செவ்வாய், 29 டிசம்பர், 2020

குரு பூர்ணிமா


வியாச பூர்ணிமா குரு பூர்ணிமா நாளில் அவரது சாதனைகளை விளக்கும் பதிவீடு :

வியாசர், தாறுமாறாக இருந்த வேதத்தை ஒழுங்கு படுத்தி, ரிக், யஜுஸ், ஸாம, அதர்வ என்ற சதுர் மறைகளாக்கி, ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும் நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேத வ்யாஸர் என்றே அழைக்கப் படுகிறார். வ்யாஸர் என்றால் தொகுப்பாளர் (Composer) என்று பொருள்.

வியாசர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுக முனிவரின் தந்தையும் ஆவார்:

வ்யாஸம் வஸிஷ்ட2 நஃதா1ரம்
  சக்1தே1ஃ பௌ1த்1ரம் அக1ல்மஷம்।
ப1ராச'ராऽத்1மஜம் வந்தே3
   சு'க1தா1த1ம் த1போ1நிதி4ம்।।

வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:

வ்யாஸாய விஷ்ணு ரூபா1ய
   வ்யாஸ ரூபா1ய விஷ்ணவே।
நமோ வை ப்3ரஹ்ம நித4யே
    வாசி'ஷ்டா2ய நமோ நம:।।

வியாசர் க்ருஷ்ண த்வீபம்‌ என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்1ருஷ்ண த்வைபா1யனர்" / "த்வைபா1யனர்" என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

வியாசர், நால் வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே.‌ அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார்.

நம் நாட்டு இரட்டை இதிஹாஸங்களான ராமாயணம் வால்மீகி முனிவராலும், மஹாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப் பட்டவை. ராமாயணம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால், மஹாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 100,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால் எவ்வளவு பெரிய சாதனை என்று மலைக்கத் தோன்றுகிறது அல்லவா?
ப்3ரஹ்ம ஸூத்1ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களின் தோற்றுவாய் ஆகும்.

வியாசர் முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும், கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

வியாசருக்கு எவ்வளவு பெரிய மகத்துவத்தைத் தந்துள்ளனர் என்றால், அவரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன், அவரை  "ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்" என்றும் போற்றுகின்றனர் :

#அச1து1ர்முக2_யத்1_ப்3ரஹ்மா
    #அச1து1ர்பு4ஜ_விஷ்ணவே।
#அபா4ல_லோச1னஃ_சம்பு4:
     #ப4க3வான்_பா3த3ராயண:।।

மஹர்ஷி வியாசரின் அவதார தினத்தில் அவரை நன்றியுடன் நினைவு கூர்வது, நம் நாட்டுப் பாரம்பரியங்களை மதிக்கும், நம் அனைவரது கடமையுமாகும்.

கருத்துகள் இல்லை: