வெள்ளி, 13 டிசம்பர், 2019

05.கொங்கணர்

திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே! நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே! இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்... எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே! நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.

நீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே! என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே! தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா? தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா! இந்தக் கட்டையை  போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ...போகரா! தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா! உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்... என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா! அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.

கொங்கணா! நீ அவசரக்காரனாக இருக்கிறாயே! அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே! அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய்.
-------------------------

கருத்துகள் இல்லை: