புதன், 18 நவம்பர், 2020

இடும்பன் வரலாறு

கந்த சஷ்டி விழா சிறப்பு பதிவு  இடும்பன் வரலாறு!

"வருபவர்களோலை கொண்டு நமனுடைய தூதரென்று'' என்று துவங்கும் "பரகிரியுலாவு செந்தி மலையினுடனேயிடும்பன் பழனிதனிலேயிருந்த குமரேசா'' என்ற அடிகளில் இடும்பனைப் பற்றிய வரலாற்றைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

அகஸ்திய முனிவர் கந்தகிரிக்குச் சென்று முருகனைத் துதித்து வணங்கி அங்கு சிவசொரூபமாகவும் சக்திரூபமாகவும் விளங்கும் சிவமலை, சக்திமலை ஆகிய மலைச் சிகரங்களைத் தந்தருள வேண்டும் என்றும் தான் அவற்றைப் பொதியமலையில் வைத்து வழிபாடு செய்யப்போவதாகவும் கூறுகிறார். முருகன் அவ்வாறே அவருக்கு அருள அவர் அந்த இரண்டு மலைகளையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு பூலோகம் வருகிறார். அவற்றை திருக்கேதாரத்திற்கு அருகில் பூர்ச்சவனம் என்ற இடத்தில் இறக்கி வைத்துவிட்டுப் பொதியமலை நோக்கிக் கிளம்புகிறார்.

இடும்பாசுரன் என்னும் அசுரன் வில் வித்தையில் மகா நிபுணன். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் போன்ற அசுரர்களின் சேனைகளுக்கு வில்வித்தை கற்பித்த குரு. முருகனின் வேலாயுதத்தால் அசுரர்கள் யாவரும் மாண்டுபோகவே அவன் தன் மனைவி இடும்பியுடன் வனசஞ்சாரம் மேற்கொள்கிறான். இடும்பவனம் என்னும் வனத்தில் சிவபெருமானை நோக்கித் கடும் தவம்புரிய, அவர் அவன்முன் தோன்றுகிறார். இடும்பன் தான் ஆறுமுகக் கடவுளுக்கு அடிமையாகி அவருக்குத் தொண்டு செய்து வாழ அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டுகிறான். சிவனும், ""திருக்குற்றாலமலையை நோக்கிச் செல். உன் எண்ணம் ஈடேறும்'' என்று கூறி மறைகிறார்.

இடும்பன் இடும்பியுடன் திருக்குற்றாலம் வந்து அகஸ்திய முனிவரைக் கண்டு வணங்கித் தன் உள்ளக்கிடக்கையை வெளியிடுகிறான். அகஸ்தியருக்கு உள்ளூர மகிழ்ச்சி. தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்கி வருவதற்குச் சரியான ஆள் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்து, ""அன்பனே! நீ கவலையுறாதே. குமரவேளின் அருள் உனக்கு நிச்சயம் கிடைக்கும். நீ நான் சொல்லும் இடத்திற்குச் சென்று இரு மலைச் சிகரங்களை எடுத்துக் கொண்டு வந்து இங்கே வைக்க வேண்டும்'' என்கிறார். அதற்கு இடும்பன் உடன்படவே அவனுக்குச் சில மந்திரங்களை உபதேசம் செய்கிறார் அகஸ்தியர்.

இடும்பன் வெகு வேகமாக பூர்ச்சவனத்திற்கு வழிகேட்டுக்கொண்டு சென்று அம்மலைச்சிகரங்களைக் காண்கிறான். மலைகளின் முன்புநிஷ்டையில் அமர்ந்து அகஸ்தியர் உபதேசித்த மந்திரங்களைப் பக்தியுடன் உச்சாடனம் செய்ய அப்போது பிரமதண்டம் புயதண்டாகவும் அட்டதிக்கு நாகங்களும் கயிறுகளாக அவன் முன் வந்தன!

அவற்றைக் கண்டு அதிசயித்த இடும்பன் அந்த நாகங்களை உறிபோல் அமைத்து இரு மலைகளையும் அதில் வைத்து பிரமதண்டுடன் பிணித்து மூலமந்திரத்தை ஓதி, முருகனை மனதால் பணிந்து, காவடியாக்கி எடுத்துத் தன் தோள்களில் அவற்றை வைத்து "அரோகரா! அரோகரா!'' என்று கூவிக்கொண்டு தென்திசை நோக்கி நடந்தான்.

பலமுறை நடுவில் வழிதெரியாது மயங்கி தவறான பாதைகளில் சென்று மீண்டும் சரியான பாதையை கண்டுபிடித்து இறுதியில் வராகமலை வழியாக திருவாவினன்குடியை அடைந்தான். அங்கு வந்ததும் அவன் தோள்மேல் சுமந்திருந்த மலைகள் மிகவும் கனக்கத் தொடங்கி அவற்றின் பாரம் தாளாமல் கீழே இறக்கி வைத்துச் சற்று இளைப்பாறுகிறான். அவன் கூடவே வந்த இடும்பி காட்டில் தேடி காய்கனி, கிழங்குகளைக் கொண்டு வந்துதர அவற்றை உண்டு பசியாறுகிறான். மீண்டும் கிளம்பலாம் என்று எத்தனித்து காவடியைத் தூக்க முயன்றால்... முடியவில்லை! சுற்றுமுற்றும் பார்த்தான். சிவகிரியின் மீது ஒருபுறம் குராமர நிழலில் ஒரு சிறு குழந்தை! "இது யார் குழந்தை? எதற்கு இந்த மலைமீது தனியாய் நிற்கிறது. ஏதாவது துஷ்ட மிருகங்கள் வந்து அடித்துப் போட்டால் குழந்தையின்கதி என்னாவது' என்று பதைத்தான் இடும்பன்.

காரணம் அந்தக் குழந்தை ஆயிரம் கோடி சூரியர் ஒன்று திரண்டாற் போன்ற பேரொளியுடன் விளங்கியது! இடும்பன் அந்தக் குழந்தையிடம் பல கேள்விகள் கேட்டு அது யார் குழந்தை என்று அறிய முயல்கிறான்.

ஆனால் அந்தக் குழந்தையோ இவன் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாது இவனைப் பார்த்து புன்னகை புரிந்து கொண்டிருந்தது. இடும்பனுக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவன் மீது பாய்கிறான் அடிக்க.

ஆனால் அந்தச் சிறுவனோ ""இது என்னுடைய மலை. இதிலிருந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறாய்? உனக்கு வலிமையிருந்தால் இவற்றை எடுத்துக் கொண்டு போ பார்க்கலாம்!'' என்று சவால் விடவே, இடும்பன் ""நான் அகஸ்திய மாமுனிவரின் சீடன். என்னிடம் வம்பு வைத்துக் கொள்ளாதே... உன்னைப் பொடிப் பொடி ஆக்கி விடுவேன்!'' என்று கூறி சிறுவனை அடிக்க கையை ஓங்கினான்.

குராவடி குழந்தையாக வந்தது சாஷாத் அந்தக் குமரக் கடவுள் அல்லவா? குமரன் தன் திருக்கரத்தில் விளங்கும் தண்டாயுதத்தினால் இடும்பன் மீது லேசாக இடிக்க, அந்த இடியைத் தாங்காது இடும்பன் கீழே விழுந்து மாண்டான்.

மகா வீரனான தன் கணவன் இறந்ததைக் கண்ட இடும்பி ஓடிவந்து கதறுகிறாள். சிறுகுழந்தை வடிவில் இருந்த குமரக்கடவுள் காலடியில் விழுந்து கதறுகிறாள். உடனே முருகன் மயில்மீது அவளுக்குக் காட்சி தருகிறார். தூங்கி எழுந்தது போல் இடும்பனும் எழுந்து கொள்கிறான். தன்னைச் சோதித்தது தான் தொண்டு செய்ய விரும்பிய பழநியாண்டவராகிய குமரக் கடவுள், ""இடும்பனே... இந்த மலைகள் இனி இங்கேயே இருக்கட்டும். குறுமுனியும் இங்கு வந்து வழிபடட்டும். பக்தர்களும் உன்னைப்போல் காவடி கட்டி எடுத்துக் கொண்டு வந்து முதலில் உன்னை வணங்கி வழிபட்டு, பின் என்னை வந்து வழிபடட்டும்!'' என்று கூறி மறைகிறார். அதுமுதல் பழநிமலைக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் முதலில் இடும்பனையும் பின் தண்டபாணியையும் வழிபட்டு வரலானார்கள்.


கருத்துகள் இல்லை: