வெள்ளி, 13 டிசம்பர், 2019

விபூதி அணியும் முறை பற்றி ஒரு பதிவு முகநூலில் உலாவருகிறது. அதன் சாராம்சம் இது தான்...

''கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்; ஆள் காட்டி விரலால் அணிந்தால், பொருட்கள் நாசம்; நடுவிரலால் விபூதியை அணிந்தால் நிம்மதியின்மை; மோதிர விரலால் விபூதியை அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை; சுண்டு விரலால் அணிந்தால் கிரகதோஷம் எற்படும்; மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

இது உண்மையா?

இந்த செய்திக்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. மனம்போன போக்கில் குறிப்பிட்டுள்ளார்கள். சைவ நடைமுறை மற்றும் அனுட்டானங்களில் இப்படியான தகவலே இல்லை.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களின் “சைவ வினா விடை”, தருமபுர ஆதீன வெளியீடான “சித்தாந்த சைவ வினா விடை” மற்றும் திருவாவடுதுறை ஆதீன வெளியீடான “சைவ சித்தாந்தத் தடைகளும் விடைகளும்” போன்ற நூல்களைச் சார்ந்து விபூதி பற்றிய தகவல்களை வினா விடை வடிவில் தொகுத்து தந்துள்ளேன்.

அன்பர்கள் ஊன்றி பயின்று, மனதில் இருத்தி, எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளின் அருளுக்குப் பாத்திரராகும் படி அன்புடன் வேண்டுகின்றேன்.

"மந்திரமாவது நீறு" திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்த பின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

= = = திருநீற்று இயல்======

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு

௧..திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

௨..எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.

௩..திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

௪..திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

௫..திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

௬..திருநீறு நிலத்தில் சிந்தி விட்டால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

௭..திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

கூடாது.

௮..திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும் சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

௯..ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

௰..கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

௧௧..திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)

௧௨..திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

௧௩..முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

௧௪..முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

௧௫..மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

௧௬..மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

௧௭..முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

௧௮..சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

௧௯..அவைக ளுண்டான வகை எப்படி?

பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

௨௦..அதனை அணிவதனால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

௨௧..கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.

௨௨..அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

௨௩..உபகற்ப விபூதியாவது யாது?

இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

௨௪..விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

௨௫..எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

''கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!''

கருத்துகள் இல்லை: