சனி, 11 ஜூலை, 2020

ஒரு ஊரிலே இரண்டு வியாபாரிகள் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார்கள். இருவரும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். தங்களது வருமானத்தில் ஒருபகுதியை தானதருமங்களுக்கும் செலவு செய்வார்கள். அன்றைக்கும் அடுத்த நகரத்தில் வியாபாரம் முடித்து இருவரும் தங்கள் தங்கள்  ஒட்டகத்தையும் அழைத்தக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டனர்.

மலையடிவாரத்தை அடைந்தபோது வழிப்பறிக் கொள்ளையர்கள் குழுவொன்று அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. என்னசெய்வது என்று திகைத்த இருவரும் ஒட்டகங்களை விட்டுவிட்டு, இறைவனை வேண்டிக்கொண்டு அருகிலிருந்து ஒரு சிறிய குகையினுள் சென்று ஒளிந்து கொண்டனர்.

கொள்ளையர்களும் நெருங்கிவருவது அவரகளின் காதுகளில் கேட்டது. ஒளிந்திருந்த வியாபாரிகளில் ஒருவன் ”நாமோ இருவர், கையிலே பணம் வேறு, அவர்களோ பலபேர்” என்று மெதுவாக மற்றவனுக்குக் கூறினான். அடுத்தவனோ ”நாம் இருவரில்லை, மூவர்!!! நம் இருவருடன் கடவுளும் இங்கே எம்மைக் காப்பாற்ற இருக்கிறார் என்றான். என்ன அதிசயம்!!!! குகையின் வாயிலில் இருந்த சிலந்தியொன்று திடீரென வேகமாக குகை வாயிலிலே குறுக்கும் மறுக்கமாக வலை பின்னியது.

குகையை அண்மித்த கொள்ளையர்களில் ஒருவன் ”இந்தக் குகைக்குள் அவர்கள் ஒளிந்திருக்கலாம்” என்றான். ஆனால் அவர்களின் தலைவனோ ”அட மூடனே குகை வாயிலிலே சிலந்தி வலை இருக்கிறதே அவர்கள் போவதென்றால் இப்போதானே போயிருக்கவேண்டும்” என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். வியாபாரிகள் சுகமாக வீடு சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை: