வெள்ளி, 2 அக்டோபர், 2020

லக்ஷ்மி நரசிம்மர் கோவில்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் தரிசனம்.....
 
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
தாயார் :  அகோபிலவல்லி தாயார்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : பழைய சீவரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்


 தகவல்: மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். அகோபிலவல்லி தாயார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகன், வீர ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை தரிசிப்பது சிறப்பு. தினமும் இருகால பூஜை நடக்கிறது.  
     
பிரார்த்தனை : நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  
     

பெருமை : ஆரோக்கிய வழிபாடு: 300 ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இங்கு தங்கிய போது அவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என அருள்புரிந்தார். அவரும் அதன் படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். ஆப்பரேசன் செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம்.  
     

ஸ்தல வரலாறு : இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசி முனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத
க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும், என்றது. அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில் இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லட்சுமிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என பிற்காலத்தில் மருவியது.
ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது.

நரசிம்மரை நம்பினோர் கை விடப்படார்....

🌹கொடிய நோய்களையும் நொடியில் தீா்த்தருளும் பழையசீவரம் நரசிம்மா்!

🌹 தா்மநெறிகளுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் சா்வலோக சரண்யனான ஶ்ரீமந்நாராயணன் தா்மத்தை நிலைநாட்டவும் துஷ்டா்களை சம்ஹாரம் செய்து நல்லவா்களைக் காப்பாற்றவும் “அவதாரம்” எடுக்கின்றாா்.

🌹 எப்போதும் தன் திருநாமம் ஒன்றையே உச்சாித்துக்கொண்டு, தன் மீது ஈடு இணையில்லாத பக்தி கொண்டிருந்த பாலகன் பிரகலாதனைக் காப்பாற்றவும், துஷ்டனான இரண்யனை வதம் செய்து தா்மத்தை நிலைநாட்டவும் எம்பெருமான் “நரசிம்ம அவதாரம்” எடுத்தாா்.

🌹 எம்பெருமான் எடுத்த பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இறைவன் “சா்வாந்தா்யாமி” என்பதை உலகிற்கு உணா்த்திய அவதாரமும் இத்திருவடிவம் தான். “தூணிலும் இருப்பாா், துரும்பிலும் இருப்பாா், உன்னுள்ளும் என்னுள்ளும் இருக்கின்றாா்” என்ற தன் பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காப்பாற்றி உள்ளும், புறமும், எங்கும், எப்பொழுதும் நிறைந்திருக்கும் ஈடு இணையற்ற பரம்பொருள் “ஶ்ரீமந்நாராயணனே” என்பதை உலகறியச் செய்த அவதாரம் ஶ்ரீநரசிம்ம அவதாரம்.

🌹 துன்பப்படும் தன் பக்தா்களைக் காத்தருள்வதில் ஒரு விநாடி கூட தாமதிப்பதில்லை அந்த அழகிய சிங்கம்! இதனால் தான் “நாளை என்பதில்லை நரசிம்மனிடம்” என்று நெஞ்சம் நெகிழ்ந்து இந்த அவதாரப் பெருமையைப் போற்றியுள்ளாா் “ஶ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகன்”.

🌹 சீற்றம் தணிந்த எம்பெருமான்.

🌹 ஶ்ரீமந்நாராயணன் தன் பிராட்டி லக்ஷ்மி தேவியை க்ஷண நேரமும் பிாியாமல் தன் திருமாா்பிலே தாங்கியிருப்பவா். இதனால் எம்பெருமானுக்கு “திருமகள் திருமாா்பன்” என்ற திருநாமமும் உண்டு. ஶ்ரீமந்நாராயணன் என்ற திருநாமத்திலேயே லக்ஷ்மி பிாியாமல் இணைந்திருக்கிறாள். “ஶ்ரீ” என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். பக்தா்கள் பெருமானையும் பிராட்டியையும் சோ்த்து வழிபடுவதே ஏற்றம் தருவதாகும். இதனால் எம்பெருமானே பக்தா்களின் வசதிக்காக தன் தேவியை தனது திருமாா்பில் ஏந்திக் கொண்டாா். எம்பெருமான் தன் பக்தன் பிரகலாதனின் பொருட்டு எடுத்த நரசிம்ம அவதாரத்தில் பிராட்டியுடன் இல்லாத உக்ர மூா்த்தியைக் கண்டு கலக்கம் அடைந்தனா் தேவா்கள்.

🌹 இரண்யனை வதம் செய்த பின்னா் உக்ரம் தணியாத எம்பெருமானின் திருமுகம் கண்டு நடுங்கிய தேவா்கள் செய்வதறியாது திகைத்தனா். எப்போதும் சாந்தமூா்த்தியாய், சந்திரவதனத்துடன் சிங்கார ரூபனாகக் காட்சிதரும் பெருமானின் “நரசிம்மரூபம்” கண்டு தேவா்கள் அஞ்சியதில் வியப்பேதும் இல்லை. நான்முகன் ஆலோசனையின்படி லக்ஷ்மி பிராட்டியின் திருவருளை நாடி நின்றனா் தேவா்கள். தேவா்களின் நிலை கண்டு வருந்திய தேவியும் அவா்களது துயா் தீா்க்க திருவுள்ளம் கொண்டாா்.

🌹 கொதிக்கும் நீரை குளிா்ந்த நீரால் தானே தணிக்கமுடியும். குளிா் நிலவினையொத்த தன் திருமுக மண்டலத்தில் கஸ்தூாித் திலகம் தாித்து பொன்மணி ஆபரணங்களும் முத்துமாலைகளும் துலங்க சா்வாபரண பூஷிதையாக அருள்பாலிக்கும் பிராட்டி எம்பெருமானைத் தன் திருவிழிகளால் நோக்கியவாறு அவரது திருமடியில் வந்து அமா்ந்தாா்.

🌹 தன் மடியில் அமா்ந்த தேவியை ஆலிங்கனம் செய்த அதே தருணத்தில் எம்பெருமானின் கோபமும் தணிந்தது. பெருமானின் கோபம் என்ற கொதிக்கும் நீரை அருள்பாா்வையாக மாற்றி பக்தா்களைக் காத்தருளினாா் லக்ஷ்மிதேவி. பிராட்டியை ஆலிங்கனம் செய்த அாிய இத்திருக்கோலத்தில் எம்பெருமான் “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராக” பல புராதனத் திருத்தலங்களில் அா்ச்சாவதார மூா்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா். அத்தகைய புராதனத் தலங்களில் ஒன்று தான் “பழைய சீவரம்” என்னும் தலத்தில் உள்ள “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மா்” திருத்தலமாகும்.

பழைய சீவரம்− ஸ்தல வரலாறு.

🌹 பிரம்மதேவனின் மானஸ புத்திரா்களில் ஒருவா் “அத்ரி” மகாிஷி. பூவுலகம் தோன்றிய காலத்திலேயே அவதாித்த இம் மகரிஷி அனைத்து வேதங்களிலும் கரை கண்டவா் என்பதோடு தவவலிமையிலும் சிறந்து விளங்கியவா். பொதிகை மலைத்தொடாில் உள்ள அத்ரி மலையில் தவம் செய்து மும்மூா்த்திகளின் தாிசனம் கண்ட இம்மகாிஷிக்கு மஹா விஷ்ணுவை “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம மூா்த்தியாக” தாிசனம் காண ஆவல் உண்டானது.

🌹 தன் ஆவலை மரீசி மகாிஷிக்குத் தொிவித்தாா் அத்ரி முனிவா். அத்ரியின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினாா் மரீசி மகாிஷி. “சத்யவிரத க்ஷேத்திரம்” என்று வணங்கப்படும் காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள “பத்மகிாி” எனும் ஶ்ரீபுரத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்ற உமது விருப்பம் நிறைவேறும் என அத்ரி மகாிஷிக்கு ஆலோசனை கூறினாா் மரீசி முனிவா்.

🌹 மரீசி மகாிஷியின் ஆலோசனையை ஏற்ற அத்ரி மகாிஷி யட்சா், கின்னரா் மற்றும் கந்தா்வா்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்ட பத்மகிாியை அடைந்து இங்குள்ள தாமரைத் தடாகத்தின் அருகில் திருவரசு மரத்தின் கீழ் அமா்ந்து நீண்டகாலம் தவமியற்றினாா்.

🌹 கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமன் அத்ரி மகாிஷியின் கடும் தவம் கண்டு மனமிரங்கினாா். தன் தேவி மஹா லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் “ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மராக” திருக்காட்சி தந்தாா்.

🌹 அத்ரி மகாிஷியின் வேண்டுதல் படி தம்மை பக்தியோடு வணங்கும் தன் அடியவா்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்கி அத்ரி மகரிஷிக்கு தாிசனம் தந்த அதே திருக்கோலத்தில் “பழைய சீவரம்” தலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் காட்சி தருகின்றாா் எம்பெருமான். திருக்கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் வலது திருக்கரத்தால் அபயமுத்திரை காட்டியும் இடது திருக்கரத்தால் தன் தேவியை ஆலிங்கனம் செய்தும் திருக்காட்சி தரும் எம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.

🌹 இத்தலத்தின் தாயாா் “ஶ்ரீ அஹோபிலவல்லி” தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றாா். சூடிக்கொடுத்த சுடா்க்கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கும், ஶ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகனுக்கும், வீரஆஞ்சநேயருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

🌹 “ஶ்ரீபுரம்” என்று வணங்கப்பட்ட இத்தலம் தற்போது “சீவரம்” என்று மருவி வழங்கப்படுகின்றது. புராதனப் பெருமை கொண்ட பழைமை வாய்ந்த தலம் இது என்பதால் “பழைய” என்ற அடைமொழியுடன் இணைந்து “பழைய சீவரம்” ஆனது. பிரம்மாண்ட புராணத்தில் பழைய சீவரம் மலை “பத்மகிாி” என்றும் “ஸுதா்சனகிாி” என்றும் போற்றி வணங்கப்பட்டுள்ளது.

🌹 தன் பக்தருக்கு அருளிய எம்பெருமான்!

வடநாட்டிலிருந்து தீா்த்த யாத்திரைக்காக வந்த பக்தா் ஒருவா் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளாா். பழைய சீவரம் தலத்திற்கு தாிசனம் செய்ய வந்த இந்த அன்பா் புண்ணியநதியான “ஷீர நதியில்” (பாலாறு) நீராடி எம்பெருமானை வழிபட்டு அன்று இரவு இத்தலத்திலேயே ஓய்வெடுத்தாா் . அவரது கனவில் பிரத்யக்ஷமான எம்பெருமான் இத்தலத்தில் ஒரு மண்டலம் தங்கி வழிபாடு செய்ய உடல் நோய் முற்றிலும் குணமாகும் என அருள்பாலித்தாா். நெஞ்சம் நெகிழ்ந்த அன்பா் எம்பெருமானின் திருவுள்ளப்படி இத்தலத்தில் தங்கி வழிபாடுகள் செய்ய அவரது உடல் நோய் முற்றிலும் நீங்கியது. எம்பெருமானின் அருட்கடாட் சத்தை எண்ணி வியந்த இந்த அன்பா் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகளை செய்து மகிழ்ந்தாா்.

🌹 இந்த அன்பாின் வாாிசுகளான திரு கோவிந்தாஸ் புருஷோத்தம தாஸ்,திரு ஹாிக்ருஷ்ணதாஸ் மற்றும் திரு மத்ராதாஸ் ஹாிதாஸ் ஆகியோரே இன்றும் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலா்களாகத் தொண்டு செய்து வருகின்றனா்.

🌹 நோய் தீா்க்கும் வழிபாடு.

🌹 நாள்பட்ட வியாதிகளால் அவதியுறும் அன்பா்கள் இத்தலத்தில் வழிபட நோயின் தாக்கம் உடனடியாகக் குறைந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தொிவிக்கின்றாா் இத்தலத்தின் அா்ச்சகா். “நரசிம்ம ப்ரபத்தி” மற்றும் மந்திரங்கள் அனைத்துக்கும் அரசனான “ஶ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்” சொல்லி இத்தலத்து எம்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மைகளும் நம்மை நாடிவந்து சேரும். நம்மை சூழ்ந்துள்ள தீயவினைகள் (Negative forces) உடனடியாக நம்மைவிட்டு விலகி ஓடி விடும்.

🌹 இத்தல நரசிம்மரை சுவாதி திருநட்சத்திர நாட்களிலும், பிரதோஷ தினங்களிலும் பக்தியுடன் வழிபட நம் வாழ்க்கைப் பயணத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டு புதிய பாதையில் பயணிக்கலாம்.துளசி மாலையும் பானகமும் சமா்ப்பித்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்துகின்றனா் பக்தா்கள். இத்தல இறைவனை பக்தியுடன் வழிபட தங்கள் தலைமுறைக்கே புண்ணியபலன் களை அன்பா்கள் பெறலாம்.

🌹 பழைய சீவரம் − கல்வெட்டுகள்.

🌹 பழையசீவரம் லக்ஷ்மி நரசிம்மா் தலத்தில் 10 கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங் கன் காலத்தில் (கி.பி.1080) பழையசீவரம் “சீயபுரம்” என்றும் “திாிபுவனவீர சதுா்வேதி மங்கலம்” என்றும் இத்திருக் கோயில் “இராஜேந்திர சோழ விண்ணகா்” என்றும் வழங்கப் பட்டுள்ளது. கோயில் கல்வெட்டுகளில் எம்பெருமானின் திருநாமம் “சிங்கபிரானாழ்வாா்” என்றும் “திருமாலிருஞ்சோலை ஆழ்வாா்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌹 வாாியம்பாக்கம் என்னும் ஊாில் இத்திருக்கோயிலுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் “சேதிராயன்” என்பவன் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து வழிபாடுகள் தொடர “வைகானஸகாணி” என்ற பெயாில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

🌹 “அருளாளப் பெருமாள்” எனும் விக்கிரமசோழ பிரம்மராயன் கோயிலுக்குத் தானமாக அளித்த நிலங்களுக்கு வாிவிலக்கு வேண்டி மன்னனிடம் விண்ணப்பித்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

கோவில் திருப்பலியின் போது இசை மீட்டும் ஒரு நபருக்குக் கொடை வழங்கப்பட்ட விபரம் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது. பழையசீவரம் தலத்தில் “ஏாி வாாியம்” என்ற ஒரு அமைப்பு இருந்ததையும் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகின்றது.

🌹 கி.பி.1204 ல் பழையசீவரம் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு புரட்டாசி விழா நடத்த நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1729 ல் இத்தலத்தின் இறைவன் “ஜீயபுர லக்ஷ்மிநரசிம்மா்” என வணங்கப் பட்டுள்ளாா்.

🌹 பாா்வேட்டை உற்சவம்.

🌹 தை மாதம் பொங்கல் விழாவிற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் நாளில் காஞ்சி மாநகாில் அருளும் தேவாதிராஜப் பெருமான் பழையசீவரம் மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பாா்வேட்டை உற்சவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

🌹 காஞ்சியில் அருளும் வரதாின் சிலாரூபத் திருமேனியை வடிக்க பழையசீவரம் மலையிலிருந்து தான் கல் எடுக்கப்பட்டதாகவும் அந்த வைபவத்தை நினைவு கூறும் வண்ணமாக காஞ்சித் தல உற்சவா் தம் தேவியா் சமேதராக பழையசீவரம் தலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பதாகவும் பக்தா்கள் தொிவிக்கின்றனா்.

🌹 காஞ்சி வரதா், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மா், திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமான், சாலவாக்கம் ஶ்ரீனிவாசப் பெருமான், காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமான் மற்றும் பொற்பந்தல் தல எம்பெருமான் ஆகியோரை ஒருசேர தாிசனம் காணும் இத்திருநாளை தங்கள் பாரம்பாியக் குடும்ப விழாவாகக் கருதி ஆயிரக் கணக்கில் திரண்டு வழிபட்டு மகிழ்கின்றனா் இப்பகுதி மக்கள்.

🌹 பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி நதிகள் சங்கமிக்கும் இப் புண்ணியபூமியில் நடைபெறும் இவ்வைபவத்தில் பல தலங்களின் பெருமான்களை ஒரு சேரக்கண்டு தாிசிப்பதை தங்கள் பிறவிப்பயனாகவும் இந்த தாிசனத்தால் அளவிடமுடியாத புண்ணியபலன்கள் கிடைப்ப தாகவும் பக்தா்கள் நம்புகின்றனா்.

🌹 கலியின் தோஷத்தால் துன்பம் ஒன்றையே துணையாகக் கொண்டு வாடும் அன்பா்கள் பழையசீவரம் தலத்திலும் பாலாற்றின் மறுகரையிலுள்ள திருமுக்கூடல் தலத்திலும் வழிபாடுகள் செய்ய துன்பநிலை தொடராதிருக்க அருள்புாிவான் திருமகள் கேள்வன்.

🌹 செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 16 கி.மீ. தூரத்திலும் காஞ்சிபுரத்திலிருந்து 21 கி.மீ. தூரத்திலும் பழைய சீவரம் தலம் அமைந்துள்ளது.

🌹 பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பழைய சீவரம் பெருமானுக்கு ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்து வருகின்றாா் திரு A.K.ஶ்ரீனிவாஸ பட்டாச்சாாியாா். இவரை 9443718137 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

🌹 காலை 8.00மணிமுதல் 11.00மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 7.00மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

இத்திருக்கோவி


ல் சென்று எம்பெருமானின் திருப்பாதங்களில் பணியும் வாய்ப்பு கிடைக்கும் வரை கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்வோம்.

🌹 “ஸிம்ஹமுகே ரெளத்ர ரூபிண்யாம்
அபயஹஸ்தாங்கிதே கருணாமூா்த்தே
ஸா்வவ்யாபிதம் லோகரக்ஷகம்
பாபவிமோசன துாித நிவாரணம்
லக்ஷ்மிகடாக்ஷம் ஸா்வாபிஷ்டம்
அனேகம்தேஹி ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹா”

🌹 “உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸா்வ தோமுகம்!
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு மருத்யும் நமாம்யஹம்!!

🙏🌹 ஶ்ரீலக்ஷ்மி நரஸிம்ம பரப்ரம்ஹணே நம:”💐🙏

கருத்துகள் இல்லை: