வெள்ளி, 13 டிசம்பர், 2019

தென்பொன்பரப்பி

 *மூலவர்* சொர்ணபுரீஸ்வரர்
 *தாயார்* உமையாள், சொர்ணாம்பிகை
 *தல விருட்சம் :* அரசமரம்

 *ஸ்தலவரலாறு*

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 *ஆலய அமைப்பு*

இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், நுணுக்கமான வேலைப் பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங் களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

 *அமைவிடம்*

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலை வில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

 *ஆலய முகவரி:*

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.
606 201

இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: