புதன், 18 நவம்பர், 2020

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா, அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே

-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!


கருத்துகள் இல்லை: