செவ்வாய், 28 ஜூலை, 2020

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.....!!!

"மஹாலக்ஷ்மீம் மஹாதேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலாலயாம்
 சங்க சக்ர கதாஹஸ்தாம் பத்மினீம் பத்மஸம்பவாம்"

"ஸர்வ உலகங்களுக்கும் தாயான ஸ்ரீலக்ஷ்மி ஆனவளும், தனக்கு மேல் ஒரு தெய்வமில்லாதவளும், ஸ்வயம்ப்ரகாசையானவளும், மஹா விஷ்ணுவின் ஹ்ருத் பங்கஜத்தை விட்டு என்றும் அகலாதவளும், சங்கம்,சக்ரம்,கதை இவற்றை தரிப்பவளும், தாமரையாளும், அத்தாமரையில் தோன்றியவளுமான ஸ்ரீலக்ஷ்மியையே சரணமடைவோம்"

உலகங்கள் அனைத்திற்கும் அன்னையாதலின் இவள் ஜகன்மாதா. ஆதிகாரணியாதலின் இவளே ஆதிலக்ஷ்மி. அம்மஹாலக்ஷ்மி எங்ஙனம் தோன்றினாள். தோற்றமும் மறைவும் இல்லா பரம்ம வஸ்துவே அவள். ஆத்யந்தம் இல்லா மஹாசக்தியே அவள்.

ஸ்வயம்ப்ரகாசையாக தான் பரப்ரும்மமே என நின்றால் தன் குழந்தைகள் தன்னை நெருங்கி முடியாது போய்விடுமோ? என்றஞ்சி ஆதிலக்ஷ்மியாய் வடிவம் தாங்கினள் அப்பரதேவதை.

"லக்ஷ்மீ" நாமமே தேனினும் தித்திப்பது. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடியது. ஸகல சௌபாக்யங்களையும் தரக்கூடியது. கிடைத்தற்கரிய மோக்ஷத்தையும் அனுக்ரஹிக்கக் கூடியது. அந்த ஆதிமஹாலக்ஷ்மியே, ஸ்வயமிச்சையாக ஸகல உலகங்களுக்கும் மங்களத்தை உண்டாக்கும் வண்ணம் அழகிய ரூபம் தாங்கினள்.

"கருமேகத்தை பழிக்கும் அழகியதும், நீலோத்பல மலரை ஜயிக்கும் அழகும் பொருந்திய அடர்ந்த கூந்தல் உள்ளவளும், அஷ்டமி சந்த்ரனை போன்று அழகிய நெற்றி பொருந்தியவளும், கரும்பு வில் தோற்கும் கரும்புருவங்கள் தரித்தவளும், சூர்யனையும் சந்த்ரனையும் தன் தாமரை போன்ற கண்களாய் உடையவளும்,

எள்ளுப்பூப்போல் நாசி தரித்தவளும், வெள்ளியை பழிக்கும் மூக்குத்தி ஏற்றவளும், பவழத்தை பரிகசிக்கும் அதரம் தாங்கியவளும், பத்மராகம் போன்று கன்னங்கள் கொண்டவளும், அழகிய காதுகளில் அசைந்தாடும் மகர குண்டலங்கள் தாங்குபவளும், பௌர்ணமி நிலவைப்போல் முகக்கமலம் தரிப்பவளும்,

சதுர்புஜங்கள் கொண்டவளும், மேலிரு கரங்கள் தாமரைப்புஷ்பங்களைத் தாங்க, கீழிருகரங்கள் வரமும் அபயமும் கொடுக்க, தனது தாமரை போன்ற பாதங்களை ஆராதிக்கும் திரிமூர்த்திகளை கொண்டவளுமாய்" அப்பரதேவதை விளங்கினாள்.

தேவர்கள்,ஸித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,மஹான்கள் என அனைவராலும் ஆராதிக்கப்பட்டவள் இவளே. தாமரையில் தோன்றியவள் ஆதலின் இவள் "கமலா". மனதிற்கு ஆனந்தத்தை உண்டுபண்ணுவதால் இவளே "ரமா".

மங்களமே மையமாக ப்ரகாசிப்பதால் இவளே "ஸ்ரீ". ஸர்வ லோகங்களுக்கும் அன்னை ஆதலால் இவளே "மாதா". தன் பக்தர்களுக்கு மோக்ஷமளிப்பதே லக்ஷ்யமாக உடையவள் ஆதலால் இவளே "லக்ஷ்மீ" என ஆயிரமாயிரம் பெயர்கள் உண்டு.

ஆனாலும் அவள் மகிழ்வது "தாயார்" எனும் சொல்லில் தான். அண்ட சராசரங்களையும் தனது கர்ப்பத்தில் தாங்குபவள் இவளே!! தானே அனைத்துமாய் நின்றவள்.

அப்பரதேவதையே தன்னை பாற்கடலரசனின் மகள் என காண்பிக்கின்றாள்.

கருத்துகள் இல்லை: