சனி, 12 அக்டோபர், 2013

படலம் 58: கல்யாணமூர்த்தி பிரதிஷ்டை

58வது படலத்தில் கல்யாணமூர்த்தி பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் லக்ஷண அமைப்பு முறையாக கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. சூத்திர கோடிடும் முறை கூறப்படுகிறது. பிறகு அம்பாளை ஸ்வாமியை அனுசரித்து செய்ய வேண்டும் என கூறி அம்பாளின் அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அடுத்த பாகத்தில் சர்வலக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்க வேண்டும் என கூறி அந்த லக்ஷ்மியின் லக்ஷணமும் அளவு முறையும் கூறப்படுகிறது. பிறகு சூத்திரம் இடும் முறைப்படி ஸ்வாமி அளவை அனுசரித்து விஷ்ணுவின் லக்ஷணமும் பிரம்மாவின் அமைப்பும் செய்ய வேண்டும் என கூறி அமைக்கும் முறையை விளக்குகிறார். பிறகு அக்னி குண்டத்திற்கும் அந்த குண்டத்தில் அக்னியை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரிக்ஷித்து அங்குரார்பணகர்மா முன்பு கூறியபடி செய்யவும். பிறகு ஸ்வாமியின் வலது பாகத்தில் பிரம்மாவையும் வடக்கு பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கு பாகத்தில் லக்ஷ்மியையும் வைத்து ஸ்வாமிக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் நவரத்னம் நியாசமும் மற்றவர்களான பரும்மா கவுரி லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்வர்ணமும் தியாசம் செய்யவும் என்று ரத்ன நியாச முறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த படலத்தில் கூறியுள்ளபடி நயனோன் மீலனம் செய்ய வேண்டும் என நயனோன் மீலன விதி கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி, கிராமபிரதிஷ்ணம் செய்து ஜலாதிவாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை கூறப்படுகிறது. நடுவில் பரமேஸ்வரன் அவரின் வலது இடது பாகத்தில் பிரம்மா, விஷ்ணு, பிரம்மாவின் இரண்டு பக்கத்திலும் கவுரி லக்ஷ்மியையும் ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசத்தில் மூர்த்திகளை ஸ்தாபிக்கும் முறை கூறப்பட்டது. பிறகு ஸ்வாமி அம்பாளுக்கு இருபாக மண்டபம் அமைத்து அதில் குண்டம், வேதிகை அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. இரு மண்டபத்திலும் சில்பியின் திருப்திக்கு பிறகு பிராம்மண போஜனம் புண்யாக பிரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை முறைப்படிசெய்து இவ்வாறு சம்ஸ்காரம் செய்யப்பட்ட இரண்டு மண்டபத்திலும் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்க வேண்டும்.

ஜலாதிவாச மண்டபத்திலிருந்து எடுத்து வரப்பட்ட ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, கவுரி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்நபனாபிஷேகம் செய்து தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்து ஈஸ்வரனை ஈஸ்வரனுக்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஈஸ்வரனை சயனாதிவாசம் செய்யவும். பிறகு அங்கு ஈஸ்வரனின் இடபாக, வலது பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் பிரம்மாவையும் தனித்தனியான சயனத்தில் அதிவாசம் செய்யவும். அம்பாளுடைய மண்டபத்தில் தேவியை சயனாதி வாசம் செய்து அந்த தேவியின் தெற்குபாகத்தில் லக்ஷ்மியையும் வடக்கு பாகத்தில் அக்னியையும் ஸயனாதிவாசம் செய்யவும். என்று ஸயனாதிவாச முறை விளக்கப்படுகிறது. இங்கு அக்னிக்கு ஜலாதிவாச விதியில் பூஜை செய்யும் முறை கூறப்படவில்லை. ஸயனாதிவாச முறையில் கும்பம் அதிவாசம் செய்யும் முறை பிரயோஜனம் கூறப்படுகிறது. சிவப்பு வஸ்திரத்தால் ஸ்வாமி அம்பாளை மூடவும். மஞ்சள் வஸ்திரத்தால் விஷ்ணுவையும் கருப்பு வஸ்திரத்தால் லக்ஷ்மியையும் வெள்ளை வஸ்திரத்தால் பிரம்மாவையும் போர்த்தவும் என கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மண்டபத்திலும் ஆசார்யர்கள் அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தியினிடத்திலும் தேசிகர்கள் செய்ய வேண்டிய கார்யங்களை செய்யவும். பிறகு கும்பாதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது. ஈசனின் சிரோதேசத்தில் சிவகும்பம் வர்தனியையும் அவ்வாறே பிரம்மா விஷ்ணுவிற்கு சிரோதேசத்தில் இரண்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும். தேவிக்கு சுற்றிலும் வாமா முதலிய எட்டு சக்திகளுக்கு எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமி கும்பத்தை சுற்றிலும் அஷ்டவித்யேஸ்வரர் எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். அவ்வாறே தேவி, லக்ஷ்மி, அக்னி, இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கடம் ஸ்தாபிக்கவும். அவரவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தியானத்துடன் மூர்த்திகளை தனித்தனியாக சந்தனம் முதல் நைவேத்யம் வரை பூஜிக்க வேண்டும்.

தத்வ மூர்தயாதி நியாசம் ஈஸ்வரர் விஷயத்தில் முன்பு போல் செய்யவும். மற்றவர்களுக்கு அவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தத்வாதி நியாசம் செய்யவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டது. பிறகு குண்ட அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும் என கூறி ஹோம முறை திரவ்ய அளவு குறிப்பிடும் முறையாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பூர்ணாகுதியின் முடிவில் தேசிகன் தன்னுடைய கிரஹத்திலோ அந்த பிரதேசத்திலோ களைப்பாறுவதற்காக தூங்கவும் என்று கூறப்படுகிறது. காலையில் நித்யானுஷ்டானம் முடித்து கர்த்தா மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யரை வஸ்திர ஸ்வர்ணாங்குலீயங்களால் பூஜித்து - ஐந்து நிஷ்க்கம் முதலான தட்சிணை கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திர தியாச முறை கூறப்படுகிறது. பின்பு பூஜித்து ஸ்நபனம் செய்து அர்ச்சனாவிதி முறைப்படி பூஜிக்கவும். முடிவில் நைவேத்யம் கொடுத்து பிரதிஷ்டோத்ஸவத்தை அனுஷ்டிக்கவும் என்று பூஜை முறைகள் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வதந்தரமான தேவாலயத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்யும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என்று கூறி அந்த விசேஷம் கூறப்படுகிறது. முடிவில் எந்த மனிதன் இவ்வாறு பிரதிஷ்டை செய்கிறானோ அவன் விருப்பப்பட்ட பலனை அடைவான் என கூறப்படுகிறது. இவ்வாறு 58வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். ஜடா மகுடத்தோடு கூட பிறை சந்திரனை சிரசில் தரித்தவராய்

2. மூன்று கண், நான்கு கைகளோடு கூடினவராய் புதிய பால்யத்தினால் கர்வமுடையவராய் சமமான வளைவோடு ஈஸ்வரன் நின்ற திருக்கோலத்தில் இருப்பவராக ஈஸ்வரன் கூறப்படுகிறார்.

3. வலது கால் சிறிது வளைந்தும் இடது கால் ஊன்றியும் சந்திரசேகரரைப் போல் பிரகாசத்தை உடைய மற்ற இரண்டு கைகளையும் உடையவராயும்

4. ஜலத்தை கிரஹிப்பதில் தகுதி உடையதான வலது இடது கையை உடையவராய் தன்னுடைய இடது கையினால் கிரஹிக்கப்பட்டவராய் சந்தோஷமான மனதோடு

5. மூக்கு நுனியிலிருந்து இடது மார்பக மத்யத்தில் தொங்குகின்ற சூத்திரத்தையும் தொப்புள் நடுவிலிருந்து வலது இடது பக்கத்தில் வெளியிலேயும்

6. ஒவ்வொரு அங்குலம், வெளியே தள்ளி தொப்புள் சூத்ரமானது நடுவில் ஆகும். வரத ஹஸ்தத்தினுடைய பின் பகுதியின் நீளம் மணிக்கட்டினுடைய அகலமாகும்.

7. கைகளின் நடுவிலிருந்து, பத்தொன்பது அங்குலம் நடுவில் இடைவெளியாகும். பக்கவாட்டில் ஆறு அங்குல மாத்ரம் நடுவாகும்.

8. குஹ்யத்தினுடைய அடியின் சமயத்தில் வலது கடகமுத்திரையை தொங்குவதாகும். நாபியிலிருந்து மணிக்கட்டு வரையில் ஆறங்குலம் கூறப்படுகிறது.

9. கையினுடைய, நடுவிலிருந்து பக்கம் வரையில் ஐந்தங்குலம் கூறப்படுகிறது. கால்கட்டை விரல்களின் நடுவானது குதிகால்களின் நடுவாகும்.

10. முழங்காலுடைய நடுவில் சூத்திரத்தினுடைய மத்தியம், ஐந்து மாத்திரையாக கூறப்படுகிறது. சந்திரசேகர மூர்த்தியைப் போல் மற்ற கைகளுடைய இடைவெளி கூறப்படுகிறது.

11. உயர்ந்த அந்தனர்களே அம்பாளுடைய அளவு முன்போல் இங்கு கூறப்படுகிறது. அம்பாள் பார்வை முகம், உதடு, கக்ஷம், மார்பக அமைப்பு இருக்க வேண்டும்.

12. அந்த தேவியினுடைய மற்றொரு பாகத்தில் லக்ஷ்மி தேவியானவள் லக்ஷணத்தோடு கூடவும் தேவியினுடைய இடுப்பில் கையை வைத்துக் கொண்டவளாகவும் இருக்க வேண்டும்.

13. லக்ஷ்மீ தேவியின் இடுப்பு பன்னிரண்டு அம்சங்களாலும், அவ்வாறே தொப்புள், மற்றொரு கையும் பன்னிரண்டு அம்சங்களாகும். இரண்டு பாதங்களுடைய கட்டைவிரலின் இடைவெளி பதினெட்டு அங்குலமாகும்.

14. ஆறு அங்குலம் குதிகால்களின் நடுப்பக்கம் உள்ளதாக மஹாலக்ஷ்மி கூறப்படுகிறாள். ஈஸ்வரனுடைய உயரத்தில் பத்தில் ஒரு பாகம் முதல் பதினோரு பாகம் வரையில் பாகத்தின் உயரத்தோடு கூடினவராய்

15. பச்சை வர்ணமாய், கிரீட மகுடத்தோடு சங்க, சக்ரத்தை தரித்துக் கொண்டு, கையில் வைத்துக் கொண்ட

16. ஜலத்தோடு கூடின கெண்டியை உடையவராய் விஷ்ணுவானவர் கூறப்படுகிறார். மூக்கு நுனியிலிருந்து இருக்கக்கூடிய கைகளின் கட்டைவிரல் வரை உள்ளதாக நூலை தொங்க விட வேண்டும்.

17. அந்த சூத்திரத்திலிருந்து தொப்புள் வரையில் நான்கு அங்குலம் கூறப்படுகிறது. கெண்டியினுடைய விஸ்தாரமானது இரண்டு சூத்திரதாள அளவு கூறப்படுகிறது.

18. அவருடைய கழுத்தினுடைய அளவானது ஐந்து அங்குல வளவாகும். உருண்டை வடிவமுமாகும். வாயானது ஐந்தங்குலம் மூக்கானது ஐந்தங்குலமாகும்.

19. அதனுடைய அடியானது, ஐந்தங்குலம், நுனியானது அதனுடைய முக அளவாகும். ஒரு அங்குலம், அதனுடைய பாதஅளவும் அதனுடைய அடியிலிருந்து நுனி வரை மூன்று மூன்று அங்குலமாகும்.

20. ஐந்து மாத்திரை அளவுகளால் விஷ்ணுவின் அழகான இடம் கையில் கெண்டி இருப்பதாகவும் அதன் மேல் வலது கையில் ஜலதாரையை கல்பிக்க வேண்டும். ஸ்வாமியின் வலது கையின் மேல் அம்பாள் கையை வைத்து அதில் விஷ்ணுவினால் இடது கையிலுள்ள நீரை வலது கை மூலம் ஊற்றுவதாக அமைக்க வேண்டும் என்பதாகும்.

21. கெண்டியினுடைய அடிபாகமுடைய கையினுடைய உயரத்தையும் தொப்புள் சூத்திரத்தில் ஸமமாக இருக்க வேண்டும். தொப்புளிலிருந்து மணிகட்டு வரை ஏழு அங்குல அளவு எனக் கூறப்பட்டது.

22. மற்ற மணிகட்டுகளிலிருந்து, நீர்தாரைவரையுள்ளது. ஏழு மாத்திரையளவாகும். வலது கையினால் இடது கையினால் வரதமாகவும் கடகமாகவும் அமைக்க வேண்டும்.

23. விஷ்ணுவிற்கு கூறப்பட்ட படி பிரம்மாவை செய்ய வேண்டும். நான்கு கைகள், நான்கு முகம் ஜடாமகுடத்தோடு செய்ய வேண்டும்.

24. ஒட்யானத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு பூனூல், உத்தரீயத்தோடு குங்குமம் முதலான சோபனத் திரவ்யத்தோடு ஹோமத்திற்கு தயாராய் இருப்பவராகவும் மலர்ந்த முகத்தோடும்

25. மேலே வலது, இடது கைகளில் கமண்டலு, அக்ஷமாலையும் கீழ் வலது, இடது கைகளில் வரத அபயத்தோடும்

26. ஸ்ருவத்தை எடுத்துக் கொண்ட கார்யத்தோடு மற்றொன்று கடகமுத்திரையோடும் நெற்றி மூக்கு நுனி இடை நடுவில் தொப்புள் நடுவில்

27. பிறகு தொப்புளுக்கு மேல் பத்து பாகம் காலினுடைய கட்டைவிரல் அடியில் முதற்கொண்டு எட்டு பத்து அங்குலம்

28. அபயமானது, மார்பகம், தொப்புள் வரையில் மணிக்கட்டு அதன் நடுவில் பதினான்கு மாத்திரையாகும். பக்கத்தை நடுக்கையின் இடைவெளி ஆறு மாத்திரையாகும். முழங்காலுக்கு நடுவில் நின்ற சரீரத்தை சமானமாக உதாரணம் சொல்லப்பட்டது. பத்மாஸநத்தில் இருக்கின்ற பிரம்மாவின் ரூபம் இது மாதிரியாகும்.

29. நேரான நின்ற கோல அமைப்பின் முழங்காலில் இடைவெளி சரீரத்தின் இடைவெளி சமமாகும். இவ்வாறு ப்ரும்மரூபம் அறிந்து அவர் பத்மாஸனத்தில் இருப்பதாகவும் அறிய வேண்டும்.

30. தேவருடைய அங்குல அளவினால் இருபத்திரண்டு அங்குலமாகும். அக்னி குண்டத்தினுடைய ஆக்ருதி மூன்று மேகலை உடையதாகும்.

31. முனி புங்கவர்களே மேகலையானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அங்குலம் ஆகும். அக்னியின் ஏழு நாக்கானது, பன்னிரண்டங்குல நீள அகலம் உள்ளதாகவோ

32. குண்டத்தின் நடுவில் இருக்கக்கூடிய அக்னியானது தானாகவே ஐந்து நாக்கை உடையதாகவும் அமைக்கவும். ஒரு முழம் முதல் நடுவில் பிரமானமாக எது ஆகின்றதோ

33. அந்த அளவு உயர்த்திய கை, கால்களுக்கும் அங்கங்களுக்கும் இங்கு கூறப்படுகின்றது. இவை அதிகமாகவோ குறைவாகவோ

34. வில், அம்பு, முதலிய ஆயுதங்களின் எடுத்திருப்பதிலும் வைத்திருப்பதிலும், இந்த முறையாகும். ஆயுதங்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் நியமங்கள் கூறப்பட்டுள்ளது.

35. ஸர்வ ஸாஸ்திரங்களில் பார்த்த மாத்திரத்திலேயே விளக்கப்படுகின்றது. எல்லா ஆபரணங்களும் இடதுபாக வலது பாக பிரிவாக கூறப்படுகின்றது.

36. எல்லா பிம்பங்களுக்கு தர்சனத்தையும், தேவியர்களுக்கும், மனிதர்களுக்கும், விசேஷமாக கல்யாண மூர்த்தியை காண்பிக்க வேண்டும்.

37. இது மாதிரி அமைப்புமுறை கூறப்பட்டது. பிரதிஷ்டா விதியை கூறுகிறேன். நல்ல காலத்தை அறிந்து முன்போல அங்குரார்ப்பணத்தை செய்து கொண்டு

38. ஈஸ்வரனுடைய வலது பாகத்தில் பிரம்மாவையும் இடது பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கில் லக்ஷ்மியையும் உத்தமமான தேசிகர் வைக்க வேண்டும்.

39. பிறகு நவரத்னங்களை ஈஸ்வரனுக்கும், விஷ்ணுவிற்கும் வைக்க வேண்டும். பிரம்மா, கவுரீ, லக்ஷ்மி தேவிகளுக்கு தங்கத்தை வைக்க வேண்டும்.

40. நயனோன் மீலனம் பிறகு செய்து அந்தந்த பிரதிஷ்டையில் கூறப்பட்டபடி பிம்பசுத்தியும் நகரபிரதட்சிணத்தையும்

41. ஜலாதி வாசத்தில் நடுவில் ஈஸ்வரனையும், வலது இடது பக்கத்தில் பிரம்மாவையும், விஷ்ணுவையும், பிரம்ம விஷ்ணுவின் பக்கத்தில் அம்பிகையும், லக்ஷ்மியையும் வைக்க வேண்டும்.

42. முன்பு போல் உருவாக்கப்பட்ட யாக மண்டபத்தை அடைந்து கிழக்கு வடக்கு, கேடயத்தில் ஸ்நான வேதிகையோடு கூடியதில்

43. அந்த பரமேஸ்வரனுக்கு கிழக்கு, தெற்கு, வடக்கிலும், இஷ்டமான இடத்தில் ஒன்பது, ஐந்து, யோனி குண்டங்களோடு கூடியதாகவும்

44. ஸ்னான வேதிகை மூன்றோடும் தேவிக்கு முன்பே சொல்லப்பட்ட படியும் தேவருடைய மண்டபத்தில் ஒன்பது குண்ட அமைப்பிலும்

45. ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையின் கணக்கிலே சதுர, எண்கோண, வட்ட குண்டங்களை நிர்மாணிக்க வேண்டும்.

46. சில்பியை திருப்தி செய்வித்து அந்தணர்க்கு உணவளித்தல் புண்யாஹ வாசனம் வாஸ்த்து சாந்தி ஸயனத்திற்கு ஸ்தண்டிலமும் செய்ய வேண்டும்.

47. ஸ்நபனமானது விஷ்ணு, கவுரீ, லக்ஷ்மி, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சயனத்தில் ஈஸ்வரனையும், படுக்க வைத்து இடது பாகத்திலும் வலது பாகத்திலும்

48. வேறு படுக்கையில் விஷ்ணுவையும் பிரம்மாவையும் படுக்க வைக்க வேண்டும். தேவியினுடைய மண்டபத்தில் தேவியையும் வலது பாகத்தில் லக்ஷ்மியையும்

49. வடக்கு பக்கத்தில் அக்னியை, சங்கல்பித்து தனியான படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். சிவப்பு, வஸ்திரத்தினால் ஈஸ்வரனையும் தேவியை மஞ்சள் வஸ்திரத்தினாலும்

50. நீல வஸ்திரத்தினால் விஷ்ணுவையும், நல்முத்து வர்ணத்தால் லக்ஷ்மியையும் அதே நிறத்தால் பிரம்மாவையும் உத்தமமான ஆசார்யர்கள் ஒவ்வொரு மண்டபங்களுக்கும் கிரஹிக்கத்தக்கவர்கள் ஆவர்.

51. குருவானவர் ஒவ்வொரு தேவர்களுக்கும் அவர்களுடைய தலைபாகத்தில் வர்தனியோடு கூடின சிவகும்பத்தையும் வர்தனீகும்பத்தையும்

52. பிரம்மா, விஷ்ணு, தலைபாகத்தில் இரண்டு குடங்களை வைக்க வேண்டும். சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அஷ்ட விந்யேஸ்வரர்களை பூஜிக்க வேண்டும்.

53. தேவி, லக்ஷ்மி அக்னிக்கு தலைபாகத்தில் மூன்று கடங்களையும் வாமாதி எட்டு சக்திகளை சுற்றிலும் எட்டு கும்பங்களில் பூஜிக்க வேண்டும்.

54. அந்தந்த லக்ஷணத்தோடு கூட உருவான அமைப்புடன் கூடியதாக தனித்தனியாக சந்தன, புஷ்ப நைவேத்யங்களால் பூஜிக்க வேண்டும்.

55. முன்போலவே பரமேஸ்வரனுக்கு தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தந்த தத்வதத்வேஸ்வர் முதலியவர்களை நியசிக்க வேண்டும்.

56. பிறகு குண்டஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். சமித்து, நெய், ஹவிஸ், பொறி. எள்ளு, வெண்கடுகு, பயறு

57. புரசு அத்தி, அரசு, ஆல், கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயற்கொன்னை, அக்னி கோணங்களிலும்

58. பிரதான குண்டத்தில் புரசு சமித்தாகும். எல்லா குண்டங்களிலும் புரசு, சமித்து கூறப்பட்டு இருக்கிறது. ஒவ்வொன்றும் முன்போல் ஹோமம் செய்து உத்தமமான ஆசார்யன்

59. தன் வீட்டிலோ ஆலய சமீபத்திலோ சிரமத்தை போக்குவதற்காக ஆசார்யன் தூங்க வேண்டும். விடியற்காலையில் நித்ய கர்மாவை முடித்து கர்த்தாவானவன் ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.

60. வஸ்திர, தங்க மோதிரம், இவைகளை கூட ரித்விக்குகளோடு கூட பஞ்ச நிஷ்க்க எடையிலே முடிவில் தட்சிணை கொடுத்து

61. பிம்பங்களுடைய முன் நிலையில் கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து பிம்பத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியில் இருந்து மந்திரத்தை எடுத்து தேவி ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

62. ஸ்வாமியோடு கூடி ஒரே பீடத்தில் உமாதேவி இருப்பின் தேவிக்கு வர்தனியையும் தனியே இருப்பின் பீடநடுவிலும் உமா தேவியையும், வேறு பீடத்தில் தேவி இருக்கும் போது தேவியையும் மந்திரத்தை சேர்க்க வேண்டும்.

63. மற்றவர்களுடைய மூலமந்திரத்தை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும். ஸ்னபனம் செய்து, அர்ச்சனையை முறைப்படி செய்யவேண்டும்.

64. கடைசியில் நைவேத்யத்தை செய்து ப்ரதிஷ்டோத்ஸவம் செய்யவும். சிறிது விசேஷம் இருக்கிறது. ப்ராம்மண உத்தமர்களே கேளுங்கள்.

65. ஸதாசிவர், முதலிய மூர்த்திகளுடைய தேவி திருக்கோயிலில் எந்த தேவீ யாருக்கு முறையோ ஸ்வதந்திர தேவியாக தேவாலயத்தில் இருக்கும் அமைப்பில் அவ்வாறே அமைக்க வேண்டும்.

66. பிரகாரம் மண்டபங்களுக்கு வெளியே, பிரதிஷ்டை செய்தால் அவைகளுக்கு கிழக்கு முதலிய திக்குகளில் ஒரு முழம், அளவுள்ளதாக அமைக்க வேண்டும்.

67. எப்படி அமைப்புள்ளதாக ஆகுமோ, அதன்படி அதனுடைய பயனும், அமையுமாம். அந்த தேவியினுடைய பக்கத்தில் செய்வதா செய்யக் கூடாதா என்பது கூறப்படுகிறது.

68. ஸ்வதந்திர அமைப்புகளில் வ்ருஷப வாஹனம், முதலியவைகளில் எப்பொழுதும் செய்ய வேண்டும். ஈசனாதி தேவர்களுக்கு தெற்குப் பக்கத்தில் தேவீ ஒரு பொழுதும் வைக்கக் கூடாது.

69. பிரதட்சிணத்தில் பிரகாரத்தில் சுவரை ஒட்டிய தேவர்கள் பிரதிஷ்டையானது தனிமையாகவோ, சேர்ந்தோ எந்த மனிதன் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் வேண்டும் பலன்களை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டா விதியாகிய ஐம்பத்தியெட்டாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: