தினமொரு திருமுறை
காவிரிக்கரை தலங்களை எல்லாம் தரிசித்து வந்த நம்பியாரூரப் பெருமானுக்கு நடுநாட்டில் உள்ள #திருமுதுகுன்றத்தை தரிசிக்க ஆவலேற்பட்டதால், அதுநோக்கி நடந்த வழியில் கூடலையாற்றூர் என்னும் தலத்தில் இறைவர் நிகழ்த்திய அற்புத திருவிளையாடலை நினைந்தபடி நடந்து கொண்டிருந்தார்கள்,
முதுகுன்றம், தற்காலத்தில் ஆற்றுச்சமவெளியில் இருக்கும் மருத நிலத்தலம், ஆனால் பெயரோ "முதுகுன்றம், விருத்தாச்சலம், பழமலை" என்றெல்லாம் மலையாகவே அடையாளம் காணப்படுகிறது.
"உலகத்து மலைகளுக்கு எல்லாம் தாமே பழமலையாக இருக்கிறோம்" என்று இறைவன் உணர்த்தும் மலைத்தலம் அது, ஆனால் *"மலையோ பூமிக்கடியில் அதி சூட்சுமமாக அமைந்துள்ளது, அதன் சிகரத்தின் மீதே திருமுதுகுன்ற வாணர் திருக்கோயில் அமைந்துள்ளது"*
அந்த அதிசூக்கும மலை நம்போன்ற மானுடப்பிறவிகளுக்கு தெரியாது, ஆனால் "இதோ நம்பியாரூரப் பெருமான் முதுகுன்றத்தை நெருங்க நெருங்க அவரது ஞானத் திருவிழிகளுக்கு முதுகுன்றம் சிறிது சிறிதாக மலையாகவே தோன்றுகிறது"
மலைநிலமான குறிஞ்சித்திணைக்கு உரிய கருப்பொருட்களும் காட்சிகளும் சுவாமிகளுக்கு எங்கும் காணக்கிடைக்கிறது,
ஒரு பக்கம் யானைகள் கூட்டங்கூட்டமாக மேய்கின்றன, அதில் ஒரு யானை மணிமுத்தாற்றில் தவறி விழுந்து விட்டதே!! ஆற்றின் வேகத்தில் யானையால் கரையேற முடியவில்லையே!! அது பிளிறிக்கொண்டே ஆற்றிலடித்து செல்லப்படுகிறதே!!
அதோ மலைகளின் உச்சியில் மேகங்கள் வந்து பொழில்களை சூழ்ந்து கொள்கின்றதே!? என்ன ஒரு குளுமை!!??
ஆஹா!! இதென்ன சத்தம்!! இடிமுழக்கம் போலல்லவா இருக்கின்றது!! ஓஓ!! மலைக்குகைளில் வசிக்கும் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன போலும்!! என்று எண்ணியபடி குறிஞ்சி நில காட்சிகளை கண்டு வந்த சுந்தரர் பெருமான் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தார்கள்
அங்கு ஒரு வீட்டில் சுவாமிகள் கண்ட காட்சி ஆச்சர்யப் படவைத்தது, பொதுவாக வீடுகளில் பசு வளர்ப்பவர்கள் அது சினையாய் இருந்து கன்றீனும் பொழுது உடனிருந்து உதவுவார்கள்
ஆனால் இந்த முதுகுன்றத்து பெண்கள் "ஒரு பெண்யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்து அதற்கு பிரசவம் பார்த்து கொண்டு இருக்கிறார்களே!!" இதென்ன புதுமை??
சுந்தரர் பெருமான் அந்த நிகழ்வு நடக்கும் இடத்தருகில் சென்று அந்த பெண்களின் பேச்சை கவனித்தார்கள்
அவர்கள் வேட்டுவப் பெண்கள், "மலையில் ஆண்யானையும் பெண்யானையும் மகிழ்வாக வாழ்ந்து வந்தது, அந்த பெண்யானை கருவுற்று இருந்தது, நிறை மாதமாகி கன்றீனும் வேளையில் ஒரு கொடுமையான சிங்கம் வந்து அந்த யானைத் தம்பதிகளில் ஆண்யானையை அடித்து கொன்று விட்டது, அதனால் கலக்கமுற்ற பெண்யானை திகைத்து அலமந்து போகவே வீரமான அந்த வேட்டுவச்சிகள் சினையாய் இருந்த பெண்யானையை ஓட்டிவந்து வாசலில் கட்டிவைத்து இப்போது பிரசவம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்" என்பதனை அவர்களின் பேச்சிலிருந்து பெருமான் அறிந்து கொண்டார்.
அவர்கள் பேச்சில் இன்னொரு செய்தியும் அடிபட்டது, அவர்கள் தெருவுக்கு நேற்று ஒரு பாம்பாட்டி பிச்சையெடுக்க வந்திருக்கிறார் போல, அந்த பிச்சைகாரரை பார்த்தால் பிச்சைக்கு வந்தவர் போல தெரியவில்லையாம் அவ்வளவு அழகாகவும் இளமையாகவும் இருந்த பிச்சைகாரரை பார்த்து பல பெண்கள் மயங்கியே விட்டனராம்,
"அதே சமயம் அவர்கள் தெருவில் இருந்த நாய்களெல்லாம் அந்த பிச்சைகாரரை சூழ்ந்து கொண்டு குரைத்தனவாம்!! உடனே அந்த பிச்சைக்காரர் திரும்ப போய்விட்டாராம்"
இதனை கேட்டவுடன் சுவாமிகளுக்கு பிச்சை எடுக்கிற வேடத்தில் வந்தது யார் என்று புரிந்து விட்டது, ஆனாலும் மனதில் ஒரு ஆதங்கம் "நாய்கள் குரைக்கும் அளவிற்கு இவர் பிச்சை வாங்க செல்ல வேண்டிய அவசியம் என்ன?? என்று முதுகுன்றத்து தம்பிரானை நல்லதாக நாலு கேள்வி கேட்டுவிட வேண்டும்" என்று எண்ணியபடி ஆலயத்திற்கு வேகமாக நடைபோட்டார்.
ஆலயத்தை அடைந்து அணிநீடு கோபுரத்தை கடந்ததும் *"முதுகுன்றத்து எம்பிரான் லிங்க பரமேஸ்வரராக காட்சி தரவே!!"* நம்பியாரூரப் பெருமானது அனுபவங்களும், இறைவனை கேட்க நினைத்த கேள்விகளும் தீந்தமிழ் தெய்வ திருப்பாட்டாக வெளிப்பட்டது,
நம்பிகள் பாடினார்கள்
*"சென்று இல்லிடைச் செடி நாய்
குரைக்கச் சேடிச்சிகள்
மன்றில் இடைப்பலி தேரப்
போவது வாழ்க்கையே!?
குன்றில் இடைக் களிறு
ஆளி கொள்ளக் குறத்திகள்
முன்றில் இடைப் பிடி
கன்று இடும் முதுகுன்றரே"*
என்று!!
பின்குறிப்பு: விருத்தாச்சலம் மருதநிலத் தலம், ஆயினும் மலைத்தலம் என்ற பெயருக்கேற்ப குறிஞ்சி நிலக் கருப்பொருட்களான சிங்கம், யானை, வேடுவர் முதலிய காட்சிகள் நிறைந்த பதிகத்தை நம்பிகள் அருளியுள்ளனர், ஆதலால் பழமலையில் நம் ஊனக்கண்களுக்கு தெரியாத மலைக்காட்சி நம்பிகளின் ஞானக்கண்களுக்கு தோன்றியது பதிகவழி அறிய கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக