வியாழன், 24 ஏப்ரல், 2014

முருகப் பெருமானுக்கு காவடி வழிபாடு தோன்றிய சுவையான வரலாறு

குமர வேளுக்கும், சூரனுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் தப்பிப் பிழைத்த மிகச் சில அசுரர்களில் இடும்பனும் ஒருவர். யுத்தத்துக்குப் பின், தவறு உணர்ந்து நல்வழி செல்ல விரும்பிய இடும்பனை, அகத்திய முனிவர் சீடனாக ஏற்றார். சிவகிரி - சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு இடும்பனை பணித்தார் கும்ப முனியான அகத்தியர்.

காவடி போன்ற அமைப்பில், இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி, ஆகாய மார்கமாக பயணித்தார் இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு, 'பழனி' அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின், பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.

கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும் படி பாலகனிடம் கூற, பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக, பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.

பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை பெருமான் சம்ஹரித்து அருளினார். பெருமான் இடும்பனையா அழித்தார் ? - கோடிப் பிறவிகளில் தொடர்ந்து வரும் இடும்பனின் சஞ்சித வினையை அன்றோ அழித்தார்!! பின்னர் பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன், பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினார்.

பழனியில் காவல் பணி புரிதலையும், காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் - இரு வரங்களாக வேண்டி நின்றார் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து, சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.

பின்னாளில் 'போகர்' நவ பாஷாணத்தால் பழனி இறைவனின் திரு உருவத்தை செய்வித்து, அதில் பால தண்டாயுதபாணிப் பெருமானை எழுந்தருளச் செய்தார். பழனியில் தொடங்கிய காவடி வழிபாடு, இன்று கந்தவேளின் ஆலயங்கள் யாவற்றிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் இடும்பனின் ஆலயத்தை தரிசித்துப் பின் பழனி ஆண்டவனை தரிசிப்பது முழுப் பலனையும் நல்கும்.

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு)

முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் (Dutch) படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்க்க முனைந்தார். எனினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி, ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்ப்பித்து விட்டனர்.

அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.

அதே சமயம், வடமலையப்பர் என்னும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் எழுந்தருளி இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக கருடப் பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர், கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.

குறிப்பிட்ட இடத்தில், கருடப் பறவையும் வானில் தோன்ற, கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் மீண்டும் ஷண்முகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர். திருச்செந்தூர் வாழ் மக்களும், தங்கள் வாழ்வோடும், ஆன்மாவோடும் கலந்து விட்ட ஷண்முகக் கடவுளை போற்றித் துதித்தனர்.

காஞ்சீபுரம்:- நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தந்தருளும் அத்தி வரதர்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் காஞ்சியில் அமைந்து உள்ள வரதராஜப் பெருமான் ஆலயமும் இடம் பெறுகிறது. இத்தலத்தில் ஆதியில் எழுந்தருளி இருந்த மூலமூர்த்தியின் திருநாமம் அத்தி வரதர். பிரமனின் யாகத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தியான இப்பெருமானின் திருமேனி அத்தி மரத்தால் அமையப் பெற்ற சிறப்புப் பொருந்தியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்நியப் படையெடுப்பில் மூல மூர்த்தி சிறிது பிண்ணம் அடையும் நிலை ஏற்பட்டது. 'அனந்த சரஸ்' என்று அழைக்கப் படும் திருக்கோயில் தீர்த்தத்தின் நீருக்கு அடியில் ஒரு மண்டபம் அமைத்து அதில் மூலவரான அத்தி வரதப் பெருமானை எழுந்தருளச் செய்தனர்.

பின்பு 'பழைய சீவரம்' என்னும் இடத்தில் இருந்து மற்றொரு மூல மூர்த்தியை அமைத்து, பெருமானை ஆகம விதிப்படி அம்மூர்த்தியில் ஆவாகனம் செய்வித்து திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். இப்பெருமானே தற்பொழுது நாம் தரிசித்து மகிழும் வரதராஜப் பெருமான் ஆவார்.

திருக்குள நீருக்கு அடியில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதி மூர்த்தி அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்பட்டு திருக்கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் எழுந்தருளுவார். பத்து நாட்கள் பெரு மகிழ்வுடன் அனைவருக்கும் திவ்ய தரிசனம் அளித்துப் பின் மீண்டும் தீர்த்த மண்டபம் புகுந்து அருளுவார்.

கடந்த முறை அத்தி வரதப் பெருமான் தரிசனம் அளித்தது 1979 ஆம் ஆண்டில். அடுத்த முறை தரிசனம் தர இருப்பது 2019 ஆம் ஆண்டில். ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் பாடிப் பரவிய அத்தி வரதரை கட்டாயம் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

வள்ளி மலை (ஸ்ரீவள்ளியின் அவதாரத் தலம்)

1. வள்ளி மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
2. வேடர் தலைவனான நம்பிராஜன் ஸ்ரீ வள்ளியை குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்த தலம்.
3. முருகக் கடவுள் வேடனாக வந்து ஸ்ரீவள்ளியிடம் தன் காதலை தெரிவித்த தலம்.
4. (பின்னர்) முருகப் பெருமான் வயோதிக வேடத்தில் தோன்றி ஸ்ரீவள்ளியிடம் தேனும், தினை மாவும் பெற்றுப் பின் தன்னை மணம் புரியுமாறு கேட்டு திருவிளையாடல் புரிந்து அருளிய தலம்.
5. ஸ்ரீவிநாயகர் யானை உருவில் வந்து ஸ்ரீ வள்ளியை பயம் கொள்ளச் செய்து, தன் சகோதரனின் காதலுக்கு உதவி அருளிய தலம்.
6. குமரக் கடவுள் ஸ்ரீவள்ளியை மணம் புரிந்து அருளிய தலம்.
7. தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எண்ணற்ற திருப்பணிகள் செய்விக்கப் பட்ட தலம்.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. மலை அடிவாரத்தில் உள்ள திருக்கோயில். புனிதத் தன்மை வாய்ந்த சரவணப் பொய்கை தீர்த்தம்.
2. மலை உச்சியில் உள்ள குடவரைக் கோயில்: அடிவாரத்தில் இருந்து 444 படிகளைக் கடந்து இக்கோயிலை அடையலாம்.
3. குமரி தீர்த்தம்: ஸ்ரீவள்ளி வயோதிக வேடத்தில் வந்த தமிழ்க் கடவுளுக்கு அருந்த நீர் கொடுத்து அருளிய இடம் (மலைக் கோயில்).
4. கணேச கிரி: ஸ்ரீவிநாயகர் வடிவில் அமைந்துள்ள பாறை (மலைக் கோயில்). இப்பெருமானே ஸ்ரீவள்ளி நாயகியின் கரம் பற்ற குகக் கடவுளுக்கு உதவி புரிந்து அருளியவர்.
5. திருமால் கிரீஸ்வரர்: சிவபெருமான் பரந்தாமனின் திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார் (மலைக் கோயில்).
6. வள்ளி மலை சுவாமிகளின் ஜீவ சமாதிக் குகை (மலைக் கோயில்).

பக்குவம் அடைந்த ஜீவாத்மாவை பரமாத்மா தேடி வந்து ஆட்கொள்ளும் அருட்செயலே ஸ்ரீவள்ளி திருமணம் உணர்த்தும் உட்குறிப்பு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத புனிதத் தன்மை பொருந்திய தலம் வள்ளி மலை. கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

திருவண்ணாமலையில் அற்புதம் - அனைவருக்கும் கிடைத்த மயில் வாகனின் பேரின்ப தரிசனம்

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். முருக வழிபாட்டு சமயத்திற்கு தனிப்பெரும் குருநாதர். இவரின் காலத்தில் வாழ்ந்த சம்பந்‌தாண்டான் என்னும் காளி உபாசகன் அருணகிரிநாதரின் புகழ் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருந்தான். ஒரு முறை இவன் அரசனான பிரபுடதேவராயனை ஏவி, அருணகிரிப் பெருமானை அரசவைக்கு அழைத்து வரச் செய்தான்.

மன்னன் அருணகிரிநாதர் மீது பெருமதிப்புக் கொண்டவன். இருப்பினும் சம்பந்‌தாண்டானுக்கு அஞ்சி இதற்கு உடன்பட்டான். அவைக்கு வந்த அருணகிரிநாதரைப் பார்த்து 'உம் மார்கம் உண்மை எனில் முருகக் கடவுளை வரவழைத்துக் காட்டும்' என்று சம்பந்‌தாண்டான் சூளுரைத்தான். அன்பே உருவான அருணகிரியாரும் சம்மதித்து அருளினார்.

சம்பந்‌தாண்டான் இரவு முழுவதும் காளி பூஜை செய்து, தன் 12 ஆண்டு வழிபாட்டின் எஞ்சிய பலனாக 'முருகக் கடவுளை காலையில் தோன்ற விடாமல் செய்தருள வேண்டும்' என்று காளியிடம் வஞ்சகமாக பிரார்த்தித்தான். காளி தேவியும் 'உன் வழிபாட்டின் பலன் இத்துடன் நிறைவுற்றது. யாம் குமரவேளை தடுத்து அருள்வோம். இருப்பினும் உன் எண்ணம் ஈடேறாது' எனக் கூறி மறைந்தருளினாள்.

மறு நாள் காலையில் திருவண்ணாமலை திருக்கோயிலில் அமைந்துள்ள முருகக் கடவுளின் சந்நிதி முன்பு அனைவரும் கூடினர். அருணகிரியார் திருப்புகழ் பாடல்களால் குமரவேளை துதித்துப் பாடியும், பெருமான் தரிசனம் அளித்தருளவில்லை. ஞானக் கண் கொண்டு தரிசித்த அருணகிரியார், காளி தேவியின் பிடியில் குமரவேள் கட்டுண்டு இருப்பதைக் கண்ணுற்றார்.

பின்னர் அருணகிரியார் பெருமானின் வாகனமான மயிலை நினைந்து 'மயில் விருத்தம்' பாடி அருள, அப்பாக்களால் மெய் மறந்த காளி தேவியின் பிடி தளர்ந்தது. அக்கணமே திருக்கோயில் தூண் பிளந்து, கோடி சூர்ய பிரகாசமாய் குழந்தைக் கடவுள் மயில் மீது காட்சி அளித்து அருளினார். 'என்னே ஆச்சரியம்; என்னே வியப்பு; குமரவேளின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ? !!!

கற்ப கோடி காலம் தவம் இருந்தாலும் புலப்படாத பரம்பொருளை - சிவ ஜோதியான ஆறுமுகக் கடவுளை கண் முன் நிறுத்தியது தமிழ்ப் பாக்கள் அன்றோ!!! என்னே அருணகிரிநாதரின் மாண்பு!! 'நல்லார் ஒருவர் உளரேல் - அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்றாள் அவ்வை. அருணகிரியாரால் ஆயிரக் கணக்கானோர் முருக தரிசனம் பெற்று உய்ந்தனர்!!!!!
ஸ்ரீவள்ளி - தெய்வயானை அவதாரம்: பாற்கடல் வாசனுக்கும் முருகப் பெருமானுக்கும் உள்ள உறவு (கந்த புராணம் விளக்கும் சுவையான நிகழ்வுகள்)

பாற்கடலில் உறையும் ஸ்ரீமன் நாராயணரின் திருக்கண்களில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி - சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றினர். பரந்தாமனின் ஆசி பெற்ற இருவரும், முருகப் பெருமானை மணம் புரிய விருப்பம் கொண்டு, இமயமலைச் சாரலில் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

கன்னியர் இருவரின் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் தரிசனம் அளித்து அருளினார். அருள் சக்திகளான தேவியர் உடனிருப்பது சம்ஹாரத்திற்கு தடையென உணர்த்தி, சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிந்து அருள்வதாக வாக்களித்தார்.

மேலும் சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறும் ஆணையிட்டு அருளினார். அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்து வந்தது. ஆதலால் அக்குழந்தை 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றது.

இது ஒரு புறம் இருக்க, வள்ளி மலையில் மற்றொரு தெய்வ நாடகம் அரங்கேறியது. சிவமுனி என்னும் முனி வேடம் தாங்கி ஸ்ரீமகாவிஷ்ணு தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை அக்கணமே ஈன்று அருளிப் பின் மறைந்தது.

வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி இனிது வளர்த்து வந்தான். செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், ஸ்ரீவள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்து அருளினார்.

ஸ்ரீவள்ளி அம்மையும், தெய்வயானைத் தாயாரும் இச்சா சக்தி - கிரியா சக்தியின் திருவடிவங்கள். இவர்களோடு ஆறுமுகப் பெருமான் ஞான சக்தியாய் வீற்றிருப்பார். இந்நிகழ்வுகளால் குமரவேள் 'மால் - மருகன் (திருமாலின் மருமகன்)' என்னும் திருநாமம் பெற்றார்.
சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்)

சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார்.

மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.

இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது.

ஆதியில், நிலத்தின் அடியில் இருந்து இப்பெருமான் தன்னை வெளிப்படுத்தி அருளினார். மூல மூர்த்தியின் திருவடிவத்தில், இடைப் பகுதியில் இருந்து திருவடிகள் வரை வேலைப் பாடுகள் இன்றி இருந்தது. உளி கொண்டு செதுக்க முயன்ற பொழுது குருதி பீறிட்டுக் கிளம்பியது.

அதனால், கிடைக்கப் பெற்ற அதே திருவடிவுடன் 'சிரகிரி வேலவரை' திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். மூலவர் திருவுடலில் இடைப் பகுதியில் இருந்து கவசம் அணியப் பெற்றுள்ளதை இன்றும் கண்டு மகிழலாம். எண்ணற்ற அற்புதங்களை தன்னுள் கொண்டு அமைந்துள்ள சென்னிமலை தலத்தை கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.

நினைவில் கொள்ள வேண்டிய ஆறுமுகக் கடவுளின் சில முக்கிய சுலோகங்கள்:

அனுதினமும் பூஜை அறையில் ஆறுமுகக் கடவுளை போற்றி மகிழ சில முக்கிய சுலோகங்கள் இவை. இப்பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். ஓம் சரவண பவ!!!

(கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர்):-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

(திருவண்ணாமலை திருப்புகழ் - அருணகிரிநாதர்):-
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!!

(திருமுருகாற்றுப்படை - நக்கீரர்):-
அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும்
-தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!!!

(கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சரியார்):-
ஆறிரு தடந்‌தோள் வாழ்க அறுமுகம் வாழ்க -வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்!!

(கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்):-
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை -நாடிவந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என்செயும் -குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் -சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து -தோன்றிடினே!!

இந்து சனாதன தர்மம்: எது தலையாய அறம் ?.

'அறம் செய்ய விரும்பு' என்றாள் தமிழ் மூதாட்டி. இந்து தர்மம் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல. அறங்களில் தலையாயது எது? பார்ப்போம்!!!

திருவள்ளுவர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்று இரு அதிகாரங்களில் 'எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் - புலால் உணவை உண்ணாது இருத்தல்' என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

'அன்பே சிவம்' என்று முழங்கிய பரம ஞானி திருமூலர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்ற பகுதிகளில் அறம் அல்லாத இவ்விரு செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார். 'கொல்லாமை' என்ற மலரே பூஜைக்கு உகந்த முதன்மையான மலர் என்றும், 'புலால் உணவை உட்கொள்வது' நரகத்துக்கு இணையான பெரும் துன்பத்தைப் பெற்றுத் தருவது உறுதி என்றும் குறிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - கொல்லாமை:-
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்
அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்...

திருமந்திரம் - புலால் மறுத்தல்:-
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் 'புலால் உணவை உட்கொள்ளும் வரை இறைவனின் அருளைப் பெற முடியாது' என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை வடிவானவன். கருணை எங்கு இல்லையோ - அங்கு இறைவன் வசிப்பதில்லை.

(இராமலிங்க வள்ளலார்):-
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!

புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.

வேதங்கள் - உபனிடதங்கள் - சாத்திரங்கள் - பக்தி இலக்கியங்கள் - ஞானிகளின் வாக்குகள் - இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!

இந்து சனாதன தர்மம் - பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-

இறைவனின் ஆணையான தர்மங்களை முழுமனதாக ஏற்று, அவற்றை பின்பற்றுவதாகவும் உறுதி பூண்டு, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்தும் முறையே 'பக்தி' என அழைக்கப் பெறும். தர்மங்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டு இறைவனிடம் கொள்ளும் அன்பு 'பக்தி' ஆகாது என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகிறது.

மணிக்கணக்கில் கிருஷ்ண நாம ஜெபம் செய்ய விழையும் மனம், கண்ணனின் வாக்கான கீதையை பின்பற்ற மறுக்கிறது. ஸ்ரீராமாயண நிகழ்வுகளை ரசித்து மகிழும் மனம், ஸ்ரீராமாயணம் உணர்த்தும் தர்மங்களை உணர மறுக்கிறது. சீரடி பாபாவின் பஜனைகளுக்கு பழகிய மனம் - அப்பரம ஞானியின் போதனைகளை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.

எண்ணற்ற மகான்களை வணங்கத் தயங்காத மனம் - அந்த அருளாளர்களின் தெய்வ வாக்கில் இருந்து உதிக்கும் தர்மங்களை கடைபிடிக்க மறுக்கிறது. ஞானிகளின் படங்களை விட அவர்களின் பாடங்கள் மிக முக்கியம். படங்களால் முக்தி பெற முடியாது - அப்பெருமக்களின் பாடங்களான தர்மங்களே முக்தி நெறிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது.

தர்மமே பக்திக்கு ஆதாரம். தர்மத்தை பின்பற்றாத நிலையில் பக்தி செயல் இழக்கிறது. எது தர்மம் ? அகிம்சையே உயர்ந்த தர்மம். அகிம்சையே உன்னதமான கடமை. 'மற்றொரு உயிருக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே' ஞானப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

மனு தர்ம சாத்திரம் (அத்தியாயம் 5 - சாத்திரம் 51 & 52):-
ஒரு உயிரினத்தை கொல்ல அனுமதிப்பவர் - கொல்பவர் - கூறுகளாக வெட்டுபவர் - மாமிசமாக்கி விற்பவர் - வாங்குபவர் - சமைத்து உணவாக்குபவர் - பரிமாறுபவர் - உட்கொள்பவர் - இவர்கள் அனைவருமே அந்த உயிரைக் கொன்றவர்களாகவே கருதப் படுவர். தன் உடம்பை வளர்க்கும் பொருட்டு பிற உயிர்களின் மாமிசத்தை உண்பதை விட பெரிய பாவச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

அகிம்சையை முன்னிருத்தும் இந்து தர்மம்:- அகிம்சை குறித்த சில நுட்பமான கருத்துக்கள்!!!

ஒரு குழந்தையை வதைத்துப் பின் அதன் தாயிடமே சென்று அன்பு பாராட்டி, உதவியையும் கோரும் செயலை யாரும் செய்வரோ? தன் குழந்தை வதைக்கப் படுவதை பதைப்பதைப்புடன் கண்னுற்ற எந்த ஒரு தாயின் மனமாவது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா? இப்புவியில் வாழ்ந்து வரும் கோடான கோடி ஜீவராசிகளுக்கும் தாய் - தந்தையாய் விளங்கி வருபவன் இறைவன்.

கருணையே வடிவான இறைவன் தன்னுடைய குழந்தைகளான உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை - பொறுப்பதும் இல்லை. 'வதைக்கும் செயல் புரிந்தால் சர்வ நிச்சயமாய் வதைபட வேண்டி வரும்' என்பது இந்து தர்ம சாத்திரங்கள் அறுதியிட்டுக் கூறும் படைப்பின் நியதி.

ஆன்மாக்கள் கர்ம பலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும் பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை - வன்முறை - தீவிரவாதம்.

அதே ஆத்மா வேறு ஒரு உயிரினத்தில் உறையும் பொழுது வதைபட்டால் அதை உணவு என்று கருதுவது ஏற்புடையது அல்ல. இறைவனின் படைப்பு மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும் பிழை. அனேக கோடி ஜீவராசிகள் வாழும் பொருட்டே இறைவனால் இப்புவியில் படைப்பு நிகழ்த்தப் படுகிறது.

ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்றால் இரு முனையிலும் பரிமாற்றம் இருத்தல் அவசியம். இறைவனுடன் நாம் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறோம். நாம் பேசுவதை மட்டும் இறைவன் செவி மடுக்க வேண்டும் என்று விழைகிறோம். இறைவனின் வார்த்தைகளான தர்மங்களை செவி மடுக்க மறுக்கிறோம். இதனால் அன்றோ இறைத் தொடர்பு ஏற்படாமலே வாழ்நாள் வீணே கழிகின்றது.

ஒவ்வொரு உணவு வேளையிலும் 'அகிம்சை - தர்மம் - கருணை - நீதி' இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உணவை தேர்ந்தெடுக்கும் சக்தியும், அதிகாரமும் நம்மிடம் உள்ளது. புலால் உணவை மறுப்போம் - நலம் பெறுவோம்!!!