ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்
திருவள்ளூர் மாவட்டம்
ஸ்தல வரலாறு:மகா லக்ஷ்மியின் தந்தையான சமுத்திர ராஜன் மகா லக்ஷ்மியைப் பார்க்க வேண்டுமென ஆவல் கொண்டிருந்தார். ஆனால் மகா லக்ஷ்மி தாயாரோ தனது தந்தையின் கண்ணில் படாதவாறு இருந்தாள்.
கடைசியாக சமுத்திர ராஜன் பூலோகத்தில் தேடிய போது இவ்வூரில் தனது தந்தையின் கண்ணிற்குப் புலப்பட்டாள்.தனது மகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்த மகிழ்ச்சியில் என்னைப் பெற்றத் தாயே என்று சமுத்திர ராஜன் அழைத்து மகிழ்ச்சியெனும் கடலில் லயித்துப் போனார்.இதனால் இங்குள்ள தாயாருக்கு என்னைப் பெற்ற தாயே என்ற திருநாமம் சூட்டப்பட்டு பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
திரு ஆகிய மகா லக்ஷ்மி தாயாரே நின்று தனது தந்தைக்குக் காட்சியளித்த க்ஷேத்ரமென்பதால் இதற்கு திருநின்றவூர் என்ற ஏற்பட்டது என்பது பலர் நம்புகின்ற கூற்றாகும்.
ஸ்தலச் சிறப்பு:பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையாழ்வார் இந்த திவ்ய க்ஷேத்ரத்திற்கு வந்திருந்த போது இங்குள்ள பெருமாளும் தாயாரும் அவர் வந்திருப்பதை கவனிக்கத் தவறிட்டனர்.
ஆழ்வாரும் பெருமாள் காட்சியளிப்பார் என்று எண்ணி சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பாசுரம் பாடாமலேயே கிளம்பிவிட்டார்.கொஞ்ச நேரம் கழித்துதான் திருமங்கையாழ்வார் நம்முடைய தரிசனத்திற்காக காத்துக் கிடந்தார் என்ற விவரம் இங்குள்ள மூலவரான “ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளுக்கும்” தாயாரான“என்னைப் பெற்றெடுத்த தாயாருக்கும்”தெரிய வந்தது. உடனே பெருமாள் ஆழ்வாரைக் காண மகாபலிபுரம் சென்றார்.அங்கே திருமங்கையாழ்வாரை கண்ணுற்றார். எல்லாம் வல்ல பெருமாளே தன்னைக் காண வந்திருப்பதை எண்ணி மகிழ்ந்து ஒரே ஒரு பாசுரம் மட்டும் பாடி கொடுத்தனுப்பினார்.அதைப் பெற்றுக் கொண்ட பெருமாள் அதை தாயாரிடம் கொடுத்த போது ஒரே ஒரு பாசுரம் மட்டும் தானா?”என கோபம் கொண்டார்.தாயாரின் கோபத்தைப் போக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆழ்வாரை மீண்டும் தேடிச் சென்றார்.அப்போது ஆழ்வார் திருக்கண்ண மங்கையில் இருந்தார். அவரிடம் பெருமாள் நடந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறிய பின்னர் ஆழ்வார் மற்றொரு பாசுரம் பாடி கொடுத்தனுப்பினார். பெருமாளும் அதைப் பெற்றுக் கொண்டு தாயாரிடம் அளித்தார்.அதன் பின்னர் தான் தாயார் மகிழ்ச்சியடைந்தார்.
விமானம்: ஸ்ரீநிவாஸ விமானம்
தீர்த்தம் : வருண புஷ்கரிணி.
மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏரி காத்த ராமரைப் போல ஆறடி உயரத்தில் சீதா லக்ஷ்மண ஸமேதராய் காட்சியளிக்கிறார்.இங்கு ராஜ கோபுரமானது 5 நிலைகளைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
ஸந்நிதிகள்:ஆண்டாளுக்கென ஒரு ஸந்நிதியும் ஸ்ரீ சக்ரத்தாழ்வாருக்கென ஒரு ஸந்நிதியும் ஸ்ரீ ஆதிஷேசனுக்கென ஒரு ஸந்நிதியும் உள்ளன.கோயிலை பார்த்தவாறு ஆஞ்சனேயர் ஸந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.கோயிலின் வடக்கு பிரகாரம் அருகே பரமபத வாசல் அமைந்துள்ளது.
சிற்பங்கள் நிறைந்த கோயில்:தமிழக கோயில்கள் என்றாலே அது சிற்பங்களுக்கு பெயர் போனது. அதிலும் இத்திருக்கோயிலிலுள்ள சிற்பங்கள் நம் பழந்தமிழரின் சிற்பக் கலையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
பரிகாரம்:திருடு போன பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கும் ஆட்களைத் தேடிப் பிடிப்பதற்கும் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சொத்தை நியாயப்படி மீண்டும் அடைவதற்கும் சதிகாரர்களால் பதவியிழந்தவர்கள் மீண்டும் பதவியைப் பெறுவதற்கும் செய்யும் தொழிலிலே உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்று பதவி உயர்வு பெறுவதற்கும் உயர் படிப்புகளை படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறுவதற்கும் வியாபாரத்தில் இலாபத்தை அடைவதற்கும் இங்குள்ள ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளை மனமுருகி ப்ராத்தித்தால் உங்களின் எண்ணங்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்பது உறுதி.
அமைவிடம்:சென்னைக்கு மேற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் ஷீர நதிக்கரையில் அமைந்துள்ளது திருநின்றவூர் என்ற இந்த திவ்யமான க்ஷேத்ரம்.
போக்குவரத்து வசதி:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் திருத்தணி மார்க்கமாக செல்லும் ரயிலில் ஏறி திருநின்றவூர் ரயில்வே நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஷேர் ஆட்டோ வசதிகளும் பஸ் வசதிகளும் உள்ளன.
தரிசனம் நேரம்:காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை.மாலை 04.30 மணி முதல் இரவு 8.30 வரை.
திருக்கோயில் முகவரி:ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம், பின் கோடு:602024, தொலைபேசி:044-55173417
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக