திங்கள், 21 செப்டம்பர், 2020

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்!


சிரசாசனம்: சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில், சிவன் அருகில் முருகனை மடியில் தாங்கி காட்சி தரும் அம்மன், சிவன் சிரசாசனம் கொண்ட கதை.
உலகை காத்து இரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதி அந்தம் இல்லாத சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களும், பல்வேறு கோலங்களும் பூண்டு காட்சி தருகிறார். பக்தர்களுக்கு வேண்டிய அருள்புரிய இறைவன் பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி அருள்புரிந்துள்ளார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலை கீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய திருக்கோவில் தான் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.

சிரசாசன கோல தலவரலாறு

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் யமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். யமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் யமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது யமன் நின்றார். யமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். யமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். யமனும் சம்பாசுரனை கொன்று தேவர்கள் குறையை தீர்த்தார்.


பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

யம பயம் போக்கும் சிவ பெருமான்
இங்கே கருவறையில் இறைவன் தலை கீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார்.



அருகிலேயே அன்னை வேறு எங்கும் இயலா வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
யமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல யம பயம் நீங்கும் என்பது கண்கூடான உண்மை. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை என அனைத்தையும் நீக்கி அருள் வழங்குகின்றனர் பார்வதி அம்பிகையும், சக்தீஸ்வர சுவாமியும்.
அழகிய கிராமத்தில் அழகான சுதை வேலைபாடுகள் கொண்ட திருக்கோவில். தினமும் காலை மாலை என பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர். அனைவரும் ஸ்ரீ பார்வதி உடனுறை சக்தீஸ்வர சுவாமியை சென்று தரிசித்து அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

அமைவிடம்: யனமதுரு ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில்,
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில்
இருந்து 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: