வெள்ளி, 13 டிசம்பர், 2019

03.போகர்

இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின்  பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர்.

அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர்  இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு  தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.

இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.

அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள  முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர  மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை.
-------------------------

கருத்துகள் இல்லை: