செவ்வாய், 28 ஜூலை, 2020

நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
"புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் நாம் பார்ப்பது இல்லை; தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டுதலை, நான்குதலை, பசுமாடு பூஜித்தது என்றுவரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? இது எப்படி சாத்தியம்? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லிவிடுகிறோம்" - பெரியவா.

ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும். தேகம், மனம், சாஸ்திரம், ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து நாம் சாப்பிடுகிறோம். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறோம். அதுபோல நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன. அதனால் பாரபட்சங்களை உதறிவிட்டு, தத்துவத்தில் மனத்தைச் செலுத்தி இறைவனுடன் ஒன்றிவிட வேண்டும்.

இதமான அன்பு வணக்கம் 🌹

கருத்துகள் இல்லை: