செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஆருத்ரா தரிசனம்

நாளை ஆருத்ரா தரிசனம் - திருவாதிரை 30.12.2020.

ஆடும் சிதம்பரமோ .....திருவாதிரையைப் பற்றி   எனக்கு தெரிந்ததை பதிவு செய்கின்றேன்.




சிதம்பரத்தில் ​மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.


​மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள். அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள்! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள். காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால்-ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள்.

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.​

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80 அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85 ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே ஈசன், அம்பிகை, கணபதி, சுப்ரமணியர், சண்டேசஸ்வரர் என்றே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.


தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் என்பதே திரு ஆறுமுகம் அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே நீங்களும், அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.


மேலும் மற்றொரு ​புராண​க் வரலாறு கூறுகின்றது,. உலகை இயக்கும் நடனம் இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும். சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம். பதஞ்சலி முனிவருக்கு அருள் பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார். உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம், ஞாயிறுக்கிழமை நடைபெறுகிறது. சனிக்கிழமை தேர் திருவிழாவும் இதனைத் தொடர்ந்து ஞாயிறு அதிகாலை, நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்பின்னர் பகல், 12 மணிக்கு மேல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். ​

அஸ்வினி நட்சத்திரம் முதல் புனர்பூசம் வரையில் திருவாதிரை உற்சவ காலமாகும். அதிகாலையில் எழுந்து குளம், ஆறு போன்ற நீர்நிலையில் குளிப்பது திருவாதிரை விரதத்தின் முக்கிய அம்சம். அசுவினியன்று அருணன் உதிக்குமுன், பரணியன்று வெள்ளி தோன்றுமுன், கார்த்திகையன்று காகம் கரையும்முன், மிருக சீரிஷத்தன்று மக்கள் உணருமுன் குளிக்கவேண்டும் என்பது திருவாதிரை ஸ்நானத்தின் முறை. மிதமான குளிரும் இதமான காற்றும் வீசும் சுகமான விடியற்காலை பொழுதில் இளம் பெண்களின் பாடல் ஒலி அலை அலையென மிதந்து வரும் நீர் நிலையில் அவர்கள் குதித்து கும்மாளமிட்டுக் குளிக்கும் ஓசை, செப்புப் பானையின் வாயை மூடிவிட்டுத் தட்டுவது போல் அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் காதுகளில் எதிரொலிக்கும்.

வீட்டுப் பெண்களும் மருமகள்களும் நீரில் தயிர் கடைவது போன்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள். படிக்கட்டில் நெருப்பின் அருகே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கிழவிமார்கள், தாம் மூட்டியிருக்கும் தீயின் சிறிய ஒளியில் இதைக் கண்டு இன்புறுவார்கள். குளித்துக் கரையேறிய இளம்பெண்கள், நெருப்பின் அருகில் குளிர் காய வரும்போது கிழவிகள் கடுங்குளிர்! தாங்கமுடியவில்லை! எல்லாவற்றையும் தாங்கும் பூமி மாதா போல் பெண்களும் பொறுமை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பார்கள். குளித்து முடித்தாகிவிட்டதா? வெள்ளாவியில் இட்டு வெளுத்த ஆடையை அணிந்துகொண்டு சாந்து, சந்தனம், மஞ்சள் பொட்டு, மை இவற்றை அணிந்து தச புஷ்பம் (பத்துப் பூக்கள்) சூடிய பிறகு கூட்டம் கூட்டமாக அவர்கள் பாடிக்கொண்டு வீடு திரும்புவார்கள்.

சிறு குளத்தில் துடி பரவியது; சிறு குன்றில் வெயில் பரவியது; வயலில் பசு பரவியது-உணர் உணர் என் குட்டிமாயே என்ற பொருள் கொண்ட அவர்களது பாட்டு சோம்பலால் தூங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை எழுப்புவதற்காக இருக்கலாம். அல்லது மகா மாயை தேவியைப் பற்றி உணர்த்துவதாக இருக்கலாம். திருவாதிரை நோன்பன்று அரிசி சேர்க்காத எல்லா வகை தின்பண்டங்களும் தயாராகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமாகக் கிடைக்கும் கிழங்குகளைக் கொண்டு செய்யும் ஒருவித கூட்டு, கூவக்கிழங்கு மாவினால் செய்த களி, இளநீர் இலை முக்கிய இடம்பெறும்.

அக்காலத்திலும் திருவாதிரை நட்சித்திரம் அறுபது நாழிகைக்குள் நூற்றெட்டு வெற்றிலை சாப்பிட வேண்டும் என்பது சுமங்கலிகளுக்கு முக்கியமான ஒரு சடங்காக இருந்தது. விளக்கை சாட்சியாக வைத்துக்கொண்டு அதன் எதிரில் கையில் பிடித்துக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் சிவனை எண்ணிக்கொண்டு நூற்றெட்டு வெற்றிலை சாப்பிடத் தொடங்குவார்கள். திருவாதிரை நட்சத்திரம் போல் அமைப்பு உள்ள கொடுவேலிப் பூக்கள் மார்கழியில் எங்கும் பூத்திருப்பதை கேரளாவில் காணலாம். இதை பாதிராப் பூ(நடு இரவுப் பூ) என்பார்கள் திருவாதிரை நட்சத்திரம் உச்சியை அடைந்துவிட்டது என்று அறிந்தவுடன் பாதிராப் பூ சூடுவார்கள் ஆருத்ரா நட்சத்திரத்தை நோக்கிப் பூக்களை அர்ப்பணம் செய்து பின்னர் வட்டமாக அமர்ந்து கைதட்டி விளையாடுவார்கள். திருவாதிரையின் பெருமையைப் பறைசாற்றும் பக்திப்பாடல்களை பாடுவார்கள். நிலவும் நிழலும் இன்பமாக இணைந்த முற்றத்தில் பெண்கள் மட்டும் விழித்திருப்பார்கள்.​

சிதம்பரம், உத்தரகோஷமங்கை போன்ற ஆலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது. ஆருத்ரா தரிசனம் காண வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர். திருவாதிரைக் களி ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு.

கருத்துகள் இல்லை: