"கடவுளின் குரல்" -
"உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!""
மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. யாத்திரைக்கு இடையே வழுவத்தூர் என்ற கிராமத்தில் தமது பக்தரான ராமசுவாமி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார் மகான்.
ஒரு நாள் மாலை நேரம் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு பக்தர் ராமசுவாமியை அழைத்தார் மகான். "பசுக்கொட்டகையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, இரண்டு கைப்பிடி கல் உப்பைப் போட்டு இங்கே கொண்டு வா!" என்றார்.
அவர் சொன்னபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி உப்புப்போட்டு எடுத்து வந்தார், தொண்டர்.
கொஞ்சம் உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார், மகான்.
அவர் அப்படிச் செய்தது, புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள். "இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரே மாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனா...அதுல கால் இறுகிக் கொண்டு வலிக்கிறது...அதுக்குதான்!" யாரும் கேட்காமலே சொன்னார் பெரியவர்.
கொஞ்ச நேரம் கழித்து மகான் அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்ததுபோல எல்லோரும் நெருங்கி அந்த நீரை தீர்த்தமாக பாவித்து தலையில் தெளித்துக் கொண்டார்கள்.
திடீரென்று மகான், " அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோ...ஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!" சொல்ல, இப்போது எல்லோர் மனதிலும் ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் மகான் சொன்னபடி ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.
அன்று இரவு நெருங்கும் நேரம். வயதான பாட்டி ஒருவர் வந்து மகாபெரியவர் முன் நின்றார். எதுவும் பேசாமல், மகானையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகான், "என்ன காசி, ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!" மென்மையாகக் கேட்டார்.
"ஆமாம் பெரியவா!" தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி.
எதுவும் சொல்லாமல் உள்புறம் திரும்பி, "ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!" குரல் கொடுத்தார் மகான்.
மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக் கொண்டு அவர் வர, "அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று...!"
மகானின் கட்டளை பிறக்க, அதை அப்படியே நிறைவேற்றினார், தொண்டர். அடுத்ததாக, தமது கையில் இருந்த கமண்டல நீரை, காலியான செம்பில் ஊற்றிய மகான், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார்.
"முதல்ல ராமேஸ்வரம்...அடுத்தது காசி...ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ..எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.
மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி. இதுவரை நடந்ததெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு தகவல் வரும் வரை. அந்தச் செய்திதான், மகானின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும்.
மகானை தரிசித்துவிட்டுப் போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.
கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட மகான், "அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கும் அவளுக்கு!" சொல்ல திடுக்கிட்டுப் போனார் அந்த பக்தர்.
தன்னை தரிசிக்க வரப்போகிற மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல்நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், அதையும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம்) அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவள் ஆசையைப் பூர்த்தி செய்து புண்ணியம் தேடித் தந்தது எத்தனை பெரிய திருவிளையாடல்!
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 21 செப்டம்பர், 2020
கடவுளின் குரல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக