திங்கள், 21 செப்டம்பர், 2020

அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில்

கரூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் தான் தோன்றி மலை என்ற இடத்தில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லணும்னா, திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவங்க யாராக இருந்தாலும், இங்கு உள்ள, தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம்.  இத் திருத்தலத்தை தென் திருப்பதி என்றும் சொல்லுவாங்க..

இவ


ர் திருப்பதி பெருமாளின் அண்ணா என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுருக்கேன்..

தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில், குடைவரைக் கோயில் என்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது..      

சோமசர்மா என்ற பக்தன், திருப்பதிக்கு சென்று போது பெருமாளை தரிசிக்க முடியலை. அதனால, மிகவும் மனம் வருந்தினான்.அப்போ,. அந்த சமயத்தில, பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே மனம் இரங்கி வந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.. பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் “தான்தோன்றி மலை” என்ற பெயர் பெற்றது.

இந்தக் கோவிலோட சிறப்பு என்னவென்றால்,  பெருமாள் மேற்கு நோக்கி, பக்தர்களுக்காக கொஞ்சம்   தன் தலையத் தாழ்த்திக்கொண்டு தான் இருப்பார். இங்கு தாயாருக்கு என்று தனிச் சந்நிதி கிடையாது என்பதால வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.  இங்கு பெருமாளுக்கு தீபாராதனை காண்பித்தவுடன், மஞ்சளும்,தீர்த்தமும் கொடுப்பார்கள். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெருமாள் துளசி ப்ரியர்..

இங்கு கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும். நமக்கு திருமணநாள், அல்லது பிறந்த நாளுக்கு ஒரே ஒரு முறை பைசா கட்டிவிட்டால், போதும். பிறகு நாம் எந்த அட்ரஸ் கொடுக்கின்றமோ, அந்த முகவரிக்கு ஒவ்வொரு வருடமும் நம் விசேஷ நாட்களை முன் கூட்டியே தபாலில் தெரிவித்து சீட்டு அனுப்புவார்கள். அன்றைய நாளில் நாம் போனால், அபிஷேகம் முடிந்து பிறகு ப்ரசாதம் தருவார்கள். அந்தச் சீட்டை நம் சார்பாக, நமக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து அனுப்பினாலும், ப்ரசாதம் தருவார்கள்...  

இங்கு காதுகுத்து, திருமணவைபோகம், எல்லாம் நிறைய நடக்கும்.. இக்கோவிலில் 3 ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. கீழே வீர ஆஞ்சநேயர், குகை ஆஞ்சநேயர் (👈எனக்குப் பிடித்தவர்) பெருமாள் அருகில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.. 2 பக்கத்திலும் உள்ள படிக்கட்டு வழியாக  பெருமாளை தரிசிக்க செல்லலாம்..

மெயின் மண்டபத்தைத் தாண்டி, படியேறுவதற்கு முன் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருப்பார். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்.. எத்தனையோ பேரின் குறைகளை நிவர்த்தி செய்து இருக்கின்றார். நல்லபடியா, நாம வேண்டியது நிறைவேறினால், இவருக்கு 25 பைசா சூடம் ஏற்றுவார்கள். துளசி சார்த்துவார்கள்.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும், ஊர்களில் இருந்தும் மக்கள் விரதம் இருந்து, பெருமாளை தரிசிக்க வருவார்கள்.. பிறகு ஊரில் விளைந்த அரிசி,காய்கறி எல்லாம் மாட்டு வண்டியிலோ அல்லது காரிலோ எடுத்துக்கொண்டு வந்து, கோவிலை சுற்றி எங்கு இடம் இருக்கின்றதோ அங்கு சமைப்பார்கள். பிறகு “தாதன்” (பெருமாளின் அடியவர்) என்பவரை சாப்பிட முதல்ல அழைப்பார்கள்.. இவர்கள் நெற்றியில திருமண் நாமம் இட்டுருப்பார்கள். கையில் சங்கு வைத்துருப்பார்கள். பிறகு வட்டமாக இருக்கும் பெல்லில் ஓசை எழுப்புவார்கள்.  அதன் பிறகு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் தான் மத்தவங்க சாப்பிடுவாங்க...பொதுவாக சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம்  அதிகமாக இருக்கும். இப்ப புரட்டாசி மாசம்.. எல்லா நாளும் செம்மக் கூட்டமாகத் தான் இருக்கும்..

நான் இவ்வளவு காட்சிகளையும் கல்யாணத்துக்கு முன் அருகிலேயே பார்த்தவள்.

சனிக்கிழமைகளில் க்யூவில் சென்று, அர்ச்சனை செய்ய, முடி இறக்க டிக்கட் வாங்குவதற்கு,  கவுண்டர் உள்ளது.. மத்த நாட்களில் அவ்வளவாக கூட்டம் இருக்காது.. கோவிலுக்கு அருகிலேயே முடி இறக்க வசதி உள்ளது. நானும் பூ முடி கொடுத்து இருக்கேன். பெருமாள் சந்நிதிக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டால், நம் கர்மவினைகள் சீக்கிரம் முடிவுக்கு வரும்னு ஐதீகம்...

இக்கோவிலை கிரிவலம் செய்ய, அதிகபட்ஷம் 30 நிமிஷம் மட்டுமே ஆகும். நான் பலமுறை பண்ணியிருக்கேன்.. கோவிலைச் சுற்றி நிறைய கல்யாண மண்டபங்கள் இருக்கு.. எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பு மனு தாக்கலுக்கு முன் இங்கு வந்து, பெருமாளை தரிசனம் பண்ணி விட்டுத் தான் செல்வார்கள்..

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோவில் கரூர், திண்டுக்கல் சாலையில் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசுத்துறை பஸ்கள், மினி பஸ்கள் நிறைய இருக்கிறது.  ஆட்டோவும் இருக்கின்றது.

என் அனுபவத்தில் என் தாந்தோணிமலைப் பெருமாள் ப்ரத்யக்‌ஷமான தெய்வம்.. ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும் போது, மறக்காமல் இவரைப் போய் பார்த்து, நமஸ்காரம் செய்துவிட்டுத் தான் வருவேன்..

 ஏடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா.. !!!

கருத்துகள் இல்லை: