வியாழன், 7 செப்டம்பர், 2023

20. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

20. ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



இருபதாவது ஆசார்யர் [கி.பி. 398 - 437]

ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''நான்காம் சங்கரர்'' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் தந்தை பெயர் ''வித்யாவதி'' வானவியல் வல்லுனர்.

பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ''ஸ்ரீ வித்யா கநேந்திரர்'' அருளால் பேச்சு வந்தது. உடனே ''மூகபஞ்ச சதீ'' என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். அதன் நன்றி கடனாக இவரை மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் அவரின் பெற்றோர்.

ஸ்ரீ மூக சங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவர் ''சஹாரி விக்ரமாதித்யன்''. அவனரது ஆட்சி காலம் [கி.பி. 375 - 413] என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அவருக்கு கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட ''மாத்ரு குப்தனும்'', ''ப்ரவரசேனனுமாவர்''. இருவருக்குமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு. வேலைக்காரனான ''மாத்ருகுப்தன்'' அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.

சிறு வயதில் ''மாத்ருகுப்தன்'', ''சஹாரி விக்ரமாதித்யன்'' அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தார். ''விக்ரமாதித்யன்'' காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம் நள்ளிரவு. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, மாமன்னன் திடீரென விழித்தான். விளக்குகள் எல்லாம் அணைந்திருந்தன. வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான். ''மாத்ரு குப்தன்'' விளக்குடன் வந்தான்.

“நீ ஏன் தூங்க வில்லை?" என்று கேட்டான் அரசன். “புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம். இப்படி உறங்கிய பாண்டவர்களின் மைந்தர்களையும், மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமா வெட்டியது இரவில் தான் எனப் பொருள்படும் ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லிய படியே விளக்கேற்றினான் சிறுவன்.

மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறுவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரசசியமாக அரசாணை பிறப்பித்தான். பிறகு ''மாத்ருகுப்தனிடம்'' தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலை நகருக்கு அனுப்பினான்.

நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்கு, முக்காடிப் போனான் ''மாத்ரு குப்தன்''. சஹாரி விக்ரமாதித்யன் எதிர் பார்த்ததும் இதைத்தானே.

இப்படி எதிர் பாராத விதமாக மணி முடி சூட்டப்பட்ட ''மாத்ரு குப்தனுக்கு'' நாளடைவில் கர்வம் மிகுந்தது. அதனால் எவரையும் மதிப்பதில்லை. ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது. அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார். அரசன் இருப்பிடம் நெக்கி சென்றார். ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும், மேது [மெந்தன்] என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நனைத்தார். இருவரும் கவிபாடும் ஆற்றல் பெற்றனர். ராமிலன் ‘'மணிப்ரபா'' என்ற கவிதை நாடக நூலையும், மேது "ஹயக்ரீவ வதம்" என்கிற நாடக நூலையும் படைத்தனர்.

கவிதைத்திறன் என்பது ''கர்வம் கொள்வதற்கல்ல'' என்று புரிந்து கொண்டான் ''மாத்ருகுப்தன்''. அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது. மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான். “ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்” என்று வேண்டினான்.

“மன்னா! ஜீலம் நதி முதல் சிந்து நதிவரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது. கொடிய மிருகங்கள் வாழ்கின்றன. முட் செடிகள் அடர்ந்துள்ளன. ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். காட்டைத் திருத்திப் ''பாதை அமைத்துக் கொடு” என்றார் ஜகத்குரு.

அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றினான் ''மாத்ரு குப்தன்'' அந்த நெடுஞ்சாலை ''சுஷ்மா'' என அழைக்கப்படுகிறது. ''மாத்ரு குப்தன்'' ''ஸேது பந்தம்'' என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.

அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று ''ஸார்வ பௌமன்’' என்னும் நாமத்தோடு “இளைய குரு" ஆனார். ப்ரவரசேனன், ஸார்வபௌமர் ஜீவிதகாலம் வரை காஷ்மீர நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீகாமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜ தரங்கணீயம் கூறுகிறது.

இப்படி செயற்கரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி. 437 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆவணி மாதம், பௌர்ணமி அன்று கோதாவரி தீரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 39 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

கருத்துகள் இல்லை: