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும் காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும். அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டு தான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சந்திரசேகரர் : இவரும் சித்சபையின் உள்ளேயே பைரவருக்கு அடுத்து அதே மேற்குத் திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை "நித்யோத்சவ மூர்த்தி" என்று கூறுகிறார்கள். ஏனெனில் நடராஜர் தினமும் அல்லது அடிக்கடி வீதி உலாவோ அல்லது கோவிலின் உள்ளே வரும் உலவோ மேற்கொள்ளுவது இல்லை. ஆண்டுக்கு இரு முறைதான் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வருவார். மற்றச் சமயங்களில் நடராஜருக்குப் பதில் இந்த மூர்த்தியின் திரு உருவம் தான் பிரகாரங்களில் உலா வர எடுத்துச் செல்லப்படும். தீர்த்தவாரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற சமயங்களில் இவர் தான் கோவில் பிரகாரங்களை வலம் வருவார். இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர் பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும் சோமாஸ்கந்த மூர்த்தி ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள். இந்த சோமாஸ்கந்த மூர்த்தி பஞ்சமூர்த்திகளில் ஒருவராய்ச் சொல்லப்படுகிறார். இவர்களைத் தவிர நடராஜரின் பிரதிநிதிகளாய் இன்னும் இருவர் இந்த சித்சபையின் உள்ளே இருக்கிறார்கள். ஒருத்தர் "பலிநாதர்". இவர் ப்ரம்மோத்சவங்களில் நடராஜரின் பிரதிநிதியாக ரதவீதிகளை வலம் வருவதோடு அல்லாமல் (அஷ்டத் திக்பாலகர்கள்) எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் "பலி" விநியோகம் செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இவரை ஹஸ்தராஜா என்றும் அழைக்கிறார்கள். அடுத்த முக்கியமான பிரதிநிதி நடராஜரின் தங்கப் பாதுகைகள் இரண்டு. நடராஜரின் அருகேயே சித்சபையின் உள்ளேயே இவை இடம் பெற்றிருக்கும். நவரத்தினங்கள் பதித்த ஒரு தட்டில் வைக்கப்ப்பட்டிருக்கும் இவை ஒவ்வொரு நாள் இரவும் நடராஜரின் பிரதிநிதியாகக் கடைசி கால பூஜைக்குப் பின்னர் "பள்ளி அறைக்கு" எடுத்துச் செல்லப்படுகிறார். இவர் கால்களில் சூட்டப்படும் பூமாலைக்குக் "குஞ்சிதபாதம்" என்று சொல்லப்ப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம். ॐ

கருத்துகள் இல்லை: