புதன், 18 நவம்பர், 2020

வியாசர்

வியாசர் மகாபாரதத்திற்கு முதலில் வைத்த பெயர் ஜயம் என்பது ஏன் தெரியுமா?


மகாபாரதம் என்பது நம் நாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றாகும். பாரதம் என்பது பரதன் ஆண்ட பூமி என்றும், மகாபாரதம் என்பது, பரதன் முதல் ஜனமேஜயன் வரை அவனது நீண்ட வம்சாவளி ஆண்ட நாடு என்றும் பொருள்படும். பிற்காலத்தில், அந்த‌ நீண்ட வம்சாவளியின் வரலாறு (இதிகாசம்) அப்பெயரால் அழைக்கப்பட்டது.

வியாசமுனிவர் தமது பாரதத்தை 100008 சுலோகங்களைக் கொண்ட மிகப் பெரும் காப்பியமாக உருவாக்கினார். கோர்வையாக ஒரு வரலாற்றை, சற்றும் சுவை குன்றாமல் யாப்பது அவ்வளவு எளிய செயலா என்ன? இக்காப்பியத்தை, வியாசர் இயற்ற, இயற்ற, விநாயகர் உடனுக்குடன் தம் தந்தத்தால் மேரு மலையில் எழுதினார் என்று நூன்முகம் கூறும்.

இந்நூலுக்கு வியாசர் ஆரம்பத்தில் வைத்த பெயர் ஜயம் என்பதாகும்:

நாராயணம் நமஸ்க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம் |
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம்
ததோ ஜயம் உதீரயேத் ||

'ஜயம்' என்பதை அப்படியே வெற்றி எனப் பொருள் கொள்ளல் தவறு. இது உண்மையில், க ட ப யா தி சங்க்யை என்ற (எண்ணை, எழுத்தாக மாற்றி எழுதும்) அக்கால மரபுப்படி, 18 (பதினெட்டு) என்ற எண்ணைக் குறிப்பதாகும். என்றால் இக்காப்பியத்தில் அந்த எண்ணின் ஆதிக்கம் அத்தனை அதிகமா? ஆம். மேலும் விரிவாகப் பார்ப்போம்.
 


சமரேஷு துர்கா என்ற வழக்கில் கொற்றவை (துர்க்கை) போர்க்கடவுளாக வணங்கப் படுகிறாள். உக்ரமான துர்க்கையின் உருவம் 18 கைகளைக் கொண்ட அஷ்டாதச புஜ துர்கா என்றழைக்கப்படுகிறது. என்றால் 18 என்ற எண் போருடன் தொடர்புடையதா என்றால், ஆம் என்றே சொல்லவேண்டும்.
தேவ அசுர யுத்தம் 18 ஆண்டுகளும், ராம ராவண யுத்தம் 18 மாதங்களும், மகாபாரத யுத்தம் 18 நாட்களும், கலிங்கப் போர் 18 நாழிகைகளும் நடந்ததாக, செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி கூறுகிறது:
தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்றுஓவா உரை ஓயும்படி உளதப் பொருகளமே..

மகாபாரதத்திலுள்ள 100008 சுலோகங்களிலும் 18 எண்ணின் தாக்கத்தைக் காணலாம். இந்தக் காவியம் ஆதி பர்வம் முதல் ஆனுசாசனீக பர்வம் ஈறாக மொத்தம் 18 பர்வங்களை (Cantos) உள்ளடக்கியுள்ளதாகும்.  

இதில் இடம்பெறும் பகவத்கீதை எப்படி? அதற்கும் 18 அத்தியாயங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மகாபாரதப் போர் நடைபெற்ற நாட்கள் மட்டும் 18 அல்ல. அதில் இடம்பெற்ற படைப்பிரிவுகள் (அட்சரோணிகள்) எண்ணிக்கையும் 18 ஆகும். 18 தளகர்த்தர்கள் அவற்றை வழி நடத்தினர்.

பகவத்கீதை நம் நாட்டின் தலைசிறந்த தத்துவ நூல் என்ற போதிலும், அதன் நோக்கம், போரில் முனைப்பில்லாத அர்ஜுனனைப் போரில் ஈடுபடுத்துவதாகவே இருந்ததைக் கருத்தில் கொள்ளவேண்டும். கர்மண்யேவ அதிகார ஸ்தே மா பலேஷு கதாசன (கடமையைச் செய்; பலனைக் கருதாதே) என்ற தாரக மந்திரமே அதன் உந்து சக்தி. இப் போரால் நீ எதை இழக்கப் போகிறாய்? தோல்வி அடைந்தால், வீர சொர்க்கம் போவாய்; வெற்றி பெற்றால் நீங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தைத் திரும்பப் பெறுவாய். மொத்தத்தில் இப்போரால் உனக்கென்ன நஷ்டம்? கிருஷ்ணனின் இந்த முரண் தர்க்கம் (dialectics) எப்படிப்பட்டது?
 

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் || (2 : 37)

பாண்டவர்கள், தங்கள் மூத்த உறவினர்களை/ ஆசிரியர்களைக் கொல்ல நேர்ந்தது எவ்வளவு பெரிய கொடுமை? எத்தனை இளைஞர்கள் பலி ஆயினர்? எத்தனை அழிவுகள்? எத்தனை இழப்புகள்? எல்லாவற்றையும் உள்வாங்கிய அந்த ஒற்றைச் சொல்தான் ஜயம் (18) என்பது.

கருத்துகள் இல்லை: