திங்கள், 21 செப்டம்பர், 2020

வரகூர் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில்

தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது வரகூர். இங்கே அற்புதமான கோயிலில் அழகுற வீற்றிருக்கிறார் பெருமாள். ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீவராகமூர்த்தி, ஸ்ரீகண்ணபிரான் என மூன்று திருக்கோலங்களில் இங்கே அருள்புரிகிறார். பிரசித்தி பெற்ற திருத்தலம் இது.

பிள்ளை பாக்கியம் இல்லையே என்று ஏங்குவோர், வழிபடக்கூடிய திருத்தலம். இங்கே சுவாமியின் பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டிக்கொள்வது வழக்கம். விரைவில் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறலம் என்பது ஐதீகம்.

மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். உத்ஸவரே பிரசித்தம் என்பதால், வெங்கடேச பெருமாள் கோயில் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கே, கிருஷ்ணரும் விசேஷமானவர். நாராயண தீர்த்தருக்கு பெருமாள் ஸ்ரீகிருஷ்ணரூபமாக காட்சி தந்தருளியதால், மேலும் கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆச்சரியம்... கிருஷ்ணருக்கு சந்நிதி இல்லை.

அப்படியெனில் கிருஷ்ணரே இல்லாமல் கிருஷ்ண ஜயந்தி விழா எப்படி?

ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகின்றனர். ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.

வரகூர் லட்சுமி நாராயணப் பெருமாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் தகையவில்லையே என வருந்துவோர், பெருமாளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். புளியோதரை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். முடிந்தால், நான்கு குழந்தைகளுக்கு புத்தாடை, நோட்டு பேனா வழங்குங்கள்.

உங்கள் சந்ததியை சிறக்கச் செய்வார். சந்தான பாக்கியம் தந்தருள்வார்.


கருத்துகள் இல்லை: