வெள்ளி, 2 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்கை வரலாறு

இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 12

ஆளவந்தார் காஞ்சிபுரம் வருதல்
=====
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள்
என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான் - என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள்
திருக்கச்சி நம்பிகளின் குரு ஆளவந்தார் காஞ்சிபுரம் பேரருளாளனைத் தரிசிக்க வந்தார். அப்போது "இங்கே இளையாழ்வான் என்பது யார்? அவர் எங்கே இருக்கிறார்"  என்று இராமானுஜரைப் பற்றி தன் சிஷ்யன் திருக்கச்சி நம்பிகளிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் யாதவப் பிரகாசரிடம் காலட்சேபம் செய்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

'அவரிடம் போய் இவர் ஏன் காலட்சேபம் கேட்கிறார்? இவரை பிரித்து நம் வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்று நினைத்தார் ஆளவந்தார்.

அப்போது தான் இளையாழ்வான் சாலக்கிணற்றிலிருந்து கைங்கரியத்திற்கு நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அவரது திருமேனியைத் தூரத்தில் இருந்தவாறே  தரிசித்தார் ஆளவந்தார். இளையாழ்வானின் திருமேனி அழகையும், ஞான ஒளி வீசும் கண்களையும் கண்டு வைணவ தர்மத்தை நிலைநாட்ட தகுந்த முதல்வர் இவரோ என்று நினைத்தார்.

பிறகு நேரே காஞ்சி பேரருளாளனான வரதராஜப் பெருமாளின் சன்னிதிக்குச் சென்றார். அங்கே "இந்த இளையாழ்வானை தனக்கு அடுத்து வைஷ்ணவ சம்பிரதாயத்தை உலகெங்கும் பரப்ப நியமிக்க வேண்டும். அவரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்ப வேண்டும். அவர் தான் வைஷ்ணவ சித்தாந்தங்களை உலகெங்கும் பரப்பவேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். அதன்பின்  ஸ்ரீரங்கத்திற்குச் சென்று விட்டார் ஆளவந்தார்.

🍀🌸 மன்னன் மகளுக்கு மனநோய்

காஞ்சியை ஆண்ட மன்னனின் மகளுக்கு 'பிரம்ம ராக்ஷஸ்' பேய் (மனநோய்) ஒன்று பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. எந்த மந்திரத்திற்கும், தந்திரத்திற்கும் பணியவில்லை. அரசனோ மிகுந்த மனவேதனையுடன் யாரை அழைத்து அந்தப் பேயை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

மற்றவர்களின் சொல்லைக் கேட்டு யாதவப் பிரகாசரை அழைத்தார். யாதவப் பிரகாசரும் இளையாழ்வானுடன் வந்தார். யாதவப் பிரகாசரிடம், "உம்முடைய மந்திர வலிமையால் அது நீங்கும்படி செய்ய வேண்டும்" என்றார் மன்னன்.

யாதவப் பிரகாசரும் தன்னுடைய தவ வலிமையால் பிரம்மராக்ஷஸ் முன்பு மந்திரங்களை கூறினார். பிரம்மராக்ஷஸோ, "நீர் இங்கிருந்து உடனே போவீர்!"  என்றது. "உம்முடைய முற்பிறவி இரகசியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். நீர் இப்பிறவியில் ஏதோ சில அதிர்ஷ்டமான காரணத்தினால் இன்று இந்தப் பொறுப்பில் இருக்கிறீர். உம்மால் என்னை எதுவும் பண்ண முடியாது" என்றது மன்னனின் மகள் உடம்பில் இருந்த பிரம்மராக்ஷஸ்.

இதைக்கேட்ட யாதவர், "நான் இங்கே இருக்கக் கூடாது என்கிறாய். அப்போ நீ யார் சொல்லுக்குத்தான் கட்டுப்படுவாய்? யார் சொன்னால் நீ கேட்பாய்?" என்றார். பிரம்மராக்ஷஸோ அங்கு நின்று கொனண்டிருந்த இளையாழ்வானைக் கை காட்டியது.

இளையாழ்வானும் வந்தார். பிரம்மராக்ஷஸிடம், "நான் என்ன செய்தால் நீ இந்த பெண்ணின் உடம்பிலிருந்து வெளியேறுவாய்?" என்றார். நீர் உம்முடைய திருவடிகளை எடுத்து என் தலையின் மீது வைத்தாலே போதும். நான் சென்று விடுவேன் என்றது.

அங்கிருந்த மன்னன் உட்பட மக்கள் பலருக்கும் பெரும் ஆச்சரியம். இளையாழ்வான் தன்னுடைய காலைத் தூக்கி பிரம்மராக்ஷஸ் தலையில் வைத்தார். என்ன ஆச்சரியம்! உடனே பிரம்மராக்ஷஸ் ஓடி விட்டது. இதைக்கண்ட யாதவப் பிரகாசருக்கு மேலும் கோபம் அதிகமானது. எங்கே, தன்னுடைய கொள்கைகளைப் பரப்பி பெரிய ஆச்சாரியன் ஆகிவிடுவானோ என்று.

குருவை சிஷ்யன் மிஞ்சி விட்டான் என்று அனைவரும் பாராட்டத் தொடங்கி விட்டார்கள். இவற்றை எல்லாம் கேட்ட யாதவப் பிரகாசர் இளையாழ்வானிடம், "இனி என்னிடம் காலட்சேபம் பண்ண வர வேண்டாம்" என்று கூறிவிட்டார்.

இனி இளையாழ்வான் யாரிடம் காலட்சேபம் கற்றார்? மேலும், இளையாழ்வான் வாழ்க்கையில் என்ன மாற்றம் நடந்தது என்பதை இனிவரும் நாட்களில் அறியலாம்.
🌸🌸🌸🌸

 ஸ்ரீ ஆளவந்தார் திருநக்ஷத்திரம்.

உடயவரின் ஆச்சார்யார்களில் பிராதமானவர்.

ராஜாவாக இருந்தவர், அரங்கனால், மணக்கால் நம்பி மூலம்
ஆட்கொள்ளபட்டவர்.
நாதமுனிகளின் திருப்பேரர்.

ஸ்ரீரங்கத்தில் தவராசன் படித்துறை.

நமக்கு ஆழ்வரை அடையாளம் காட்டிய மஹான்.

நமக்கு ஆழ்வாரே,
மாதா,
பிதா,
மகன்,
சம்பத்,
எல்லாமே
என்று சிந்தை தெளிவித்தவர்.

"மாதா பிதா யுவதனயா விபூதிஸ்,
சர்வம் யாதேவ நியமேன
மதந்வயானாம்,

ஆத்யஸ்தநஹ குலபதேர் வகுளாபி ராமம்,

ஸ்ரீமன் ததங்க்ரியுகலம் பிரனாமி மூர்த்நா."

நாதமுனிகள்
உயன்கொண்டார்
மணக்கால் நம்பி
ஸ்ரீ ஆளவந்தார்,
உடையவர்...

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி!!


கருத்துகள் இல்லை: