ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 15
பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு
திருக்கச்சி நம்பிகளிடம் ஆளவந்தார் திருவரங்கத்திற்கு இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாக சொன்னார் அல்லவா, பெரிய நம்பிகள்?
அந்த காலத்தில் குரு சிஷ்யன் எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் உடனே முன்னாடி போய் பேச மாட்டார்கள். ஒருவரிடம் பேசவேண்டும் என்றால் தனக்குத் தெரிந்ததை முதலில் வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் அடுத்த நாள் காலை நீராடிவிட்டு பெரிய நம்பியும் தான் ஆளவந்தாரின் சிஷ்யன் என்று சொல்லாமல், காஞ்சி பேரருளாளன் முன்பு பாடுகிறார் ஆளவந்தார் இயற்றிய தோத்திர ரத்தினத்தை.
"ஸ்வாதயந்நிஹா சர்வேஷாம் |
த்ரயந்தார்தம் ஸூதுர்க்ரஹம் ||
ஸ்தோத்ரயாமாச யோகின்ற |
தம் வந்தே யமுனாஹ்வயம் ||"
(சாதாரணவர்கள் வேதார்த்தத்தை புரிந்துகொள்வது வெகு கடினம். அப்படிப்பட்டோருக்காக வேதார்த்தத்தின் மீது ஈர்ப்பும் புரிதலும் ஏற்பட ஸ்தோத்திர ரத்தினத்தை வழங்கிய ஸ்ரீ யமுனாச்சாரியாருக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவிக்கின்றேன்.)
"நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||
நமோ நமோ யமுனாய |
யமுனாய நமோ நமஹ ||"
(ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்; ஆளவந்தருக்கு நமஸ்காரம், ஆளவந்தருக்கு நமஸ்காரம்!)
"நமோ சிந்யாத்புதாக்லிஷ்ட
ஞான வைராக்கிய ராசாயே..."
இதற்கிடையில் திருமஞ்சனத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்த இளையாழ்வானின் காதுகளில் இந்த தோத்திரம் பாய்ந்தது. அவர் மெய் மறந்து அப்படியே நின்றுவிட்டார். பெரிய நம்பிகள் பாடி முடிக்கும் வரை அங்கேயே நின்றார் இளையாழ்வான்.
தோத்திரம் முடிந்ததும் அவரிடம், "இந்த தோத்திர ரத்தினம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க அவரோ "இது ஆளவந்தார் இயற்றியது. ஆளவந்தார் என் குரு" என்கிறார்.
இளையாழ்வானுக்கு எப்படி தோத்திர ரத்தினம் பற்றி தெரியும் என்றால் திருக்கச்சி நம்பிகளும் தன் குருவான ஆளவந்தார் பற்றியே ஜெபம் பண்ணுவார். ஒருமுறை இளையாழ்வான் அவரிடம் "எந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார். அப்போது "ஆளவந்தார் திருநாமத்தைச் சொல்லி ஜெபம் செய்கிறேன்" என்றார் திருக்கச்சி நம்பிகள். தோத்திர ரத்தினம் பற்றி மேலும் சொல்லி இருக்கிறார் திருக்கச்சி நம்பிகள்.
இப்போது பெரிய நம்பிகள் பாடவும், இந்த பாடல் அவருக்கு எப்படி தெரியவந்தது என வினவுகிறார்.
அப்போதுதான் இளையாழ்வானைக் கண்ட நம்பிகள், அவரிடம் வைஷ்ணவத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்பதற்கான எல்லாத் தகுதியும் இருக்கக் கண்டார். ஆளவந்தார் தம்மிடம் இளையாழ்வானை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்கிறார். இளையாழ்வான் அவருடன் சென்றாரா என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
பெரிய நம்பிகள் வைபவம்.....
அரங்கன் முன்பு அனைவரும் சமமே என்றவர் ராமானுஜர்.
தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பிக்கு,ஈமக்கிரியைகளை செய்து,ராமானுஜரை ஊக்குவித்தவர்,ராமானுஜரின் ஆச்சார்யரான பெரிய நம்பிகள்.ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்,ஜாதி பேதம் இல்லை என்பதை,உலகறியச் செய்தவர் பெரிய நம்பிகள்...
ஆளவந்தார் (என்னும் ஆசாரியர்) அவதரித்து, 21 ஆண்டுகள்
கழித்து, கி.பி.997-998 ஹேவிநம்பி வருடத்தில்,மார்கழி
மாதத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில், புதன் கிழமை
ப்ருஹச்சரண ப்ராஹ்மண குலத்தில், பாரத்வாஜ கோத்திரத்தில்
ஸ்ரீ பராங்குஸதாஸர் என்னும் திருநாமம் உடையவராய்,
குமுதர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக அவதரித்தவர் பெரியநம்பி.
எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)
செய்த ஆசார்யர் இவர். ஆகையால்தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், "பெரியநம்பி" என்று அழைக்கப்பெற்றார்
ஆளவந்தார் நியமனத்தின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்துவந்தார். ஆளவந்தார் காலத்திற்கு
பின், ஆளவந்தாருடைய மற்ற சீடர்களாலே ப்ரார்த்திக்கப்பெற்ற இவரே,ஸ்ரீ ராமானுஜருக்கு ஸமாஸ்ரயணம் செய்து அழைத்து வருவதற்காகஸ்ரீ காஞ்சிக்குப் புறப்பட்டார். அதே சமயம், தேவப்
பெருமாளின் (ஸ்ரீ வரதராஜர்) நியமனம் பெற்று, பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். ஒரே நோக்குடன்புறப்பட்ட இருவரும்,
மதுராந்தகம் ஏரி காத்தபெருமாள் கோயிலிலே சந்திக்க,
அங்கு "ஸ்ரீ ராமானுஜ ஸமாஸ்ரயணம்" நடைபெற்றது.
பெரியநம்பிகள் தம் ஆசார்யரான ஆளவந்தாரின் மற்றொரு
சீடராய், தாழ்ந்த குலத்தில் தோன்றிய மாறனேறி நம்பி, ஆளவந்தாரை ராஜபிளவை என்னும் கொடிய நோய் தாக்க, அவருடைய புண்ணைக் கழுவி, மருந்திட்டு, உணவும் அளித்து கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.
அதனால், மற்ற பிராமணர்கள் அவரைத் திட்டுவதையும்
அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு சமயம், ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் அனுபவிக்கும் உபாதை நோயைத்
தனக்குப் பிரசாதமாக அளிக்கவேண்டும் என்று வேண்ட, ஆளவந்தாரும் அவரது ஆசார்ய பக்தியைப் பார்த்து மகிழ்ந்து,
தன் நோயை மாறனேரி நம்பிக்குக் கொடுத்தார்.
அந்தக் கொடியநோயை வாங்கிக் கொண்டதால்,
மாறனேறி நம்பி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே,
இந்தப் பூத உடலை விட்டு அகன்று, திருநாடு அலங்கரித்தார்.
அவர் இறந்த பின்பு இறுதிக் காரியங்களைச் செய்ய எவருமே முன்வரவில்லை. அப்போது பெரியநம்பி,
மாறனேறி நம்பியின் தியாக உள்ளத்தை மெச்சி, அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பாராமல், ஆசார்ய பக்தியில்,
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயதத்திற்கே ஏற்றம் அளித்தவர் என்று போற்றி, மாறனேர் நம்பியின் உடலுக்கு இறுதி
சம்ஸ்காரங்களைச் செய்தார்.
பெரியநம்பியின் இச்செயல், வைஷ்ணவர்களைச் சினம்
கொள்ளச் செய்தது. “உயர்குலத்தில் பிறந்த பெரிய நம்பி,
தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவரின் ஈமக்கிரியைகளை
எப்படிச் செய்யலாம்?” என்று கூக்குரலிட்டார்கள்.
பெரியநம்பி வயதில் மூத்தவர். ஆளவந்தாரின் அருமைச் சீடர். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல்,
வைஷ்ணவர்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள். எவரும்
அவரிடம் நீரும் நெருப்பும் பெறக்கூடாது என்றும்
உத்தரவிட்டார்கள். ஆனால் பக்தராகிய பெரியநம்பி அதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. இதய புண்டரீகத்திலே
வாசம் செய்யும் பெருமாளைப் பூஜித்து வணங்கிவந்தார்.
மிகச் சிறந்த ஞானியாகத் திகழ்ந்த பெரிய நம்பிகளுக்கு
அத்துழாய் என்ற மகள் இருந்தாள். துளசி என்பதற்கு
திருத்துழாய் என்று பெயர். அதனையே பெரியநம்பி,
தம் மகளுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.
ஆனால் பெரியநம்பியின் மகள் அத்துழாய் வைஷ்ணவர்கள்,
தங்கள் தந்தைக்கு இழைத்த அநீதியைக் கண்டு உள்ளம்
கொதித்தாள். அவள் நாள்தோறும் கோவிலுக்குச் சென்று
அரங்கராஜப் பெருமாளைச் சேவித்து வந்தாள். தன் தந்தை
பூஜை செய்யும்போது உதவி செய்தாள். வைஷ்ணவர்கள்
தந்தைக்கு எதிராகச் செய்த செயலை என்றாவது ஒரு நாள்,
தவறு என்று அவர்கள் அறியச் செய்ய வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.
அவளுடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் விரைவிலே
அத்தகைய வாய்ப்பு ஒன்றை அளித்தது. ஸ்ரீரங்கநாதர் வருட உற்சவத்திலே வீதி உலா வந்து கொண்டிருந்த நேரம். மங்கல வாத்யங்கள் முழங்க, சேவார்த்திகள் பெருமாளைச் சுமந்த
வண்ணம் வீதியிலே வந்துகொண்டிருந்தார்கள். வண்ணச் சப்பரத்திலே பெருமாள் சர்வாலங்காரங்களுடன் புன்முறுவல் பூத்தவண்ணம் காட்சிதந்தார்.
வீதிவீதியாக உலாவந்து அடியவர்களுக்கு தரிசனம் தந்து ஆட்கொள்ளும் எம்பெருமான் வீதியுலா பெரிய நம்பிகளின்
வீதிக்கும் வந்தது. வீட்டினுள்ளே இருந்து அத்துழாய் வீதிக்கு
ஓடோடி வந்தாள். வணங்கினாள். நேருக்கு நேராக நின்றாள்.
“பெருமாளே! நான் கூறுவதைக் கேளும். இதோ இங்கே
உங்களைச் சுமந்தும், உங்கள் புகழைப் பாடிக்கொண்டும் வருகிறவர்கள் அனைவருமாகக் கூடி என் தந்தை செய்தது
மாபாதகச் செயல் என்று கூறுகிறார்கள். அப்படி என்ன செய்தார் என்பதைக் கூறுங்கள். அனைத்தும் அறிந்த தங்களுக்குத்
தெரியாதது ஒன்றுமில்லை. பெருமாளே கதி என்றும் ஆசார்யரே தெய்வம் என்றும், சேவை புரிந்து வந்த மாறனேர்நம்பிக்கு, என் தந்தை ஈமக்கடன் செய்து விட்டார். இது தவறா? பதில்
கூறிவிட்டு இங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள்.” என்று
அத்துழாய் ஆணையிட்டு விட்டாள்.
“மொய்த்துக் கண்பனிசோர மெய்கள்
சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
ஆடிப்பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்
மற்றையார் முற்றும் பித்தரே!”
“பரமனை நினைத்து கண்ணீர் சோர ஆனந்தக் கண்ணீர் பெருக
உடல் மயிர்க் கூச்செரிய ஏங்கித் தவித்து, கூத்தாடி பலவிதப் பாட்டுகள் பாடி வணங்கி எந்தையும் என் அண்ணனுமான
அரங்கப் பெருமாளைப் பற்றியவர் பித்தர் அல்லர். அவர் பால்
பற்று இல்லாதவரே பித்தர் என்று குலசேகர ஆழ்வார் பாடியது உண்மையல்லவா? யார் பக்தர்? பெருமாளே கூறிவிட்டுச் செல்லுங்கள்.”
என்று அத்துழாய் ஆவேசம் வந்தவள் போலப் பேசி முடித்தாள். அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.
உடனே வீதிஉலா வந்த அரங்கன் வாய் மலர்ந்தார்.
“மாறனேர் நம்பிக்கு, பெரியநம்பி செய்த ஈமக்கிரியைகள்
நமக்கும் சம்மதமே! நாம் ஒப்பிய பரமபாவனமான செயலே!”
என்று பெருமாள் அசரீரியாக அருள் மொழி கூறியதும்
அத்துழாய் பூரித்தாள்.
வீட்டினுள்ளே அடைந்து கிடந்த பெரிய நம்பியும் அதைக் கேட்டுக் கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீரங்கநாத வீதி உலாவுக்கு வந்திருந்த வைஷ்ணவர்கள் அனைவரும் விதிர் விதிர்த்தார்கள்.
சிறுபெண் என்று அத்துழாயை எண்ணிய அறிவீனத்தை நினைத்து ஊரார் வருந்தினார்கள். தாம் செய்ததை எண்ணி வருந்தி, பெரிய நம்பிகளுக்குச் செய்த அபசாரத்திற்காக மன்னிப்புக் கோரினார்கள்.
அத்துழாயியின் பக்தியும் தீரமும் வைணவ உலகிலே புதிய சகாப்தத்தை நிலை நிறுத்தியது.
இதை அறிந்த எம்பெருமானார், வர்ணாஸ்ரம தர்மத்தின் வரம்பை மீறி நீர் இப்படிச் செய்யலாமோ என்று பெரியநம்பிகளிடம் கேட்க, நம்பிகள் அதற்கு,
சாமான்ய தர்மத்தை நிலைநாட்டுகிற சக்கரவர்த்தித்
திருமகனார் (ஸ்ரீ ராமர்), பக்ஷி ஜாதியான (பறவை) ஜடாயுவுக்கு இறுதிச் சடங்ககுகளைச் செய்தாரே! அவரிலும்நான் பெரியனோ? அந்தப் பறவையைக் காட்டிலும், இவர் (மாறனேறி நம்பி
சிறியவரோ? என்றும்,
மேலும் யுதிஷ்டிரர் (தருமர்) விதுரருக்கு (தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகத் தோன்றியவர்) இறுதிக் கிரியைகள் செய்தாரே! நான் என்ன யுதிஷ்டிரரைக் காட்டிலும் பெரியவனோ? மாறனேறி நம்பி விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? என்றும்,
மேலும், நம்மாழ்வார், "பயிலும் சுடரொளி"
(திருவாய்மொழி, 3.7) என்ற பதிகத்திலும்,
"நெடுமாற்க்கடிமை"(திருவாய்மொழி, 8.10) என்ற பதிகத்திலும், பாகவதர்களின் (பெருமானின் அடியார்கள்) சிறப்பைக்கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும்,"என் கொழுகுலந் தாங்களே"
என்றும் கூறினவையெல்லாம் வெறும் வெற்று
வார்த்தைகளோ? அவை நடப்பிற்கு ஒத்துவராததோ?
என்றும் கேட்டு பாகவத உத்தமர்கள் எல்லாவற்றாலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்பதை நிலை நிறுத்தினார்.
இவற்றைக் கேட்ட எம்பெருமானாரும் சந்தோஷம் அடைந்தார். இவற்றையெல்லாம் தாம் அறிந்திருந்தாலும், பெரியோர்
மூலமாக உணர, உணர்த்தவேண்டும் என்பதற்காகவே
கேட்டேன் என்றாறாம் எம்பெருமானார்.
ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து
கொண்டிருக்க, அவருக்குப் பெரியவரான பெரிய நம்பிகள்
கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின் காலில் பெரியவர் விழலாமா, அதுவும் ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று
கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன்
ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே இருந்ததால்,
இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந்தாராகவே
பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம் .
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ஊறி, அதன்
அமுதச் சுவையை நன்கு புருகியவர் ஸ்ரீ ராமானுஜர்.
இதனாலேயே அவருக்குத் "திருப்பாவை ஜீயர்" என்ற
பெயருமுண்டு. ஒரு நாள் காலை, இப்படி அவர் திருப்பாவைப் பாசுரங்களை சொல்லிக்கொண்டு, நம்பிகளின் இல்லத்தை
நெருங்க, நம்பிகளின் திருக்குமாரத்தியான (மகள்) அத்துழாய் ராமானுஜரைத் தரிசிக்க, தன் இல்லத்தின் வாசற்க் கதவைத்
திறக்க, அவளைப் பார்த்த ராமானுஜர் அவளை விழுந்து
வணங்கி மயக்கமுற்றுக் கிடந்தாராம்.
ஒரு பெரியவர் தன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிய அத்துழாய்,தன் தந்தையான நம்பிகளை அழைத்து, இதைத் தெரிவிக்க, நம்பிகள் துளியும் பதறாமல், எம்பெருமானாரைப் பார்த்து, "உந்து மதகளிற்றன்" பாசுரம் (திருப்பாவை, 18) அனுஸந்தானமோ என்று கேட்டாராம்.
அதாவது, இந்தப் பாசுரத்தில் "நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்" என்ற வரியை ராமானுஜர் அனுசந்திக்கும்
அதே சமயம், அத்துழாய்க் கதவைத் திறக்க, அத்துழாய்
அவர் கண்ணிற்கு "நப்பின்னைபிராட்டியை"ப் போலத்
தெரிந்தாளாம். இராமருக்கு சீதபிராட்டியைப் போல்,
ஸ்ரீ வராஹருக்கு பூமிப்பிராட்டியைப் போல், நப்பின்னை
கண்ணன் எம்பெருமானின் திருத்துணைவி ஆவாள். இது "மூவாயிரப்படியில்" உள்ளபடி.
(ஆனால், இந்தசம்பவம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருக்குமாரத்தியான தேவகி பிராட்டியார் விஷயத்தில்
நடந்ததாக "ஆறாயிரப்படி" தெரிவிக்கிறது.)
அத்துழாய் திருமணம் ஆகி தன் புகுந்த வீட்டிற்க்குச் செல்ல, அத்துழாயின் மாமியார் உனக்கு சீதனமாக பணிப்பெண்
ஒருவரையும் அனுப்பவில்லையே உன் தந்தை (நம்பிகள்)
என்று கேட்க, அத்துழாய் தன தந்தையிடம் இதைத் தெரிவிக்க, நம்பிகள் வருத்தமுற்று பணிப்பெண்ணுக்கு நான் எங்கே
செல்வேன் என்று கேட்டு, ராமானுஜரிடம் சென்று இதைப்
பற்றிக் கூறு என்று அவளிடம் சொல்ல, அவளும் உடனே
சென்று அவரிடம் இதைக் கூற, இதைக் கேட்ட ராமானுஜர்,
தன் சீடரான முதளியாண்டனை அழைத்து அவளுடன் பணிப்பெண்ணாகச் செல்லும்படி கட்டளையிட, முதலியும் ஆசார்யனின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றும்
வண்ணம், அத்துழாயின் பணிபெண்ணாக, அவள் மாமியார் வீட்டிற்க்குச் சென்றார்.
ராமானுஜர் துறவறம் பூண்டபோது, அனைத்தையும் துறந்தேன், முதளியாண்டனைத் தவிர என்று கூறியவர். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் முதலியாண்டான். அவரையே அத்துழாயுடன் பணிப்பெண்ணாக அனுப்பி, தியாகம் செய்தார் என்றால்,அது ராமானுஜர் தன் ஆசார்யரான பெரிய நம்பிகளுக்குச் செய்யும்
கடமை என்ற எண்ணத்தில்தான்.
ஒரு சமயம், வைணவ மதம் சிறந்ததா, சைவ மதம் சிறந்ததா
என்று வாதம் எழ, சைவ மதமே சிறந்தது, சிவனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை" என்று அதில் ஊற்றம் கொண்ட
சோழ மன்னன் கூற, அவன் சபையில் இருந்த மந்திரிகள்,
இதை ஒரு வைணவர் சொன்னால்தான் எடுபடும் என்றும்,
மேலும் அவர் ஒரு சாதாரண வைணவராக இருக்கக்கூடாது
என்றும், வைணவ சம்பிராதயத்தில் ஊற்றம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று கூற, அப்படிப்பட்டவர் யார் இருக்கிறார் என்று கேட்க, வைணவ மதம் சிறக்கத் தோன்றிய ராமானுஜரே அப்படிப்பட்டவர் என்றும், அவரை அழைத்துவந்து, சைவ மதமே சிறந்தது என்று கூறி, கையெழுத்து இட்டால்தான் அரசனின்
கூற்று எடுபடும் என்று தெரிவித்தார்கள்.
உடனே, அரசன், ராமானுஜரை அழைத்துவரும்படி
ஊழியர்களைப் பணிக்க, ராமானுஜர் அங்கு சென்றால்
இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும்,ஒப்புக்
கொள்ளாமால் போனால், மன்னன் அவரைக் கொன்று
விடுவான் என்றும் நினைத்து, அவரது சீடரான
கூரத்தாழ்வான் இதை ராமானுஜரிடம் தெரிவித்து,
ராமானுஜருக்கு தான் உடுத்தியிருந்த வெள்ளை வேட்டியைக் கொடுத்து உடுத்தச் சொல்லி, அவரது காவி உடையைத் தான் அணிந்துகொண்டு, ராமானுஜராய் அரசனின் சபைக்கு,
ஆழ்வான் பெரிய நம்பிகளுடன் சென்றார்.
சபைக்குச் சென்றவுடன், ராமானுஜராய் வேடமனிந்த
ஆழ்வானைப் பார்த்து,"சிவாத் பரதரம் நாஸ்தி" என்று கையெழுத்திடச் சொன்னான். அதற்கு ஆழ்வான்,
ஒருவன் உலகளந்தான் (எம்பெருமான்); ஒருவன் (பிரமன்)
அவன் திருவடிகளைக் கழுவினான்; கழுவப்பட்ட அந்தத்
தீர்த்தத்தை ஒருவன் (சிவன்) தலையில் தாங்கிப் புனிதனானான். இதனால், யார் சிறந்தவன் என்பதை நீயே உணர்ந்து பார்
என்று பல படியாக ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று உறுதிபடுத்தினார்.
நீர் வித்வான் ஆகையால் எப்படியும் பேச அல்லவர். இதில்
நீர் கையெழுத்திடும் என்று அரசன் ஆணையுடன் நிர்ப்பந்திக்க, ஆழ்வான், சிவனைத் தாழ்த்தி விஷ்ணுவை உயர்த்திவைத்து கையெழுத்திட்டார். இதனால் கோபமடைந்த அரசன், பெரிய நம்பியைப் பார்த்து, கையெழுத்திடும்படி கட்டளையிட,அவரும் அதற்கு மறுத்தார். உடனே, தன் ஊழியர்களை அழைத்து,
அவர்கள் இருவரின் கண்களையும் பிடுங்கும்படி கட்டளையிட்டான்.
உடனே ஆழ்வான், துஷ்டனான உன்னைக் கண்ட கண்கள்
எனக்கு உதவாது என்று கூறித் தம் நகங்களைக் கொண்டே
தம் கண்களைப் பிடுங்கி அரசன் மேல் வீசினார். பெரிய நம்பிகளின் கண்கள் பிடுங்கப்பட்டன. பின்னர் இருவரும் ராஜ சபையிலிருந்து வெளியேறினர். வழியில் வலி தாங்காமல் அந்திம காலத்தை அணுகினார் நம்பிகள். அதனால் விரைவில் ஸ்ரீரங்கத்தை அடைவோம் என்று ஆழ்வானும் அத்துழாயும் கூறினர்.
அதுகேட்டு நம்பிகள், "அது வேண்டாம்; அப்படி செய்வோமானால் பெரியநமபிகள் திருமேனியை விடுவதற்கு ஸ்ரீரங்கம் போனார்; அதனால், நாமும் திவ்யதேசத்தில்தான் சரீரம்
விடவேண்டுமென்று அனைவரும் எண்ணுவர். முதலிலே ஆசார்யனாலே அனுக்ரஹிக்கப் (அங்கீகரிக்கப்)பட்டவருக்குப் பரமபதம் நிச்சயமாகையாலே,அந்த தேச நியமம் என்று கூறி,
தன் ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரை தியானித்துக்கொண்டு
ஆழ்வான் மடியிலே திருமுடியும், மகள் அத்துழாய் மடியிலே திருவடியுமாகப் பரமபதம் அடைந்தார். இதனால், பகவானே பேற்றுக்கு உபாயம் என்று அவனைத் தஞ்சமாகப் பற்றிவனுக்கு, இறுதிக் காலத்தில் இன்ன தேசத்தில் தேகத்தை விடவேண்டும்
என்ற கட்டுப்பாடில்லை என்பதை நிலை நாட்டினார் நம்பிகள்.
திருப்பாணாழ்வார் அருளியுள்ள "அமலனாதிபிரான்" என்னும் பிரபந்தத்திற்கு, "ஆபாதசூடமனுபூய ஹரிம் ஸயாநம்" என்று தொடங்கும் அற்புதமான வடமொழித் தனியன் இட்டவர் பெரியநம்பிகள்.
இனியும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையர் திருவடி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக