புதன், 18 நவம்பர், 2020

ஆறுபடை வீடு

ஆறுபடை வீடுகள். 

 


இரண்டாவதுபடை வீடு  திருச்செந்தூர். சுக்குக்கு மிஞ்சிய    வைத்தியமில்லை;
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய
தெய்வமில்லை. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில்,   திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில் இரணடாவது படை  வீடு. தேவ குருவாகிய வியாழ பகவான் இங்கு  தங்கி, முருகனுக்கு அசுரன் பற்றி எடுத்துரைத்ததுடன், தேவதச்சனான விஸ்வகர்மாவை கொண்டு இங்கு  கோவில் எழுப்பினர். தேவ குருவுக்கு   மிக முக்கியமான ஸ்தலம். ஆகவே  ஐப்பசி 30 ம்  நாள் குருபெயர்ச்சி   தினத்தில் திருச்செந்தூர் முருகனை வணங்கி தேவ குருவை   வணங்கினால், குருவினால் சிறப்பான நற்பலன்கள்  உண்டாகும் .
முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கி வீரவாகுத் தேவரின் தூது    சூரபத்மனால் ஏற்கப்படாமல் போன பிறகு முருகப்பெருமான் அன்னை பார்வதியிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுத்து,   போரின் முடிவில் கடலுக்கடியில்  மாமரமாக நின்ற சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்து அவனை சேவல் கொடியாகவும், மயில்  வாகனமாகவும் ஆட்கொண்டார்.  கடலுக்கு அடியில் மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
திருச்செந்தூர் கடற்கரையில் போர்  நடந்த போது படை வீரர்களின்   தாகம் தீர்க்க கடற்கரையை ஒட்டி  உப்பில்லாத நன்னீர் கொண்ட   நாழிக்கிணறை முருக பெருமான்   உருவாக்கினார். இன்று பக்தர்கள்   கடல் தீர்த்தத்தில் நீராடி பின்பு  நாழிக்கிணறு நன்னீர் தீர்த்தத்தில்   நீராடி பிறகு ஸ்வாமி தரிசனத்துக்கு   செல்கிறார்கள். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் 'சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, 'கந்தமாதன பர்வதம்’ என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் பெருமாள் சந்நதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம். சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிராகாரம் கிடையாது. இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிராகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்கு செய்யப்படுகிறது. சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். பஞ்சலிங்க தரிசனம்
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும் போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை. ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் 157 அடி உயரம் கொண்ட ஒன்பது தளங்களைக் கொண்ட   இராஜகோபுரம் அமைந்துள்ளது.  முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
பூஜை நேரம் பூஜை விபரம்
காலை 5.10 சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சி 5.30 விசுவரூப தரிசனம்
5.45 கொடிமர நமஸ்காரம்.
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 உதயமார்த்தாண்ட தீபாராதனை
8.00 காலசந்தி தீபாராதனை
10.00 கலச பூசை
10.30 உச்சிக்கால அபிஷேகம்
பகல் 12.00 உச்சிக்கால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்சை பூசை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தசாம பூசை
8.30 ஏகாந்த சேவை
8.45 இரகசிய தீபாராதனை, பள்ளியறை பூஜை
9.00 நடைதிருக்காப்பிடுதல்
மார்கழி மாதம் மற்றும் திருவிழா காலங்களில் பூஜை நேரம் மாற்றம் இருக்கும்.


திருவிழா: பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளது.   இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில்  மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக்  குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டன. மற்ற தீர்த்தங்கள்   ஊருக்குள் இருக்கிறது; ஆங்காங்கே  வழிகாட்டி பலகைகள் உண்டு.
 

1. முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப்பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.
7. காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.
8. சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.
11. வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.
13. ஞானதீர்த்தம்: இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி,  சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.
16. முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.
22. கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
அமைவிடம் :
தூத்துக்குடி மாவட்டத்தின்   திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில்  மன்னார் வளைகுடாவை அண்டி  கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.  இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது.
திறக்கும் நேரம்
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

கருத்துகள் இல்லை: