வியாழன், 24 ஏப்ரல், 2014

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!
---------------------------------------------
மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
---------------------------------------------
ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
---------------------------------------------
மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
---------------------------------------------
கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
---------------------------------------------
சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
---------------------------------------------
கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
---------------------------------------------
துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
---------------------------------------------
விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
---------------------------------------------
தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
---------------------------------------------
மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
---------------------------------------------
கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
---------------------------------------------
மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
*******************************************************************
வைகாசி விசாகம்: விரதமுறையும் பலனும்!

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
முருகனின் பிறந்த நாள்!

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும்.

பன்னிரு கரங்களின் பணி: முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும் முனிவரையும் காக்கிறது. மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை). பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
வைகாசி விசாக விரதமுறை!

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

*பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும்.

* நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

* முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.

* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

* முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

* முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இமயமலை திருக்கோயில்கள்:- மானா கிராமம் (மகாபாரதம் எழுதப்பட்ட தலம்)

மானா என்னும் தலம் பத்ரிநாத் திருக்கோயிலில் இருந்து 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய எல்லையின் கடைசி கிராமமாகவும் இத்தலம் அறியப்பட்டு வருகிறது.

பிரமன் வியாசரை மகாபாரதம் இயற்றுமாறு பணித்தார். இத்திருப்பணி இனிது நிறைவேற விநாயகப் பெருமானின் உதவியைக் கோருமாறும் வியாசருக்கு அறிவுறுத்தினார் நான்முகன். வேத வியாசர் முழுமுதற் கடவுளை நோக்கி தவம் புரியவும், கோடி சூர்ய பிரகாசமாய் ஆனைமுகக் கடவுள் தோன்றி அருளினார்.

வியாசர் விநாயகரைப் போற்றிப் பணிந்து, தாம் இயற்றும் மகாபாரத இதிகாசத்தை எழுதித் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். விநாயகப் பெருமான் 'தான் எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுத்து வியாசர் பாடல்களை பாட வேண்டும்' என்னும் நிபந்தனையோடு இசைந்து அருளினார்.

நடுநடுவே சிறிது அவகாசம் பெறும் பொருட்டு 'பாடல்களின் பொருளை உணர்ந்த பின்னரே எழுதி அருள வேண்டும்' என்று கணபதியிடம் வேண்டினார் வியாசர். பெருமானும் புன்சிரிப்புடன் உடன் பட்டு அருளினார். ஒவ்வொரு 5000 பாடல்களின் முடிவிலும் இரு அர்த்தம் தோன்றுமாறு ஒரு பாடலை பாடுவார் வியாசர்.

கருணைக் கடலான ஆனைமுக இறைவனும் வியாசருக்கு சிறிது அவகாசம் தந்தருளும் பொருட்டு சில நொடிகள் சிந்திப்பதைப் போல் பாவனை புரிந்துப் பின் எழுதி அருளுவார். அந்த சில கணங்களில் வியாசர் அடுத்த 5000 பாடல்களை மனதில் முறைப் படுத்திக் கொள்வார்.

இப்படியாக கணேசப் பெருமான் எழுதி அருளியது 60 லட்சம் பாடல்கள். அவற்றுள் பூவுலகில் தங்கியது 1 லட்சம் பாடல்களே. 'மானா' தலத்தில் வேத வியாசர் தங்கி இருந்த குகையையும், ஐந்தாம் வேதமாக போற்றப் படும் மகாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமான் எழுதி அருளிய குகையையும் தரிசித்து மகிழலாம்.


 
 
 
முருகப் பெருமானுக்கு காவடி வழிபாடு தோன்றிய சுவையான வரலாறு

குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை, அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.

காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.

கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.

பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.

பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.

பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்.

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)

முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் (Dutch) படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்க்க முனைந்தார். எனினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி, ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்ப்பித்து விட்டனர்.

அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.

அதே சமயம், வடமலையப்பர் என்னும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் எழுந்தருளி இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக கருடப் பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர், கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.

குறிப்பிட்ட இடத்தில், கருடப் பறவையும் வானில் தோன்ற, கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் மீண்டும் ஷண்முகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர். திருச்செந்தூர் வாழ் மக்களும், தங்கள் வாழ்வோடும், ஆன்மாவோடும் கலந்து விட்ட ஷண்முகக் கடவுளை போற்றித் துதித்தனர்.

காஞ்சீபுரம்:- நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தந்தருளும் அத்தி வரதர்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் காஞ்சியில் அமைந்து உள்ள வரதராஜப் பெருமான் ஆலயமும் இடம் பெறுகிறது. இத்தலத்தில் ஆதியில் எழுந்தருளி இருந்த மூலமூர்த்தியின் திருநாமம் அத்தி வரதர். பிரமனின் யாகத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தியான இப்பெருமானின் திருமேனி அத்தி மரத்தால் அமையப் பெற்ற சிறப்புப் பொருந்தியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்நியப் படையெடுப்பில் மூல மூர்த்தி சிறிது பிண்ணம் அடையும் நிலை ஏற்பட்டது. 'அனந்த சரஸ்' என்று அழைக்கப் படும் திருக்கோயில் தீர்த்தத்தின் நீருக்கு அடியில் ஒரு மண்டபம் அமைத்து அதில் மூலவரான அத்தி வரதப் பெருமானை எழுந்தருளச் செய்தனர்.

பின்பு 'பழைய சீவரம்' என்னும் இடத்தில் இருந்து மற்றொரு மூல மூர்த்தியை அமைத்து, பெருமானை ஆகம விதிப்படி அம்மூர்த்தியில் ஆவாகனம் செய்வித்து திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். இப்பெருமானே தற்பொழுது நாம் தரிசித்து மகிழும் வரதராஜப் பெருமான் ஆவார்.

திருக்குள நீருக்கு அடியில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதி மூர்த்தி அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்பட்டு திருக்கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் எழுந்தருளுவார். பத்து நாட்கள் பெரு மகிழ்வுடன் அனைவருக்கும் திவ்ய தரிசனம் அளித்துப் பின் மீண்டும் தீர்த்த மண்டபம் புகுந்து அருளுவார்.

கடந்த முறை அத்தி வரதப் பெருமான் தரிசனம் அளித்தது 1979 ஆம் ஆண்டில். அடுத்த முறை தரிசனம் தர இருப்பது 2019 ஆம் ஆண்டில். ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் பாடிப் பரவிய அத்தி வரதரை கட்டாயம் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

வள்ளி மலை (ஸ்ரீவள்ளியின் அவதாரத் தலம்)

1. வள்ளி மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
2. வேடர் தலைவனான நம்பிராஜன் ஸ்ரீ வள்ளியை குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்த தலம்.
3. முருகக் கடவுள் வேடனாக வந்து ஸ்ரீவள்ளியிடம் தன் காதலை தெரிவித்த தலம்.
4. (பின்னர்) முருகப் பெருமான் வயோதிக வேடத்தில் தோன்றி ஸ்ரீவள்ளியிடம் தேனும், தினை மாவும் பெற்றுப் பின் தன்னை மணம் புரியுமாறு கேட்டு திருவிளையாடல் புரிந்து அருளிய தலம்.
5. ஸ்ரீவிநாயகர் யானை உருவில் வந்து ஸ்ரீ வள்ளியை பயம் கொள்ளச் செய்து, தன் சகோதரனின் காதலுக்கு உதவி அருளிய தலம்.
6. குமரக் கடவுள் ஸ்ரீவள்ளியை மணம் புரிந்து அருளிய தலம்.
7. தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எண்ணற்ற திருப்பணிகள் செய்விக்கப் பட்ட தலம்.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. மலை அடிவாரத்தில் உள்ள திருக்கோயில். புனிதத் தன்மை வாய்ந்த சரவணப் பொய்கை தீர்த்தம்.
2. மலை உச்சியில் உள்ள குடவரைக் கோயில்: அடிவாரத்தில் இருந்து 444 படிகளைக் கடந்து இக்கோயிலை அடையலாம்.
3. குமரி தீர்த்தம்: ஸ்ரீவள்ளி வயோதிக வேடத்தில் வந்த தமிழ்க் கடவுளுக்கு அருந்த நீர் கொடுத்து அருளிய இடம் (மலைக் கோயில்).
4. கணேச கிரி: ஸ்ரீவிநாயகர் வடிவில் அமைந்துள்ள பாறை (மலைக் கோயில்). இப்பெருமானே ஸ்ரீவள்ளி நாயகியின் கரம் பற்ற குகக் கடவுளுக்கு உதவி புரிந்து அருளியவர்.
5. திருமால் கிரீஸ்வரர்: சிவபெருமான் பரந்தாமனின் திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார் (மலைக் கோயில்).
6. வள்ளி மலை சுவாமிகளின் ஜீவ சமாதிக் குகை (மலைக் கோயில்).

பக்குவம் அடைந்த ஜீவாத்மாவை பரமாத்மா தேடி வந்து ஆட்கொள்ளும் அருட்செயலே ஸ்ரீவள்ளி திருமணம் உணர்த்தும் உட்குறிப்பு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத புனிதத் தன்மை பொருந்திய தலம் வள்ளி மலை. கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

திருவண்ணாமலையில் அற்புதம் - அனைவருக்கும் கிடைத்த மயில் வாகனின் பேரின்ப தரிசனம்

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். முருக வழிபாட்டு சமயத்திற்கு தனிப்பெரும் குருநாதர். இவரின் காலத்தில் வாழ்ந்த சம்பந்‌தாண்டான் என்னும் காளி உபாசகன் அருணகிரிநாதரின் புகழ் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருந்தான். ஒரு முறை இவன் அரசனான பிரபுடதேவராயனை ஏவி, அருணகிரிப் பெருமானை அரசவைக்கு அழைத்து வரச் செய்தான்.

மன்னன் அருணகிரிநாதர் மீது பெருமதிப்புக் கொண்டவன். இருப்பினும் சம்பந்‌தாண்டானுக்கு அஞ்சி இதற்கு உடன்பட்டான். அவைக்கு வந்த அருணகிரிநாதரைப் பார்த்து 'உம் மார்கம் உண்மை எனில் முருகக் கடவுளை வரவழைத்துக் காட்டும்' என்று சம்பந்‌தாண்டான் சூளுரைத்தான். அன்பே உருவான அருணகிரியாரும் சம்மதித்து அருளினார்.

சம்பந்‌தாண்டான் இரவு முழுவதும் காளி பூஜை செய்து, தன் 12 ஆண்டு வழிபாட்டின் எஞ்சிய பலனாக 'முருகக் கடவுளை காலையில் தோன்ற விடாமல் செய்தருள வேண்டும்' என்று காளியிடம் வஞ்சகமாக பிரார்த்தித்தான். காளி தேவியும் 'உன் வழிபாட்டின் பலன் இத்துடன் நிறைவுற்றது. யாம் குமரவேளை தடுத்து அருள்வோம். இருப்பினும் உன் எண்ணம் ஈடேறாது' எனக் கூறி மறைந்தருளினாள்.

மறு நாள் காலையில் திருவண்ணாமலை திருக்கோயிலில் அமைந்துள்ள முருகக் கடவுளின் சந்நிதி முன்பு அனைவரும் கூடினர். அருணகிரியார் திருப்புகழ் பாடல்களால் குமரவேளை துதித்துப் பாடியும், பெருமான் தரிசனம் அளித்தருளவில்லை. ஞானக் கண் கொண்டு தரிசித்த அருணகிரியார், காளி தேவியின் பிடியில் குமரவேள் கட்டுண்டு இருப்பதைக் கண்ணுற்றார்.

பின்னர் அருணகிரியார் பெருமானின் வாகனமான மயிலை நினைந்து 'மயில் விருத்தம்' பாடி அருள, அப்பாக்களால் மெய் மறந்த காளி தேவியின் பிடி தளர்ந்தது. அக்கணமே திருக்கோயில் தூண் பிளந்து, கோடி சூர்ய பிரகாசமாய் குழந்தைக் கடவுள் மயில் மீது காட்சி அளித்து அருளினார். 'என்னே ஆச்சரியம்; என்னே வியப்பு; குமரவேளின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ? !!!

கற்ப கோடி காலம் தவம் இருந்தாலும் புலப்படாத பரம்பொருளை - சிவ ஜோதியான ஆறுமுகக் கடவுளை கண் முன் நிறுத்தியது தமிழ்ப் பாக்கள் அன்றோ!!! என்னே அருணகிரிநாதரின் மாண்பு!! 'நல்லார் ஒருவர் உளரேல் - அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்றாள் அவ்வை. அருணகிரியாரால் ஆயிரக் கணக்கானோர் முருக தரிசனம் பெற்று உய்ந்தனர்!!!!!
ஸ்ரீவள்ளி - தெய்வயானை அவதாரம்: பாற்கடல் வாசனுக்கும் முருகப் பெருமானுக்கும் உள்ள உறவு (கந்த புராணம் விளக்கும் சுவையான நிகழ்வுகள்)

பாற்கடலில் உறையும் ஸ்ரீமன் நாராயணரின் திருக்கண்களில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி - சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றினர். பரந்தாமனின் ஆசி பெற்ற இருவரும், முருகப் பெருமானை மணம் புரிய விருப்பம் கொண்டு, இமயமலைச் சாரலில் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

கன்னியர் இருவரின் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் தரிசனம் அளித்து அருளினார். அருள் சக்திகளான தேவியர் உடனிருப்பது சம்ஹாரத்திற்கு தடையென உணர்த்தி, சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிந்து அருள்வதாக வாக்களித்தார்.

மேலும் சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறும் ஆணையிட்டு அருளினார். அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்து வந்தது. ஆதலால் அக்குழந்தை 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றது.

இது ஒரு புறம் இருக்க, வள்ளி மலையில் மற்றொரு தெய்வ நாடகம் அரங்கேறியது. சிவமுனி என்னும் முனி வேடம் தாங்கி ஸ்ரீமகாவிஷ்ணு தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை அக்கணமே ஈன்று அருளிப் பின் மறைந்தது.

வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி இனிது வளர்த்து வந்தான். செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், ஸ்ரீவள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்து அருளினார்.

ஸ்ரீவள்ளி அம்மையும், தெய்வயானைத் தாயாரும் இச்சா சக்தி - கிரியா சக்தியின் திருவடிவங்கள். இவர்களோடு ஆறுமுகப் பெருமான் ஞான சக்தியாய் வீற்றிருப்பார். இந்நிகழ்வுகளால் குமரவேள் 'மால் - மருகன் (திருமாலின் மருமகன்)' என்னும் திருநாமம் பெற்றார்.