செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஸ்ரீ புது பெரியவாளின் வார்ஷிக ஆராதனை


ஸ்ரீ புது பெரியவாளின் வார்ஷிக ஆராதனை

பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒரு பார்வை
 

கடந்த சில வருடங்களாக அவர்கள் தமது பூத உடலுடன், நம்மிடையே இல்லை; ஆனால் தமது பிருந்தாவனத்தில் தன்  குருவுக்கு அருகிலேயே இருந்து நம்மையெல்லாம் அருள் பாலித்து வருகிறார்கள் அவருக்கு முன்னால் 68 பீடாதிபதிகள் இந்தபீடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் என்றும் புதியவராகவே காக்ஷியளித்தார். அவ்வாறு இருந்தாலும், காலத்திற்கேற்றபடி தன் தனது வாழ்க்கையின் சில அம்சங்களை மாற்றிக்கொண்டாலும்,  ஸ்ரீ மடத்தின் ஸம்பிரதாயத்தை அவர்கள் ஒருபோதும், ஒரு விதத்திலும் மீறியதில்லை. உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். 1971 என்று ஞாபகம். என் பிறந்த ஊரான, சாத்தூரில் நான் படித்த ஆரிய வைசிய மிடில் ஸ்கூலில் காம்ப் . நான் காம்பில், அவர்களுடன் அங்கு வந்திருக்கிறேன். அங்கு என் பால்ய சிநேகிதன் சங்கரன் வந்திருந்தான். தான் தன் கைப்பட, ஸ்ரீ பெரியவர்களுக்கு பாத பூஜை செய்ய விரும்பினான். அவனது விருப்பத்தை நான் ஸ்ரீ பெரியவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு, அவர்கள் சொன்ன பதில்: " உனக்குத்தான் நமது மடத்தின் சம்ப்ரதாயம் தெரியுமே. கிராப் வைத்துக்கொண்டவர்கள், ஸ்ரீ மடத்து பூஜகர் மூலம் தான் பாத பூஜை செய்ய முடியும். இதை அவனிடம் நீயே சொல்லிவிடு ". இன்னொரு சம்பவம்: ஸ்ரீ காஞ்சி மடத்தில் , நமது ஸ்வாமிகள் நித்திய பூஜைகள்  செய்து வருகிறார்கள் . ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் யாத்திரையாக சென்றிருப்பதால், மூன்று வேளை பூஜைகளையும், நமது ஸ்வாமிகளே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களுக்கு தனது மலத்துவார த்தினருகே ஓரு  பெரிய கட்டி. பழுத்து உடையவேண்டிய நிலை. எவ்வளவு வலியிருக்கும் என்று அவரவர்களே ஊகித்துக்கொள்ளலாம். பழுத்து உடைந்தும் விட்டது. அவ்வப்பொழுது அந்த இடத்தை சுத்தி செய்து கொள்ளவேண்டிய நிலை. ஸ்ரீ மடத்து டாக்டர் வந்து இதை செய்வார். சுத்தி செய்தபின் ஸ்நானம் செய்தபின் தான் பூஜை செய்ய முடியும். இது தினசரி மூன்றுவேளை செய்யவே ண்டியது. பூஜை ஒவ்வொரு முறை முடிந்தபின் தான், டாக்டர் அதற்கு மருந்து போடமுடியும். இவ்வாறு மடத்து சம்பிரதாயத்தையும் விடாமல், தனது சரீரத்தின் இயலாமையையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தனதுபணியில் சிறிதளவும் பங்கம்வராமல், மேற்கொண்டார் என்பது எவ்வளவு பேர்களுக்குத்தெரியும்?
 
1954-ம் வருஷம், பீடத்துக்கு வந்த தினத்திலிருந்து, 64 வருஷங்கள்  சற்றும் ஓய்ச்சலையோ அல்லது ஒழிவோ இல்லாது, அவர்கள் செய்த பணிகள் எத்தனை, எத்தனை? இதை நான் இங்கு சொல்லவேண்டியது அனாவசியமே, ஆனால் நாடறியும். 1987-ல்  அவர்கள் இரவோடு இரவாக தலைக்காவேரி சென்று , அங்கு அகஸ்தியர் தவம் மேற்கொண்ட ஆஸ்ரமத்தில் தங்கி மௌனமாக சிலகாலம் தவம் இருக்கவேண்டி நேர்ந்தது. இது ஏன்? சிலரது வசைச்சொற்களையும், வசைமாரிகளையும் பொறுக்கும் விதமாகவே அவர்கள் இதை தன் தவமாக மேற்கொண்டார் என்பது சிலருக்கே தெரியும். அவ்வாறு அவர்கள் சென்ற பொழுதும், அவர்களது {குறை சொல்பவர்களுடைய} மனோபாவம் சிறிதும் மாறவில்லை. அது ஏன்? இன்றும் சிலரது அவர்களைக்குறித்த க்ரோத மனோபாவம் மாறவில்லையே? {ஸ்ரீ பகவான் கீதையில், மூன்றாவது அத்தியாயத்தில் சொன்ன, 37-வது ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது} அதற்குப்பின்பு அவர்கள் மேல்,  2006-ல், ஒரு பெரிய அவதூறும்  சுமத்தப்பட்டது, அவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தி, அவர்கள் கோர்ட்டுக்குச் செல்லும்படியாயிற்று. சிலகாலம், ஜெயிலிலும் இருக்க நேரிட்டது. கோர்ட்டில், ஜட்ஜின் கேள்விக்கு " நான் ஒரு குற்றமும் செய்யவில்லை "என்று  சொன்னதைத்தவிர வேறு ஒன்றுமே சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை. இதைத்தொடர்ந்து பல வேண்டத்தகாத செயல்களும் நடந்தன. எல்லாவற்றையும் பொறு த்துத்தாங்கினார்கள். ஆனாலும் அவர்கள் சற்றும்  அயராது, ஓர் ஆலமரம் போல் நிமிர்ந்து நின்றார்கள்.

2012-ம் வருஷம் அவர்கள் ஒரு குற்றமற்றவர்கள் என்று கோர்ட் தீர்ப்பு வந்து விடுதலையான பின்பு அவர்கள் முதன் முதலில் விடுத்த செய்தி:
1. வேத தர்மத்தை காக்க என்னென்ன வழிகள் உண்டோ அவற்றையெல்லாம் தொடங்க வேண்டும்.
2. நமக்கெல்லோர்க்கும் முன்னோடியான ஸ்ரீ பகவத் பாதர்களுடைய பெருமையை எல்லோரும் அறியுமாறும், விருத்தி செய்யுமாறும், அவர்களுடைய எல்லாக்கிரந்தங்களையும் லோகம் முழுக்கப்பரப்பவேண்டும்.
3. "லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து " என்பதற்கிணங்க, பொது ஜனங்களுக்கெல்லாம், உ தவும் வகையில் ஆவனம் செய்வதில் ஈடுபடவேண்டும். அவர்கள் எப்பொழுதும் சிரித்த முகமாகவே தான் காணப்பட்டார்கள். சைவ வைஷ்ணவ வேறுபாட்டை அவர்கள் என்றுமே கொண்டதில்லை. ஒரு வருஷம் மார்கழி மாதத்தில், அவர்கள் தினமும், காலை வேளைகளில், காஞ்சிபுரத்திலுள்ள ஒவ்வொரு வைஷ்ணவ ஸ்தலமாக சென்று தொழுது வந்தார்கள். காஞ்சியில் வரதராஜ ஸ்வாமி தேர் மிகவும் பழுது பட்ட நிலையில் இருந்தது. புதிய தேர் செய்ய வேண்டிய நிலை. தானே முன்வந்து, பல தனிகர்களை அண்டி அதற்கு வேண்டிய பணம் சேகரித்தார்கள். இப்பொழுது அங்கு உள்ளது. அவர்களால் செய்யப்பட்ட புதிய தேர். இது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும்? போன வருஷம் ஒரிஸ்ஸாவில், புவனேஸ்வரில், ஒரு பெரிய ஆஸ்பத்திரி நிறுவியிருக்கிறார்கள். தமிழ் நாடும், தமிழக அரசும், காஞ்சி மடத்திடம் வெறுப்பு காட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் தமிழ் நாட்டு  மக்களுக்கு, குடி தண்ணீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் இவற்றிற்காக  நிறைய செய்திருப்பார்கள். வேண்டாத வெறுப்பிலும், வேண்டாத அரசியலிலும் புகுந்து நம் தமிழ் மக்களும், தமிழ் நாட்டு அரசும், தன்னையே கெடுத்துக்கொண்டு, தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தலை விதி என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் மெத்த விருப்பம். குறிப்பாக, தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், புரந்தர தாசர், சதாசிவ பிரும்மேந்திரர் இவர்கள் கவனம் செய்த கிருதிகளை விரும்பிக் கேட்பார்கள். பஜனையில் ஈடுபாடும் உண்டு. சந்நியாசிகளுக்கே உரித்தான  ஸ்ரீமத் பாகவதத்தை  கிருஷ்ண ப்ரேமி சொல்ல கேட்க பெரிதும் விரும்பினார்கள்.
அவர்களுடைய கஷாய உடை எப்பொழுதும் முழங்காலுக்கு கீழே ஒரு அங்குலத்துக்கு மேல் எப்பொழுதும் இருக்காது. இரண்டு கால்களையும் சற்று அகட்டி வைத்து நேரான கூறிய பார்வை. முகத்திலேப்பொழுதும் தவழும் சிரிப்பு அல்லது புன்முறுவல்.
ஒரு சமயம் 1972-ல், பத்ரீயில்  அவருடன் கேம்ப் சென்ற சமயம், என்னிடம் அருகிலுள்ள பாண்டுகேஸ்வரம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது, என்னிடம் அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று அவர்கள் சொன்னது: " நாங்கள் ஒரு போதும் பெட்டி வைத்துக் கொள்வது இல்லை . இந்தத்துணியில் தான் எங்கள் புத்தகத்தை எல்லாம்  வைத்துக் கொள்வோம். இந்தப்புத்தகங்கள் தான் எங்கள் சொத்து, மற்றதெல்லாம் மடத்தை சேர்ந்ததே ." மற்றோரு சமயம், 2001-ம் வருஷம் என்று ஞாபகம். மும்பையில் S.I.E.S வளாகத்தில் தங்கியிருந்தார்கள். நான் அவர்களுடைய பக்கத்தில் இருந்தேன். அச்சமயம், பிர்லா குடும்பத்தினர், காலம் சென்ற ஆதித்ய பிர்லாவின் மனைவியார், சில உறவினர்களுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் அம்மாதரசியார், ஸ்ரீ பெரியவர்களிடம், " தாங்கள் சொல்லுங்கள். நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை செய்கிறோம்." என்று சொல்ல அதற்கு அவர்கள் சொன்ன பதில்  இதுவே. " தங்களது குடும்பத்தினர் நம் நாட்டுக்கும், எங்களது மடத்திற்கும், நிறையவே செய்திருக்கிறீர்கள். நம் நாட்டுக்கு நிறையவே இன்னும் செய்ய வேண்டியுள்ளது. " என்று சொல்லி அப்பொழுது தான் அணிந்த காஷாய துணியை காண்பித்து, " எங்களுக்கு இது போதும்." என்று பதிலிறுத்தார்கள். இவ்விரு சம்பவங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது  'உள்ளது போதும் ' என்ற மனப்பான்மையே. அவர்களைப்பற்றி இன்னும்  எவ்வளவோ சொல்லலாம் தான். இத்துடன் முடிக்கிறேன்.  
 
ச. சிதம்பரேச ஐயர்

கருத்துகள் இல்லை: