படலம் 83: துலாபாரம் முதலிய பதினாறு தான விதி
83வது படலத்தில் துலா ரோஹ தான விதி கூறப்படுகிறது. முதலில் பிராம்ணர் முதலிய நான்கு வர்ணத்திவர்களுக்கும் விசேஷமாக அரசர்களுக்குமான விஷயத்தில் துலா ரோஹணம் முதலிய 16 தான விதி பற்றி கூறுகிறேன் என்பது நிச்சயமாகும். பிறகு துலாரோஹணம், முதலிய 16 தானங்கள் கிரஹணம் முதலிய காலங்களில் நல்ல இடத்தில் செய்யவும் என்று காலமும், தேசமும் கூறப்படுகிறது. முன்பு துலாரோகணம் முதலிய 16 தான விதியில் சாமான்யமாக மண்டபமோ, பந்தலோ, அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும், வேதிகை, குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. அங்கு மண்டபத்திலோ, பந்தலிலோ, வேதிகை அமைத்து அதன் சுற்றிலும் 9 நாற் கோண குண்டங்களும் அமைக்கவும். இவ்வாறு மண்டப அமைப்பு முறை கூறப்பட்டது. பிறகு தராசு அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. தராசின் தண்டம் முதலிய யோக்யமான வஸ்த்துக்களுக்கு தேவையான மரங்கள் கூறப்படுகின்றன. தராசின் எல்லா உருப்புகளும் ஒரேமரத்தினாலேயோ அல்லது பல மரங்களாலோ இருக்கலாம். பிறகு தராசு அமைத்து மனித உயரம் குழி தோண்டி ஸமமாக பாதசிலையை வைத்து, அதற்கு மேல் தராசு ஸ்தாபித்து, மணல் முதலியவைகளால் கெட்டிப் படுத்தவும் என கூறப்படுகிறது. பிறகு இவ்வாறு எல்லாம் தயார் செய்து சில்பி விசர்ஜனம் செய்து புண்யாக வாசனம் செய்து அலங்காரம் செய்யப்பட்டதும், மங்களாங்குரம் உடையதும், பலவித பழங்களுடன் கூடியதும் முன்பு ஏற்படுத்தப்பட்ட மண்டபத்தில் ஸர்வதோபத்திர மண்டலம் செய்யவும் மண்டபத்தின் 8 திக்கிலும், வச்சிரம் முதல் சூலம் வரையிலான 10 அஸ்திரங்களை வைக்கவும். சூலத்தின் இடப்பாகத்தில் சக்கரத்தையும் தட்சிண பாகத்தில் பத்மத்தையும் ஏற்படுத்தவும் என அறிவிக்கிறார். பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. முதலில் மண்டலத்தின் மத்தியின் இடது பாகத்தில் கவுரியுடன் கூடிய தேவதேவேசனை சந்தன, புஷ்பங்களால் பூஜித்து தெற்குபாகத்தில் பிரம்மாவையும், வடக்குபாகத்தில் விஷ்ணுவையும், சுற்றிலும் திக் பாலகர்களையும் வைத்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு நடுவில் சூர்யனையும், ஆக்னேயத்திலோ, நிருருதியிலோ பாஸ்கரன் வாயுதிக்கில் பானுவையும், ஈசான திக்கில் ரவியையும், நிருருதிதிக்கிலோ, ஆக்னேயதிக்கிலோ திவாகரனை வைத்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பாஸ்கரன் திவாகரன், விஷயத்தில் திசை வேறுபாடாக கூறப்படுகிறது. பிறகு உஷா, பிரபா, பிரக்ஞா, சந்த்யா, சாவித்திரி, இவைகளை மத்ய திக்முதல் ஈசான திக்வரை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது.
நிருருதி திக்கில் விஸ்தாரா, ஆக்னேய திக்கில் சுதாரா வாயுதிக்கில் போதனா, ஈசான திக்கில் ஆப்யாயனி, மத்தியில் சூர்யன் ஆகிய இவர்களை வைத்து பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பிரபூத, விமல, சார, ஆராத்ய முதலிய பெயர் உள்ள ஆசனங்களை கிழக்கு முதல் வடக்கு வரையிலும் மத்தியில் அந்த சூர்யனுடைய பெயரை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தீப்தா, முதலிய 8 சக்திகளும் கிழக்கு முதல் மத்யபாகம் வரையிலாக அர்ச்சித்து பூஜிக்கவும். சந்திரன் முதல் கேது வரையிலான 8 கிரகங்களையும் பூஜிக்கவும் என பூஜை முறை கூறப்பட்டது. பிறகு மந்திரத்துடன் கூறி 9 குண்டங்களிலும் செய்யவேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு மண்டலத்தில் பூஜிக்கப்பட்ட எல்லா தேவர்களையும் குண்டத்தில் பூஜித்து ஹோமம் செய்யவும். பூர்ணாஹுதி, முடித்து அரசர்களின் துலாரோக கிரியையானது அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. பின்பு பரமேஸ்வரனை 1000 கலசங்களாலோ பஞ்சாமிருத பஞ்சகவ்ய, பால் முதலிய திரவ்யங்களாலோ அபிஷேகம் செய்து பிரபூத ஹவிசுடன் கூடிய பெரிய பூஜை செய்ய வேண்டும். பிராம்மணர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். பிறகு துலா ரோஹண கிரியையானது ஆசரிக்கவும் என்று துலாரோஹண விஷயத்தின் நடைமுறை கூறப்படுகிறது. பிறகு துலாரோகவிதி விளக்கப்படுகிறது. பின்பு ஸ்னநாம் செய்தவரும் வெண்மையான வஸ்திரம் சந்தன பூச்சு உடையவரும் எல்லா அணிகலன்களை உடையவரும் வெள்ளைமாலை தரித்தவரும் ரக்ஷõபந்தனம் செய்தவரும் கத்தி, கேடயம் இவைகளை தரித்தவருமான அரசனை கூப்பிட்டு சிவதீர்த்தத்தால், சிவ மந்திரத்தால் அரசனை பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆசார்யன் புண்யாக வாசனம் செய்து பூதசுத்தி முதலாக அங்கந்நியாஸம் கரன்யாசம் செய்து கொண்டு மந்திரத்துடன் வேத கோஷ நாட்டியத்துடனும் சங்கீதத்துடனும் கூடிய அரசனையும் தங்கத்தையும் தராசில் ஏற்றவும் அப்பொழுது எஜமானனாகிய அரசன் ருத்திர காயத்திரி மந்திரம் ஜபிக்கவும் என கூறப்படுகிறது. தராசுவில் ஏற்றப்பட்ட சரீரத்துடன் அந்த தங்கம் எப்பொழுது சம எடையாக ஆகிறதோ அப்பொழுது துலா ரோஹம் செய்வதன் ஆகிறான் என்று அறிவிக்கப்படுகிறது. துலாரோஹண காலத்தில் வஸ்திர, ஸ்வர்ண, பூஷணம் இவைகளால் ஆசார்யனையும், ஹோமம் செய்தவர்களையும் பூஜிக்கவும். அவர்களுக்கு முறைப்படி தட்சிணை கொடுக்கவும் என கூறி தட்சிணை கொடுக்கும் முறை கூறுகிறார். அந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்லா மனிதர்களையும் விடுதலை செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. இந்த துலா ரோஹண விதியானது 16 தான விதிகளில் சாமான்யமாக கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 83வது படல கருத்து சுருக்கமாகும்.
1. அந்தணர் முதலிய நான்கு வர்ணத்தார்களுக்கும் அரசர்களுக்கும் எல்லா விருப்பத்தையும் அளிக்கக் கூடிய பதினாறு தானங்களை கூறுகிறேன்.
2. விசேஷமாக கிரஹணம் முதலிய புண்ய காலங்களில் சுபமான இடத்தில் இருபது கை முழத்திலோ அல்லது பதினாறு கைமுழத்திலோ அல்லது எட்டு கைமுழத்திலோ
3. கொட்டகையோ, மண்டபமோ அமைத்து அதன் நடுவில் ஒன்பது, ஆறு, ஏழு கைமுழத்திலோ இரண்டு முழத்திலிருந்து அரை முழம் வரையிலோ வேதிகையை அமைக்க வேண்டும்.
4. பரப்பு அளவும் உயரமும் உள்ளதாகவும், பன்னிரெண்டு கம்பங்களோடு கூடியதும் வேதிகையும் (அமைத்து அதன் வெளியில்) அதை சுற்றி சதுரஸ்ரமான ஒன்பது குண்டங்களையும் அமைக்க வேண்டும்.
5. நான்கு வாயிற்படி உள்ளதும், நான்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தர்பமாலை களோடு கூடியதும், திசைகளில் கொடிகளை யுடையதாயும்,
6. அஷ்ட மங்களம், விதானம் இவைகளோடு கூடியதுமான மண்டபம் அமைக்க வேண்டும். இங்கு கூறியது துலாபாரத்திற்கும் 16 தானங்களுக்கும் இது பொது (சாமான்யம்) ஆகும்.
7. வில்வம், அரசு, பலாசம் இன்னும் யாகத்திற்கு உபயோகமான மரங்களாலும் பலா, மா, கருங்காலி முதலிய மரங்களாலும் விசேஷமாக துலாதண்டத்திற்கு (தராசிற்கு) கூறப்பட்டுள்ளது.
8. ஒரே மரத்தாலானதும், அல்லது கலந்த மரமானாலும் தோஷமில்லை. பக்கவாட்டிலுள்ள ஸ்தம்பங்கள் ஏழு, ஆறு, ஐந்து கை முழங்கள் உயரமுள்ளனவாக இருக்க வேண்டும்.
9. மேல் உள்ள உத்தரம் ஆறு அல்லது எட்டு முழம் நீளமுள்ளதாக இருக்க வேண்டும். மும்மூன்று அங்குல குறைவாக ஒன்பது விதமாக அளவு கூறப்பட்டுள்ளது.
10. பக்கத்திலுள்ள கம்பங்களின் அகலத்தால் அவைகளின் நீளம் கூறப்பட்டுள்ளது. கால்பங்கு அதிகமானதாக முக்கால் பாகம் உயர்வாகவோ அமைக்க வேண்டும்.
11. தராசின் நீளமானது இரண்டு கரங்கள் அல்லது மூன்று கை முழங்களோடு இருக்க வேண்டும். விஷ்கம்பம் பத்து அங்குலம் இருக்க வேண்டும்.
12. விஸ்தாரம் ஒரு அங்குலம் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வேண்டும். முப்பத்தாறு அங்குலம் அளவுள்ளதாக நீளம் இருக்க வேண்டும்.
13. ஒன்பதங்குலத்தால் அகலமோ அல்லது ஐந்து யவையளவு உள்ளதாகவோ அமைக்கவும். நடுவிலிருக்கும் கம்பத்தின் உயரம் முப்பத்தாறு மாத்ரையளவு உள்ளதாக அமைக்க வேண்டும்.
14. தராசு கம்பத்தின் நுனி அடி, நடு பாகங்களில் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். துலா தண்டத்தில் மூன்று பிடிப்பு (தொங்குகிற) சங்கிலிகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
15. பிடிப்பு சங்கிலிகள் தாமிரத்தாலோ, இரும்பினாலோ இருக்கலாம். நடுவிலும் மேலேயும் பிடிப்பு உள்ள தொங்கும் சங்கிலி அமைக்க வேண்டும்.
16. விட்டத்திற்கு தோரணம் என்ற பெயரும் உண்டு. அதன் நடுவில் கூர்மையான நாக்கு இரும்பினால் செய்யப்பட்ட கூம்பு போன்று இருக்க வேண்டும். அதை அந்த இரும்பு முனையால் நன்கு சேர்க்க வேண்டும்.
17. சேர்க்கப்பட்ட ஆணியையும், வலயத்தையும், ஓட்டையோடும் கூடியதாக இருக்க வேண்டும். ஏழு, எட்டு, ஆறு, நூறு மாத்ரை அளவுள்ளதாகவும் தாம்பிரத்தால் தாங்கும் தட்டு செய்யப்பட வேண்டும்.
18. ஒரு அங்குலம் அளவுள்ள நான்கு துவாரங்களோடு கூடிய நான்கு வளையங்கள் ஒரு முழ சுற்றளவு உள்ளதாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
19. கீழ் உள்ள தட்டுகள் பூமிக்கு மேல் ஓட்டைச் சாண் தூரத்திலோ அல்லது ஆறு அங்குலம், நான்கு அங்குலத்திற்கு மேலோ உள்ளதாக அமைக்க வேண்டும். எவ்வாறு கிழக்கு மேற்கு திசையில் இருக்கும் படியாக இருக்குமோ அவ்வாறு
20. மேலும் இரண்டு கம்பங்களின் நுனி உத்தர (வடக்கு) த்வாரத்தின் அளவு உள்ளதாகவும், நடுவில் கலசம் உள்ளதாகவும் ஏற்படுத்த வேண்டும்.
21. ஆள் உயரம் பூமியை தோண்டி கால்களை ஸமமாக அதில் வைத்து மணல்களால் ஆடாமல் ஸ்திரமாக்க வேண்டும்.
22. இவ்வாறு எல்லாம் செய்து சில்பிக்கு திருப்தி செய்து விட்டு புண்யாகவாசனம் செய்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்
23. மங்களாங்குரம் செய்து பலவித பழங்களோடு கூடி ஸர்வதோபத்ரம் என்ற மண்டலத்தை புத்திமான் அமைக்க வேண்டும்.
24. மண்டபத்தின் எட்டு திக்குகளிலும் கிழக்கு முதல் வரிசையாக வஜ்ரம் முதல் சூலம் வரை எல்லாவற்றையும் ஸ்தாபித்து சூலத்திற்கு இடது புறத்தில் சக்கரத்தையும், வலதுப் புறத்தில் பத்மத்தையும் அமைக்க வேண்டும்.
25. நடுவில் தேவதேவனையும் இடது புறத்தில் கவுரீதேவியையும் ஸ்தாபித்து ஈச்வரனை சக்தி தேவியுடன் சந்தன புஷ்பங்களால் பூஜித்து வலது புறத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.
26. இடது புறத்தில் விஷ்ணுவை பூஜிக்க வேண்டும், சுற்றிலும் லோபாலர்களை பூஜிக்க வேண்டும், சூர்யனை நடுவிலும், அக்னி திக்கிலோ (ரவியையும்) தென்மேற்கிலோ பாஸ்கரனையும்,
27. வடமேற்கில் பானுவையும், வடகிழக்கில் ரவியையோ வாகரரையோ பூஜிக்கவும். உஷா, பிரபா, ப்ரக்ஞை, ஸந்த்யை, ஸாவித்ரீ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.
28. நடுமுதல், ஈசானம் வரை உள்ள தெய்வங்களை சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். மேலும் நடுவில் விஸ்தாரா என்ற சக்தியையும், அக்னி திக்கில் ஸுதரா என்ற சக்தியையும்,
29. கிழக்கு முதல் வடக்கு வரை ப்ரபூதம், விமலன், ஸாரன், ஆராத்யன் என்றவர்களையும் மத்தியில் பரமஸுகனையும் பூஜிக்க வேண்டும்.
30. வாயு திசையில் போதனீ என்ற சக்தியையும், ஈசான திக்கில் ஆப்யாயனீ என்ற சக்தியையும், நடுவில் ரவியையும் பூஜிக்க வேண்டும்.
31. கிழக்கு முதல் ஈசானம் வரையிலும் நடுவிலும் தீப்தா முதலிய சக்திகளைப் பூஜிக்க வேண்டும். சந்திரன் முதல் கேது வரை எட்டு கிரஹங்களையும் பூஜிக்க வேண்டும்.
32. அதற்கு ஹோமம் செய்ய வேண்டும். அதன் விதிமுறையும் இப்பொழுது சொல்லப்படுகிறது. பிரதான ஹோமத்தில் பரமேஸ்வரனையும், திக்குகளில் எட்டு திக்பாலர்களையும் பூஜிக்க வேண்டும்.
33. மத்தியில் காயத்ரியால் ஹோமம் செய்ய வேண்டும். திக்குகளில் திக்பாலகருடைய மந்த்ரங்களால் அவரவர் பெயரை சொல்லி பிரணவத்தோடு கூட ஸ்வாஹாவை முடிவாகக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
34. அந்தந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி சிவாக்னியை ஸ்தாபித்து முகாந்தம் வரை ஹோமம் செய்யவும். லோகபாலர்களை உடைய ஈசனை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.
35. நாடீ ஸந்தானத்துடன் ஜயாதி ஹோமம் வரை ஹோமம் செய்யவும். ஸமித், ஹவிஸ், நெய், இவைகளால் ஆயிரம், நூறு
36. நூற்றெட்டு ஆவ்ருத்தி அந்தந்த திசைகளில் உள்ளதான பாயஸம், வெண் பொங்கல், சுத்தான்னம் முதலியவைகளை கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
37. பாலில் நனைத்த அருகம்பில்லால் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருபத்தைந்து ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.
38. பிராயச்சித்தமாக அகோரமந்திரத்தினால் பத்தாயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். மண்டலத்தில் பூஜிக்கப்பட்ட எல்லா தெய்வங்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.
39. பூர்ணாஹூதி லோகபாலர்களுக்கு செய்து க்ரியைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆயிரம் கலசங்களால் பரமசிவனை அபிஷேகம் செய்ய வேண்டும்.
40. மஹாபூஜையை செய்து அதிகமான அன்னம் முதலியவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். பஞ்சாமிருதம், பஞ்சகவ்யம், பால் இவைகளாலோ அல்லது ஸ்நபனம் மட்டுமோ அபிஷேகிக்க வேண்டும்.
41. அந்தணர்களுக்கு உணவளித்து பிறகு துலாரோஹணம் செய்ய வேண்டும், கீழ்வரும் அமைப்புடைய அரசனை அமைத்து வெண்மையான வஸ்திரம் உடுத்தி மேல் பூச்சு (உத்தரீயம்) செய்து கொண்டவரும்,
42. எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், வெண்மையான மாலை அணிந்தவரும், காப்புக்கட்டிக் கொண்டவரும், கத்தி, கேடயம், அமைதியாக உள்ளவருமான அரசனை அழைத்து
43. புண்யாக தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து, பூதசுத்தி முதலியன செய்து சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிவார்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.
44. ஸகளீகரணம் செய்து சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு யஜமானனை துலாத்தில் (தராசில்) ஏற்றிவைக்க வேண்டும். யஜமானன் ருத்ர காயத்ரியை அப்பொழுது ஜபிக்க வேண்டும்.
45. ஒரு நாழிகையோ, அரை நாழிகையோ அந்த தராசில் அமர்ந்து இருக்க வேண்டும். கிழக்குமுகமாகவோ, மேற்கு முகமாகவோ தராசு தட்டின் நடுவில் அமர வேண்டும்.
46. இன்னொரு தட்டில் அமைக்கப்பட்ட தங்கத்தை சிவனை நினைத்துக் கொண்டு கூர்ச்சத்தை சிவனாக நினைத்து வேதம், நாட்டியம், வாத்யம், பாட்டு இவைகளுடன்
47. வெற்றி முழக்கத்துடன் தன்னுடைய சரீர எடைக்கு சமமான தங்கம் இருந்தால் அது துலாரோஹம் செய்ததாக ஆகிறது.
48. தன்னுடைய சரீர எடையை காட்டிலும் 100, 50, 25 எண்ணிக்கைகளால் தங்கம் இருப்பது உயர்ந்ததாகும். யஜமானனை தேவேந்திரனாக நினைத்து துலாரோஹணம் செய்ய வேண்டும்.
49. யஜமானர் ஆசார்யனை வாத்யம் முழங்க வஸ்த்ரம், தங்க ஆபரணம் இவைகளால் பூஜிக்கவும், ஹோதாக்களையும் பூஜித்து அவர்களுக்கு தட்சிணையை கொடுக்க வேண்டும்.
50. நூறு நிஷ்க அளவு தங்கமோ அல்லது 50 நிஷ்கமோ எல்லா ரித்விக்களுக்கும் கொடுக்கவும். மற்ற எல்லோருக்கும் பத்து நிஷ்க தங்கம் கொடுக்க வேண்டும்.
51. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். முன்பு சொன்னது போல் சிவார்ச்சகரை பூஜை செய்ய வேண்டும்.
52. அவருக்கு ஐம்பது நிஷ்க அளவு தங்கம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தராசில் ஏற்றப்பட்ட பொருள் களை பிராமணர்களுக்கு கொடுக்க வேண்டும்.
53. சிவபக்தர்களுக்கு சிறப்பாக அதில் பாதியளவாவது கொடுக்க வேண்டும். ஆனால் ஆசார்யனுக்கு மிக சிரத்தையுடன் கொடுக்க வேண்டும்.
54. துலாரோஹண காலத்தில் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும். அரசாங்க பணியாளர்களுக்கும் தனித்தனியாக தங்கம் (நிஷ்கம்) கொடுக்க வேண்டும்.
55. பிராம்மண உத்தமர்களே, இது தானங்களுக்கு பொதுவானது என்று சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் துலாரோஹ ÷ஷாடச தாந விதியாகிற எண்பத்தி மூன்றாவது படலமாகும்.