திங்கள், 21 செப்டம்பர், 2020

நாரதரின் கர்வம்

நாரதரின் கர்வம்

ஒரு சமயம் நாரதர், சிவபெருமானை குறித்து வெகு காலம் தவம் புரிந்தார்.

நாரதரின் தவத்தைக் கலைத்து அவர்  நோக்கம் நிறைவேறத் தடை செய்ய விரும்பினான் இந்திரன். அழகில் சிறந்த அப்சரசுகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து நாரதரிடம் சென்று அவர் தவத்தைக் கலைக்குமாறு அனுப்பி வைத்தான்.தேவ மங்கையரும், நாரதர் தவம் செய்யுமிடத்தை அடைந்து அவர் முன்பு ஆடிப்பாடிப் பலவிதங்களிலும் அவர்  உள்ளத்தைத் தங்கள் பால் திருப்ப முயன்றனர். நாரதர் தம் உள்ளத்தில் பரமசிவனைத் தியானித்து ஒருமித்த சிந்தையுடன் தவம் செய்து வந்ததால் அவரிடம் அப்சரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

ஆடி ஆடி முடிவில் அவர்கள் களைத்துப் போய் இந்திரலோகம் திரும்பினர். நாரதரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்து அவர் விரும்பிய வரத்தை அளித்தார். மகிழ்ச்சியோடு திரும்பிய நாரதர், தாம் தவத்தில் ஈடுபட்டிருக்கையில் இந்திரன் அப்சரசுகளை அனுப்பித் தவத்தைக் கலைக்குமாறு செய்த முயற்சி பலிக்காமல் போனதை நினைத்து கர்வம் கொண்டார்.  

தாம் காமனை வென்று விட்டதாக ஓர் எண்ணம் உண்டாயிற்று. பிரம்மலோகம் சென்ற நாரதர், இந்திரன் தம்மிடம் தோல்வியுற்றதைச் பிரம்மாவிடம் பெருமையாக எடுத்துச் சொல்லி, தாம் காமத்தை, ஜெயித்து விட்டதாகக் கூறினார். அதைக் கேட்ட பிரம்மன், நாரதரின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிவபெருமானின் அனுக்கிரகமே என்று கூறினார்.

நாரதர் அதை ஏற்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு நேராக வைகுந்தத்தை அடைந்தார். ஸ்ரீ விஷ்ணுபெருமானிடமும் அவர் தம் பெருமையைக் கூறிக் கொண்டார். மகா விஷ்ணுவும் பிரம்மதேவனைப் போலவே, ’சிவபெருமானின் அனுக்கிரகமே அப்சரசுகள் தோல்வியுற்றுத் திரும்பக் காரணம் என்பதை நாரதரிடம் எடுத்துக் கூறினார். நாரதரோ தம் சொந்த முயற்சியாலேயே காமத்தை வென்றதாகக் கூறினார். நாரதரின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கர்வத்தை திருத்த விரும்பினார் மகாவிஷ்ணு. ஸ்ரீபுரத்தில் இருக்கும்
அம்பரீஷ சக்கரவர்த்தி தம் குமாரத்தி ஸ்ரீமதிக்கு விவாகம் செய்ய சுவயம் வரத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். மகா விஷ்ணு நாரதரைப் பார்த்து, நாரதா, உனக்கு விஷயம் தெரியுமா? ஸ்ரீபுரத்து அரசன் தன் குமாரத்திக்கு விவாகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறானாமே?" என்று கேட்டார்.

நாரதருக்குப் பூலோகம் செல்ல விருப்பம் உண்டாகியது. நாராயணனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட அவர், ஸ்ரீபுரத்திலுள்ள அரண்மனையை அடைந்தார். அரச குமாரத்தி ஸ்ரீமதியின் அழகு வடிவத்தைக் கண்டதும் அவர் உள்ளம் சலனம் கொண்டது. அரசகுமாரியைத் தாமே மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அரசனை அழைத்து அவன் குமாரத்தியைத் தமக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்.

மகரிஷி, தங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால்..." என்று இழுத்தான் அரசன்.

பின் ஏன் இந்தத் தயக்கம்!" என்று கேட்டார் நாரதர். என் குமாரத்தியோ ஹரியையே மணப்பேன் என்று பிடிவாதம் கொண்டிருக்கிறாளே!..."

அரசனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் நாரதரின் உற்சாகம் அடங்கி விட்டது. அடுத்த கணமே அவருக்கு ஓர் யோசனை தோன்றியது. ஸ்ரீமதியின் விருப்பத்தைக் கெடுப்பானேன். இதோ விரைவிலேயே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வைகுந்தத்துக்கு ஓடினார் நாரதர்.

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த நாரதரைக் கண்டதும் நாரயணன் வியப்போடு, நாரதா, என்ன விஷயம்? ஏன் இந்தப் பரபரப்பு?" என்று கேட்டார். பிரபோ, எனக்கொரு வரம் தரவேண்டும். தாமதிக்கக் கூடாது?" என்று வேண்டினார் நாரதர்.

என்ன வரம் வேண்டும், நாரதா?" என்று ஒன்றுமே தெரியாதவர் போலக் கேட்டார் நாராயணன்.

பிரபோ, நான் நினைக்கும் நேரத்தில் யார் என்னைப் பார்த்தாலும் ஹரியின் முகமாக என் முகம் தோற்றம் அளிக்க வேண்டும்" என்று வேண்டினார் நாரதர். எதற்கு இந்த வரம்?..." என்று கேட்டார் நாராயணன்.

நின்று சொல்ல நேரமில்லை, பிரபோ. பூலோகத்திலே முக்கிய காரியம் ஒன்றிருக்கிறது. முடித்துக் கொண்டு வருகிறேன். வந்ததும் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்"  என்று சொல்லி விட்டு ஓட்டமாக ஓடினார் நாரதர். பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு போய் வா, நாரதா?" என்றார் நாராயணன்.

ஸ்ரீபுரத்தை அடைந்ததும் நாரதர் நேராக அரசனிடம் சென்றார். நாளைக்கே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் உங்கள் மகள் கண்டிப்பாக சம்மதிப்பாள்" என்றார்.

அரசனோ தயங்கியபடி, வைகுந்தவாசனைத் தவிர வேறு எவரையும் மாலையிடுவதில்லை என ஸ்ரீமதி உறுதி கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன் என்றார்.
கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.
நாளை ஸ்ரீமதி எனக்குத் தான் மாலையிடுவாள் என்றார் நாரதர்.

அரசன் தன் மகளை அழைத்தார்.  அவளுடைய சம்மதம் பெற எண்ணினார். அவள் வரும் போது தம்முடைய முகம் ஹரியின் முகமாகத் தோன்ற வேண்டுமென நாரதர் வேண்டிக் கொள்ள, உள்ளே நுழைந்த ஸ்ரீமதியின் பார்வை நாரதர் பக்கம் திரும்பியது. அவள் அலறிக்கொண்டு தந்தையிடம் ஓடிவந்தாள். அப்பா, அவரைப் பாருங்கள்!..." என்று ஸ்ரீமதி, நாரதரின் பக்கம் கையைக் காட்டினாள்.

அனைவரின் பார்வையும் நாரதர் பக்கம் திரும்பியது. நாரதரின் முகம் குரங்கு முகமாகத் தோற்றமளிப்பதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு அரசனைக் கேட்டார். மகரிஷி தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். விஷயம் புரியும்" என்றான் அரசன்.

கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்க்கும் போது தான் நாரதருக்கு உண்மை வெளிப்பட்டது. ஹரி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருள் உண்டு.

ஹரியின் முகமாகத் தோன்றுவதற்கு பதிலாகக் குரங்கு முகமாகத் தோற்றமளிக்கச் செய்து நாராயணன் தம்மை ஏமாற்றி விட்டார் என்பதை அப்போது தான் உணர்ந்தார்.

நாராயணன் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் உண்டாயிற்று. நேராக வைகுந்தத்துக்கு ஓடினார்.

அங்கே அவரைத் திடுக்கிட வைக்கக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது.

எந்த ஸ்ரீமதியை மணக்க விரும்பியிருந்தாரோ அவள் நாராயணன் மடிமீது மணக் கோலத்தோடு அமர்ந்திருக்கக் கண்டார். அவர் ஆத்திரம் பன்மடங்காகி விட்டது. பிரபோ, என்னை ஏமாற்றி விட்டீர்கள். அந்தப் பாபம் உம்மைச் சும்மா விடாது. நீங்களும் மனிதனாகப் பிறந்து உங்கள் மனைவியும் பிறன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டு இழந்து வருந்துவீர்கள். உங்களுக்கு உதவ வானரங்களையே நாடுவீர்கள்" என்று சபித்தார்.

நாராயணன் புன்சிரிப்போடு நாரதரின் சாபத்தை ஏற்றுக் கொண்டு, நாரதா, பூலோகத்தில் என் காரியம் நிறைவேற உன் சாபம் தேவை. அதிருக்கட்டும், முற்றும் துறந்த முனிவனான உனக்கு ஏன் திருமணத்தில் விருப்பம் ஏற்பட்டது? காமத்தை ஜெயித்த நீயா இவ்விதம் அடிமையாக நிற்பது?" என்று கேட்டார். அப்போது தான் இது நாராயணன் திருவிளையாடல் என்பதை உணர்ந்த நாரதர் தம் தவறுக்கு வருந்தி ஸ்ரீ பெரிய பெருமாளை சரணடைந்தார்.


 

கருத்துகள் இல்லை: