திங்கள், 13 ஜூலை, 2020

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு {பகுதி-1}

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு {பகுதி - ஒன்று}

தியாகராஜர் 'பிரபவ வருடம் பூசத்திங்கள் கிருஷ்ண பட்சம் ஞாயிற்றுக் கிழமை சமாதியடைந்தார். அதற்கு ஆறு நாள்களுக்கு முன்னால் குன்றில் அமர்ந்த படி ராமர் அவருக்குத் தரிசனம் தந்து பூமியில் தியாகராஜரின் காலம் முடியும் நாள் நெருங்கி விட்டது என்று கூறினார். சஹானா ராகத்தில் அமைந்த தியாகராஜரின் 'கிரிவை' என்ற கிருதி இதைத் தெரிவிக்கிறது. பின்னர் அவர் சன்னியாசம் ஏற்று நாதபிரம்மானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். காவிரிக் கரையில் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட அவர் தன் சீடர்களை அழைத்து இருதிகாலத்திற்க்கு பின் தனது உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். சவக் குழியில் எவ்வளவு உப்பு இட வேண்டும் என்பதைக்கூடச் சொன்னாராம். குறிப்பிட்ட அந்த நாளில் பிராமணர்களுக்குத் தானங்கள் அளித்து, பின்னர் தியாகராஜர் சீடர்கள் அவரது கிருதிகளைப் பாடிய படியிருக்க யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். சட்டென்று அவரது சிரசிலிருந்து ஒரு பெரும் ஜோதி வெளிப்பட்டது. தியாகராஜர் சமாதியடைந்தார். ஆங்கில நாள் காட்டியின் படி அன்று 1847 ஆம் வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி, தியாகய்யரின் பேரன் பஞ்சாபகேசய்யா இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

தியாகராஜர் தனது சமாதிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே பல சன்னியாசிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். மராட்டிய மன்னர் பரம்பரையின் தூரத்து உறவுக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இந்த இடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து திருவையாறில் காலமான சாதுக்களை அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்தது. தியாகராஜரின் சீடர்கள் அவரது சமாதிக்கு மேலே துளசி மாடம் ஒன்றை அமைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜர் முக்தியடைந்த திதியில் பஞ்சாபகேசய்யாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அவரது சீடர்கள் அனைவரும் அதற்காக அங்குக் கூடினர். அப்போதெல்லாம் அது ஒரு ஸிரார்த்தம் போலச் சம்பிரதாயச் சடங்காக எந்த இசை நிகழ்ச்சியும் இல்லாமல் நடந்தது.1855 ஆம் ஆண்டு இருபத்திரெண்டு வயதில் பஞ்சாப கேசய்யா மரணமடைய சீடர்களும் திருவையாறுக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அவரவர் தத்தமது ஊர்களில் திதியை நடத்தினர். பிருந்தாவனம் மறக்கப்பட்டுப் புதர் மண்டியது. 1903 வாக்கில் தியாகராஜரின் சீடர்களில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர். இவர்களில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரும், சுந்தர பாகவதரும் தமது குருவின் சமாதி சிதிலமடைந்திருந்ததை அறிந்து திருவையாறுக்கு வந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் அந்த இடத்தைக் கண்டு பிடித்துப் புனருத்தாரணம் செய்தனர். சமாதியின் பின் பக்கத்தில் தியாகராஜரை பற்றிய குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் அவர்கள் பதித்தனர்.

அன்று தியாகராஜரின் சீடர்களில் மூன்று பரம்பரைகள் பிரபலமாக இருந்தன. வாலாஜாப்பேட்டை தில்லை ஸ்தானம், உமையாள்புரம், வாலாஜாப் பேட்டை பரம்பரை வேங்கடரமண பாகவதர் மற்றும் அவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரிடமிருந்து வந்தது. தியாகராஜர் அவர்களிடமிருந்து நேரடியாகச் சங்கீதம் பயின்ற இவர்கள் அவரைப் பற்றித் தனித்தனியாக வரலாறு எழுதினார்கள். தில்லை ஸ்தானம் பரம்பரை ராம ஐயங்காரிடமிருந்து வந்தது. தியாகராஜரின் கிருதிகளை வரிசைப்படுத்தியவர்களில் முன்னோடி இவர். உமையாள்புரம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாம் மேலே குறிப்பிடப்பட்ட கிருஷ்ண சுந்தர பாகவதர்கள், தில்லை ஸ்தானம் ராம ஐயங்காரின் சீடர்கள் தில்லை ஸ்தானம் சகோதரர்களான நரசிம்ம பாகவதரும், பஞ்சு பாகவதரும் கும்பகோணத்தில் வசித்து வந்த மூத்தவர்கள். ஹரிகதை வித்தகர். தில்லை ஸ்தானத்தில் வசித்து வந்த இரண்டாமவர் இசைக் கலைஞர். 1908 இல் ஒரு முறை சென்னை சென்ற நரசிம்ம பாகவதர் சென்னை தங்க சாலையிலிருந்த தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் பல இசைக் கலைஞர்களைக் கூட்டினார். சென்னை நகரத்தின் பழைய சபாக்களில் ஒன்றான பக்தி மார்க்க பிரசங்க சபாவின் செயலாளரான முனுசாமி நாயுடுவும் அந்தக் கூட்டத் திற்கு வந்திருந்ததார். இசைக் கலைஞர்கள் அனைவரும் தியாகராஜரின் இசையினால் வாழ்ந்து கொண்டிருப்பதால் தங்கள் கடப்பாட்டைத் தெரிவிக்கும் முகமாகத் திருவையாற்றில் ஆண்டு தோறும் ஆராதனை விழா எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பாகவதர் சபை முன் வைத்தார். ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்றோர் அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது.

1909 இல் இசைக் கலைஞர்கள் பலரும் ஆராதனையில் பங்கெடுக்க முன் வந்ததால் திருவையாற்றில் ஐந்து நாள் இசை விழா நடத்த வேண்டி வந்தது. ஆராதனைக்கு நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கிய விழா ஆராதனை நாளன்று நிறைவு பெற்றது. இனி வரும் ஆண்டுகளில் இதையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. தில்லை ஸ்தானம் நரசிம்ம பாகவதரும் அவரது சகோதரர் பஞ்சு பாகவதரும் இந்த விழாவிற்கான தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தியாகராஜரின் இசைப் பரம்பரையின் நேரடிச் சீடர்கள் என்பதால் ஆராதனை நாளன்று சமாதிக்கு அபிஷேகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இசைக் கலைஞர்கள் வேறு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்தனர் ஒன்று பெண்கள் எக்காரணத்தைக்கொண்டும் சமாதியின் முன் பாட அனுமதிக்கப்படமாட்டார்கள் இரண்டு நாதஸ்வரக் கலைஞர்கள் சமாதியிலிருந்து விலகியே இருக்க வேண்டும். மிகச் சிறந்த வித்வான்களைக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கூட்டம் இந்த ஏற்பாட்டிற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஆராதனை நாளன்று இரவில் தியாகராஜர் உருவப்படத்தின் பூப்பல்லக்குப் பவனிக்கு ஏற்பாடு செய்து நாதஸ்வரக் கலைஞர்கள் தங்கள் இசை அஞ்சலியைச் செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 1940வரையிலும் இந்த ஏற்பாடே தொடர்ந்தது.

1909 வாக்கில் ஆராதனை விழா மிகவும் பிரபலமடைந்திருந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு பல கச்சேரிகளுக்கும், ஹரிகதா காலட்சேபங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 1910 இல் விழாவிற்கான நிதி தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. நரசிம்ம பாகவதர் ஆராதனை விழாவில் கலந்து கொள்ளாமல் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் தனியாக நடத்தினார். திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, புதுச்சேரி ரங்கசாமி ஐயர், கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்ற பல இசைக் கலைஞர்கள் அவரது அணியில் இருந்தனர். நரசிம்ம பாகவதர் சகோதரர்களில் மூத்தவர் என்பதால் இவரது அணி 'பெரிய கட்சி' என்று அழைக்கப்பட்டது. பஞ்சு பாகவதர் திருவையாறிலேயே ஆராதனை விழாவை நடத்தினார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் நேமம் நடேச பாகவதர் பல்லடம் சஞ்சீவ ராவ் போன்றோர் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர். இந்த அணி 'சின்னக் கட்சி' என்று அழைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. நரசிம்ம பாகவதர் 1911 இல்  அதை ஒட்டிய சில ஆண்டுகளிலோ மரணமடைந்த காலம் வரை இந்த நிலை நீடித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு பெரிய கட்சியும் விழாவைத் திருவையாற்றிலேயே கொண்டாடத் தலையிட்டது. இரண்டு கட்சிகளுமே ஆராதனை விழாவைத் திருவையாறிலேயே அதுவும் ஒரே சமயத்தில் நடந்த முடிவு செய்ததால் அங்குப் பதற்றம் நிலவியது. ஏற்கனவே பண நெருக்கடியிலிருந்த சின்னக் கட்சி முக்கியமான சங்கீத வித்வானும் முசிறி சுப்பிரமணிய ஐயரின் குருவுமான சென்னையைச் சேர்ந்த பிரபலஸ்தர் டி.எஸ். சபேச ஐயரை வளைத்து அவரிடம் சென்னையில் நிதிதிரட்டித் தரும்படிக் கேட்டுக் கொண்டது. இந்தக் கட்சி பச்சையப்ப முதலியார் சத்திரத்திலும் பெரிய கட்சி கல்யாண மஹால் சத்திரத்திலும் ஆராதனை விழாவை நடத்தின. ஆராதனை நாளின் போது சின்னக் கட்சி முதலில் சமாதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் பெரியக் கட்சி தனது வழிபாட்டைப் பின்னர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் அமலில் இருந்தது.

இந்தப் பூசலும் கட்சி கட்டலும் பல வித்வான்களை மிகவும் துயரில் ஆழ்த்தின. ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களில் முதன்மையானவர். 1913 இல் பெரிய கட்சியின் அழைப்பின் பேரில் அவர் ஆராதனை விழாவில் கலந்து கொண்டார். ஜனவரி 16 ஆம் தேதி இரண்டு கட்சிகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ததோடு இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார். ஆனால் சமாதியில் பூஜை செய்வதற்கான உரிமை யாருடையது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தியாகராஜரின் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருக்கு தான் வழங்கப்பட வேண்டும் என்று சின்னக் கட்சி கூற பெரிய கட்சியோ தியாகராஜரின் தமையனார் சபேசனின் பேரனும் அன்று உயிரோடிருந்த ஒரே வாரிசுமான ராமுடு பாகவதருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று எண்ணியது. இரண்டு கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்படவில்லை. முத்தையா பாகவதர் இரு கட்சியினரும் ஒன்று சேரும் வரை ஆராதனை விழாவில் கலந்து கொள்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துச் சென்று விட்டார். 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சின்னக் கட்சி தியாகராஜ பரப்பிரம்ம வைபவ பிரகாச சபை என்று பெயரிட்டுப் பதிவு பெற்ற சபையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டது. சென்னையில் உள்ள பண்டிட் லஷ்மணாச்சாரின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற முதல் கூட்டத்தில் அவர் தலைவராகவும், ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் உதவித் தலைவராகவும், சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் செயலாளராகவும், டி.எஸ். சபேச ஐயர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்ட பஞ்சு பாகவதர் சமாதியில் பூஜை செய்யும் உரிமையை மட்டும் தனக்குத் தக்கவைத்துக் கொண்டார். பதிவு பெற்ற சபையானதால் இந்தச் சபாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்ததோடு ஏகப்பட்ட நிதியும் வசூலானது. இதனால் ஆராதனை விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அந்தச் சபை வரவுசெலவுக் கணக்குகளை மிகுந்த பொறுப்புடன் அச்சிட்டு நன்கொடையாளர்களுக்கு வழங்கியது. பெருகிவரும் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக1915 இல் பாலாயி சத்திரத்திற்கு மாறிய விழா 1917இல் அங்கிருந்து புஷ்ய மண்டபத்திற்கு நகர்ந்தது.பெரிய கட்சியோ மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையையே தனது நிதி ஆதாரங்களுக்காகப் பெருமளவு சார்ந்திருந்தது. அவரும் மனமுவந்து உதவிவந்தார். சில ஆண்டுகளில் 2000 ரூபாய்வரை வசூலானது.

கருத்துகள் இல்லை: