சனி, 11 ஜூலை, 2020

பெரிய்ந்வா சரணம்.

அழகான தரிசனம் கண்டதும், மனதிற்குள்ளே “நான் இருக்கேன்”னு அவர் சொல்வது போலத் தோன்றுகிறதல்லவோ! 

கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலே வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கும் அம்மையப்பனை ஜகன்மாதாவாகவும் ஜகத்பிதாவாகவும், ஜகத்குருவாகளும் விளங்கும் என் தெய்வத்தின் தரிசனம் கண்டீரோ!

இந்தத் தரிசனம் கண்டதுமே மனம் வெகுவான பாசுரம் ஒன்றை வழிய விட்டதென்றால், அது சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கரனான மஹாபிரபுவின் அருளால் தாமே!  மனம் வெகுவாய் ஆனந்திக்கும் போதும், ஆராதிக்கும் போதும், ஏன்… அழுது புலம்பும்போதும் கூட அடியேன் அறிந்த தமிழிலே புலம்பிக் கரைக்க எத்தணிக்கின்றேன். 

இவ்வெழுத்துக்களிலே அறியாமல் அடியேன் செய்த பிழையேதுமிருக்குமானால், எம் ஆசார்யர் அனுக்ரஹத்தில் அனைவரும் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.  அடியார்க்கும் அடியாராய் இருப்பதிலே உள்ள ஆனந்தத்தின் சுகமே வேறு தான்.  உங்கள் அனைவரின் உள்ளத்திலேயும் நிறைவாய் நிறைந்திருக்கும் ஸ்ரீமஹாஸ்வாமிகளை அனுதினமும் துயிலெழுப்பித் தொழும் பாக்கியம் கிடைக்கின்றதே! இப்பிறப்பு மட்டுமின்றி எப்பிறப்பிலும் இதனை ஏத்திவாழ மனதார பிரார்த்திக்கின்றேன்.

************************************************

#ஸ்ரீகுருதுதி

நின்றுயெங்கும் பரவியே நிருத்தமாகித் தோன்றியே
ஒன்றியிங்கும் உடலிலே ஒத்தமானுடப் பொருள்
மூன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
கன்றுகாக்குங் கூலமொத்த உன்னையேத்த வல்லனே!

************************************************

பேரிறைவன் படைத்த இப்பரவெளியிலே ஆடியாடி ஒன்றியதோர் உத்தமனமாய் ஸ்தூல சரீரம் கொண்டு இவ்வுலகைக் காக்கவந்த பரம்பொருளே!

மூப்பெருந்தேவரும், முப்பெருஞ்சக்தியும் கூடி ஓருருவிலே உதித்தாற் போல வந்து, எம்முள்ளே இருக்கின்ற கலக்கங்களைத் தீர்க்கவல்லதொரு ரக்ஷகனே! 

கன்றினைப் பேணிக்காக்கும் தாய்பசுவைப் போலே உள்ள உம்மைச் சரண்புக யாம் மஹா பாக்கியம் செய்திருக்கின்றோமல்லவோ! 

இதனையே இந்த துதியிலே நினைந்துத் தொழ விழைந்துள்ளேன். 

ஓசைக்கு உயிருண்டு; அரும்பெரும் பலனுமுண்டு என்பர்.  தேவபாஷையான சமஸ்கிருதத்திலேயும் சரி; தெய்வீக பாஷையான தமிழிலேயும் சரி; நல்ல ஓசைகட்டு நற்பலனைத் தரும் சக்தியுண்டு. அவ்வகையிலான ஓசைகளுடனானதோர் பாசுரத்தினை யெழுப்பி அதன் மூலம் நலனடைய அடியேனின் சிறிய முயற்சியே, அனுதினமும் ஆச்சார்ய பாதந்தொழும் பாமாலைகளும், விருத்தங்களும், கானங்களும், கவிதைகளும் எழுப்பிட முயற்சிக்கின்றேன் அவர் அருளால்!

ஆம்! அனுதினமும் இவ்வகையிலாக ஆச்சார்யன் திருப்பாதம் தொழுவோம்! அவனியிலே வாழுங்காலத்தே அவர் அனுக்ரஹத்துடன் கூடி இன்புற்று வாழ்வோம்!

குருவுண்டு – பயமில்லை;  குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

கருத்துகள் இல்லை: