தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு {பகுதி - இரண்டு}
1918 இல் பண்டிட் லஷ்மணாச்சார் இறக்கவே பூச்சி ஐயங்கார் சின்னக் கட்சி சபையின் தலைவரானார். 1919 இல் அவர் இறக்க மாயவரம் வீணை வைத்தியநாத ஐயரும், அவருக்குப் பின் தஞ்சாவூர் கோவிந்த பாகவதரும் தலைவரானார்கள். இவ்விருவருமே பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே மரணமடைந்து விட்டனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக இருந்த சூல மங்கலம் வைத்தியநாத ஐயருக்கு இதனால் பெருங்கிலி உண்டாகி தலைவர் பதவியை ஏற்க மறுத்துச் செயலாளராகவே தொடர்ந்தார். இதன் பிறகு தலைவர் பதவி காலியாகவே இருந்தது. பஞ்சு பாகவதர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்க்கு இணங்க அவரது சீடரான ராஜகோபால பாகவதர் சின்னக் கட்சியின் சார்பில் சமாதியில் பூஜை செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டார். பெரிய கட்சியின் சார்பால் ராமுடு பாகவதரே பூஜையைச் செய்து வந்தார்.
1920 களில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும், மலை கோட்டைக் கோவிந்தசாமிப் பிள்ளையும் தத்தமது கட்சிகளின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இருவருமே பிறரை மதிக்காத சுபாவம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் பலரைப் பகைத்துக் கொண்டனர். என்றாலும் இருவரும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததால் நிதி குவிந்து கொண்டேயிருந்தது. விழா நிகழ்ச்சிகள் மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தப்பட்டன. 1923 இல் வைத்தியநாத ஐயர் வரவுசெலவுக் கணக்குகளைச் சரியாகக் காட்டாததால் கோபமுற்ற சூலமங்கலம் சௌந்திரராஜ பாகவதர், டி.எஸ். சபேச ஐயர், கல்யாணபுரம் விஸ்வநாத சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஸ்ரீதியாகராஜ பரப்பிரம்ம பக்த கான சபா என்ற பெயரில் மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்துப் புஷ்ய மண்டபத்தில் தனியாக விழா எடுத்தனர். இந்த முயற்சி நீடிக்கவில்லை அடுத்த வருடமே அது நின்று போயிற்று. இதனால் சூலமங்கலம் வைத்தியநாத ஐயரின் கை ஓங்கியது. மறு வசத்தில் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர்களான திருவிடை மருதூர் வீராசாமிப் பிள்ளை, திருவீழிமிழலைச் சகோதரர்கள் ஆகியோர் கோவிந்தசாமிப் பிள்ளைக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பெங்களூர் நாகரத்தினம் மாளின் வரவும் நிகழ்ந்தது. 'வித்யா சுந்தரி' 'கானகலா விஷாரத்' பெங்களூர் நாகரத்தினம்மாள்.
பெங்களூர் நாகரத்தினம்மாள் 1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மைசூரைச் சேர்ந்த வக்கீல் சுப்பராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேவதாசி குலத்தவரான புட்டுலக்ஷ்மிக்கும் பிறந்தார். நாகரத்தினம் பிறந்த சில நாள்களிலேயே பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். தாயும் குழந்தையும் வறுமையில் வாடினர். மைசூர் அரசவையைச் சேர்ந்த சமஸ்கிருதப் பண்டிதரான கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரி என்பவர் புட்டுலக்ஷ்மிக்கு அடைக்கலம் அளித்தார். அவர் நாகரத்தினத்திற்குச் சமஸ்கிருதம் கற்பித்தார். நாகரத்தினம் மிக விரைவிலேயே அந்த மொழியைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தார். இதைப் பொறுக்க மாட்டாமல் கிரிபட்டர் நாகரத்தினத்திற்கு ஒன்பது வயது இருக்கும் போது தாயையும் மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். துன்பத்திலும் மனம் தளராத புட்டுலக்ஷ்மி தன் மகளை மகாராஜாவே அழைக்கும் படி பிரபலமாக்கிவிட்டு தான் மைசூர் மண்ணை மிதிப்பேன் என்று சூளுரைத்து மைசூரை விட்டு வெளியேறினார். தன் மகளுக்கு நல்ல சங்கீத ஆசிரியரைத் தேடி அலைந்த அவர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் உறவினரான தனகோடி அம்மாளைச் சந்திப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். ஆனால் தனகோடி அம்மாளோ வயதாகி மரணப் படுக்கையில் இருந்தார். ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும் படியாக இருவருக்கும் சொன்னார்கள். கையில் பணமில்லாத தால் தாயும் மகளும் பெங்களூர் சென்று புட்டுலக்ஷ்மியின் சகோதரர் வேங்கடஸ்வாமி அப்பாவிடம் தஞ்சம் புகுந்தனர். நாகரத்தினத்திற்குச் சங்கீதம் கற்றுத் தருவதற்காகப் பிரபல வயலின் வித்வான் முனிசாமியப்பா ஏற்பாடு செய்யப்பட்டார். அவளுக்கு நாட்டியமும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளும் கற்பிக்கப்பட்டன. ஆண்டுக் கட்டணமான நாற்பது ரூபாயைப் புட்டுலக்ஷ்மி பெரும்பாடுபட்டுத் தேற்றிக் கொடுத்து வந்தார். பின்னர் நாகரத்தினம் மைசூரின் பெரிய வித்துவானான பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்டார். கிருஷ்ணப்பா வீணை சேஷண்ணாவிடம் சங்கீதம் பயின்றவர். சேஷண்ணா மைசூர் சதாசிவராவின் சீடர். சதாசிவராவ் வாலாஜாப் பேட்டை வேங்கடரமண பாகவதரிடம் சங்கீதம் கற்றவர். இப்படியாக நாகரத்தினமும் தியாகராஜரின் இசைப் பரம்பரையில் ஒருவரானார். நாகரத்தினத்திற்குப் பதினான்கு வயதிருந்த போது புட்டுலக்ஷ்மி இறந்தார்.
1893 இல் வீணை சேஷண்ணாவின் இல்லத்தில் கச்சேரி நடத்துவதற்காக நாகரத்தினம் அழைக்கப்பட்டார். வெற்றிகரமாக நடந்த அந்தக் கச்சேரியைப் பற்றிக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் தன் மகள் ஜெயலக்ஷ்மி மணி ருதுவான போது இசை நிகழ்ச்சி நடத்த நாகரத்தினத்திற்கு அழைப்பு விடுத்தார். தன் தாயாரின் சூளுரைக்கு ஏற்ப நாகரத்தினம் அரசின் அழைப்பிற்கிணங்கி மைசூர் மண்ணில் முதல் முறையாகக் காலடி எடுத்து வைத்தார். கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரியும் அதில் கலந்து கொள்ள வேண்டிவந்தது. இந்தக் கச்சேரிக்குப் பிறகு நாகரத்தினம் அரசவைக் கலைஞரானார். இத்தருணத்தில் மைசூர் நீதிபதியான டி.நரஹரி ராவ் அவருக்கு ஆதரவாளரானார். 1903 இல் நாகரத்தினம்மாள் இசைத் தட்டு உலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டார். கல்கத்தா கௌஹர் ஜானைப் போல அவரும் கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியாவின் இசைத் தட்டுகளுக்காகப் பாடத் தொடங்கினார். அது தென்னிந்தியா முழுவதும் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தது. 1905 இல் சி.எஸ். ராஜரத்தின முதலியாரின் ஆதரவோடு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர் ஜார்ஜ் டவுன் சீனிவாச அய்யர் தெருவில் பத்தாம் இலக்க வீட்டை அமர்த்திக் கொண்டார். கிரகப் பிரவேசத்தன்று பிடாரம் கிருஷ்ணப்பா கன்னடக் கிருதிகள் அமைந்த கச்சேரி ஒன்றை நிகழ்த்தினார். இதற்குப் பரிசாக அவருக்கு வைர மோதிரம் அளிக்கப்பட்டது. சென்னையில் பூச்சி ஐயங்காரின் ஆதரவும் கிடைத்தது. சம்பாதித்த பணத்தை நாகரத்தினம்மாள் நல்ல முறையில் முதலீடு செய்ததால் அவருக்கு வருமானம் பெருகியது. வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர் இவர் தான். மாறிவரும் சமூகச் சூழலை உன்னிப்பாக அவதானித்து வந்த அவர் சதிர்க் கச்சேரியின் காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து அதை நிகழ்த்துவதை விட்டு விட்டார். ஹரிகதையும் கர்நாடக சங்கீதமும் நிகழ்த்துபவரானார்.
அவரது புகழ் எங்கும் பரவியது. சமஸ்கிருதத்தில் அவருக்கிருந்த திறமை கலைஞர்களிடமிருந்தும் வித்வான்களிடமிருந்தும் அவருக்குப் பெருமை பெற்றுத் தந்தது. 1929 இல் சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம மாநாட்டை அவர் தனது சமஸ்கிருத உரையோடு தொடக்கி வைத்தார். 1905 க்கும் 1934 க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் 116 நகரங்களில் 1235 நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்.1934 இல் வெளியான சனாதன தர்ம பிரசார சபா விழா மலரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் யு.பி. கிருஷ்ணமாச்சார் என்ற அறிஞர் பட்டியலிட்டுள்ளார். ராஜ முந்திரியில் நடந்த கண்ட பேர விழாவில் அவரைப் பாராட்டி இரட்டைக் கவிஞர்களான திருப்பதி வேங்கடேசக் கவிகள் சமஸ்கிருதக் கவிதை வாசித்தனர். மேலும் அவருக்குச் சந்தன மாலையுடன் வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதில் நடந்த விவாதம் ஒன்றின் போது திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்த முத்துப் பழனி என்பவர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்று சபையிலிருந்த அறிஞர்கள் குறிப்பிட்டனர். அவர்களின் அறியாமையைக் கண்டு நாகரத்தினம் பெரும் வியப்படைந்தார். அந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் ஆசைக்கிழத்தியான முத்துப் பழனி என்பவர் தான் என்ற விவரம் அவருக்குத் தெரியும். அவர் தனது மறுப்பைத் தெரிவித்த போது அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. சென்னை திரும்பியதும் அவர் முத்துப் பழனியின் இன்னொரு நூலான காமரசம் நிரம்பிய 'ராதிகா சாந்தவனமு' என்ற நூலை வெளியிட்டு தன்னைப் போன்ற தேவதாசிகள் பலரும் பெரிய சமஸ்கிருத வித்வான்கள் என்பதை நிரூபிக்க முயன்றார். 1911 இல் வாவில்லா ராமசாமி சாஸ்திரிலு அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட அந்த நூல் சீர்தருத்தவாதியான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது. அன்று போலீஸ் கமிஷனராக இருந்த கன்னிங்காம் புத்தகத்தின் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனால் அந்தப் புத்தகத்தின் புகழ் அதிகரித்தது. அது தடை செய்யப்பட்டது. 1947 இல் தான் அந்தத் தடை நீங்கியது.
நாகரத்தினம்மாளுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே வந்தது. பல விருதுகளும் பதக்கங்களும் அவருக்குக் கிடைத்தன. என்றாலும் தனக்கு ஒரு குழந்தையில்லாதது அவருக்குப் பெரும் துயரத்தை அளித்து வந்தது. இதனால் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தார். ஆனால் அந்தப் பெண் 1921 இல் அவளது பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் நாகரத்தினம்மாளுக்கு விஷம் கொடுக்க முயன்றதாகச் சந்தேகம் ஏற்பட்டது. நல்ல காலமாக நாகரத்தினம் அந்த விஷமிடப்பட்ட பாலை அருந்தவில்லை. அந்தப் பெண்ணுடனான உறவை அவர் அத்துடன் முறித்துக் கொண்டார். அந்த ஆண்டு அவருக்குத் தியாகராஜரின் உருவப்படம் ஒன்று கிடைத்தது. அதை வழிபட ஆரம்பித்தார். தியாகராஜர் ஒரு நாள் அவர் கனவிலும் தோன்றினார். நாகரத்தினம்மாளுக்கு அவர்தான் தன்னை விஷத்திற்குப் பலியாவதிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் தான் அவரது குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் தியாகராஜர் சமாதியின் பரிதாப நிலை பற்றி எழுதப்பட்டிருந்தது. நாரத்தினம்மாள் உடனடியாகத் திருவையாறு புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக