செவ்வாய், 28 ஜூலை, 2020

போதிவனம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. காற்றினால் இலைகள் சலசலத்துக் கொண்டிருந்தன. போதிசத்துவர் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

       போதிசத்துவர் தியானத்திலிருந்து கண்விழித்தார். ஒரு நடுத்தர வயது மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கினான். போதிசத்துவர் அவனைப் பார்த்து, “நீ யாரப்பா? உன் பெயர் என்ன?” என்று அன்புடன் கேட்டார். அம்மனிதன் தன் பெயர் அபிநந்தன் என்று கூறினார்.  “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். 

        “ தேவா! நான் ஏழை. எனக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உண்டு. பந்தபாசங்களில் உழன்று நான் சித்தரவதைகளை அனுபவித்து விட்டேன். தாங்கள் தான் என்னைத் துறவியாக்கி ஞானம் அருள வேண்டும்” என்று வேண்டினான். போதிசத்துவர் யோசித்தார். பிறகு அவனைப் பார்த்து கேட்டார். “அபிநந்தா! இந்த மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் ஏன் ஆடுகின்றன என்று தெரியுமா? காற்று வந்து மோதுவதால் தான். பாசம் என்னும் காற்று மோதும் போதெல்லாம் மனித இலைகள் இப்படித்தான் ஆடுகின்றன. முதலில் உன் மனதிலிருந்து பாசத்தை அறவே ஒழித்து விட முடியுமா?”

              அபிநந்தன் “முடியும் பிரபு” என்று வாக்களித்தான். “சரி அப்படியென்றால் இன்று முதல் நீ போதிவனத்திலேயே தங்கலாம்” என்று கூறினார். அபிநந்தன் அங்கேயே தங்கினான். சில நாட்கள் சென்றன. ஒருநாள் போதிசத்துவர் குளிப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தவர் அபிநந்தனைக் கவனித்தார். அவனுடன் ஒரு நாய் இருந்தது.

               “அபிநந்தா! இது என்ன நாய்?” என்று விசாரித்தார். அதற்கு அவன் “பிரபு! இந்த நாய் என்னை விட்டு விலகுவதே இல்லை. இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்” என்று வேண்டினான். போதிசத்துவர் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

             சில நாட்கள் சென்றன. அபிநந்தனோடும் அந்த நாய்க்குட்டியோடும் ஒரு சிறுவன் இருப்பதைக் கவனித்தார். அபிநந்தனிடம் விசாரித்தார். அதற்கு அவன், “பிரபுவே! இவன் என் மகன். இந்த நாயை விட்டு அவனால் இருக்க முடியவில்லை. ஆகையால் இவனும்” என்று இழுத்தான். போதிசத்துவர் சிரித்துக் கொண்டே போய்விட்டார். பின் ஒரு நாள் போதிசத்துவ குளத்தருகே அபிநந்தனுடன் ஒரு பெண்ணும் இருக்கக் கண்டார். அவனிடம் “யார் இந்தப் பெண்மணி” என்று விசாரித்தார். அதற்கு அவன் “குருவே! இவள் என் மனைவி. மகனை விட்டு அவளால் ஒரு வினாடி கூட இருக்கமுடியவில்லை. ஆகையால் அவளையும்” என்று இழுத்தான்.

             போதி சத்துவர் சிரித்துக் கொண்டே இரண்டு பாத்திரங்களை எடுத்தார். ஒன்றிலே நிறைய பண்டங்கள் இருந்தன. ஒன்று காலிப் பாத்திரம். இரண்டையும் தண்ணீரில் வீசினார். பண்டங்கள் நிரம்பி இருந்த பாத்திரம் அமிழ்ந்துவிட்டது. காலிப் பாத்திரம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

              போதி சத்துவர் சொன்னார் “கனமான பாத்திரங்கள் அமிழ்ந்து விடுகின்றன. காலிப் பாத்திரங்கள் மட்டுமே மிதக்கின்றன. காலிப் பாத்திரமே ஞானப் பாத்திரம். கனத்த பாத்திரம் பாசப் பாத்திரம்.”

               “அபிநந்தா! உதிர்ந்து போக விரும்பும் ரோமங்கள் உதிர்ந்து போகின்றன. உதிர விரும்பாத ரோமங்கள் நரைக்கின்றன. உதிர்ந்து விட்ட ரோமங்கள் ஓடிவிடுகின்றன. உதிராத ரோமங்கள் தலையில் இருந்த கொண்டே கேலி செய்கின்றன. விலக்க முடியாத பந்தங்களும் அப்படியே. உன் இதயம் பாசத்துக்காகவே படைக்கப்பட்டது. சித்ரவதை என்பது அதற்கு நீ கொடுத்தே தீரவேண்டிய விலை. போய்வா” என்றார்.

என்ன ஒரு பாடம் !!!

கருத்துகள் இல்லை: