சனி, 11 ஜூலை, 2020

*தேன்கூடு தினம் ஒரு கதை.. (04.07.2020)*

*யார் கடவுள்..?*
முனிவர் ஒருவர் ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.. மிகப் பழமையான ஆசிரமம் அது.. ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது.. பக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள்.. உலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது..

ஆனால் கொஞ்ச காலமாய் ஆசிரமம் பொலிவிழக்கத் துவங்கியதை உணர்ந்தார் முனிவர்.. காரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை.. நூற்றுக்கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு.. தான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி, அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்..

முனிவர் மிகவும் நொந்து போனார்.. சஞ்சலமடைந்தார்.. இப்படியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது.. இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார்..

அப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவர், வட நாட்டிலிருந்து அங்கே வருகை புரிந்தார்.. இருவரும் அளவளாவினார்கள்.. வட நாட்டு முனிவர், ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார்..

அத்தனை சீடர்கள் முன்னிலையில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்..
அதிலே ஓர் ஆச்சர்யமான விஷயத்தை அவர் சொன்னார்.. ‘‘இந்த ஆசிரமம் பற்றி ரகசியம் ஒன்றை நான் சொல்லப்போகிறேன்.. அதைச் சொல்வதற்காகத்தான் கயிலையிலிருந்து இங்கே நான் வந்திருக்கிறேன்.. கடவுள் சிவபெருமான் கயிலையில் என்னிடம் அசரீரியாகப் பேசினார்.. அவர் சொன்னது இதுதான்.. இந்த ஆசிரமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சீடர்களில் ஒருவராக மனித உருவில் தானும் இருப்பதாகச் சிவபெருமான் என்னிடம் கூறினார்.. அந்த அற்புத தகவலைச் சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன்.. சிவனாக இங்கேயிருக்கும் சீடர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை.. அந்த சக்தி என்னிடம் இல்லை.. அதனால் பொதுவாக அத்தனை சீடர்களையும் நான் வணங்குகிறேன்..’’ என்று கண்களில் நீர் கசிய கை கூப்பினார் வடநாட்டு முனிவர்.. மறுநாளிலேயே ஆசிரமத்தில் மாற்றம் தெரிந்தது.. சீடர்கள் தங்களுக்குள் இருந்த சச்சரவை மூட்டை கட்டி வீசினார்கள்.. ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையாகப் பார்த்தார்கள்.. மற்றவரின் திறமையை மதித்தார்கள்..

இதில் யார் சிவபெருமான் என்று சரியாகத் தெரியாததால் அனைவரையும் அன்புடன் நோக்கினார்கள்.. பணிவுடன் நடந்து கொண்டார்கள்.. ஆசிரமத்தின் சங்கடங்கள் தீர்ந்தன.. மீண்டும் ஆசிரமத்தின் புகழ் பரவத்துவங்கியது..
இரண்டு முனிவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.. அதைப் பற்றி நமக்கு என்ன கவலை..?
🐝
ஆனால் நான் சொல்ல வந்தது வேறு..
நம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. கடவுள் மனித உருவத்தில் வருபவர் என்பதால், நம்மைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவராக கடவுளும் இருக்கக் கூடும் என்பதை உணருங்கள்.. அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்..
நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் ஒரு கடவுள் போன்று நடத்துவதை உணர்வீர்கள்.. உங்களைச் சுற்றி அன்பு மயமாவதைப் புரிந்து கொள்வீர்கள்.. இது நிச்சயம்.. செய்து பார்க்கிறீர்களா..? மனிதக் கடவுளே..!
🙏
*இதே கதையை நான்கே நிமிட வீடியோவில் பார்க்க.. கேட்க..*
_*இங்கே சொடுக்கவும்*_
👇
https://youtube.com/c/thenkooduchannel?sub_confirmation=1

கருத்துகள் இல்லை: