பத்ராசல ராமதாசர்
1603-ம் ஆண்டு ஆந்திராவின் கொல்ல கொண்ட பல்லம் (தற்போதைய கோல்கொண்டா பகுதி) என்ற இடத்தில் லிங்கண்ணா, காமாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் கோபண்ணா
என்ற இயற்பெயரைக்கொண்ட ராமதாசர்.
சிறுவயது முதலே ராமாயணக் கதைகளில் ஆர்வம் கொண்ட கோபண்ணா,
ஸ்ரீ ராமபிரானின் மீது பக்தி கொண்டு வளர்ந்தார்.
அவர் கமலம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு
ராமரின் மேல் பஜனைப் பாடல்கள் பாடிக் காலம் கழித்து வந்தார்.
இவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த ராமபக்தர் கபீர்தாசர்,
ராமதாசர் கனவில் வந்து
இராம நாமத்தை உபதேசம் செய்து இராமனை கெட்டியாக பிடித்துக் கொள் என்று கூறினார்.
அவ்வாறே கோபண்ணாவும் செயல்பட்டார்.
கோபண்ணாவுக்கு இராமதாசர் என்ற பெயரை சூட்டினார் கபீர்தாசர்.
பத்ராசலம் பகுதியில் வாழ்ந்ததால் 'பத்ராசலம் ராமதாசர்' என்று புகழப்பட்டார்.
ஒரு சமயம்,
ராமநவமி அன்று ராமதாஸரின் வீட்டில் ராம நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது.
அவரது வீட்டில் பெரிய விருந்து நடந்தது.
அப்போது அவர்களுடைய குழந்தை தாய் தந்தையரை விட்டுச் சென்று சமையல் அறையில் இருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மூழ்கியது.
குழந்தை இறந்ததை அறிந்தும், விருந்து கெடக் கூடாதென்பதற்காக தாயார் யாருக்கும் தெரியாமல் குழந்தையை மறைத்து வைத்தார்.
எல்லோரும் வெளியே சென்றவுடன் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.
குழந்தையின் சடலத்தை
இராம பிரான் விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி மனம் உருகப் பிரார்த்தித்தனர்.
தூக்கத்தில் விழித்தெழுந்த குழந்தை போல அந்தக் குழந்தை உயிருடன் திரும்பி வந்தது.
எல்லாம் ராமரின் கருணை என்று ராமதாசர் மகிழ்ந்தார்.
அன்றிலிருந்து முழுக்க முழுக்க ராம தாசராகவே மாறி தனது சொத்துக்கள் முழுவதையும் ராம பக்தர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார்.
காலம் செல்ல செல்லச் செல்வம் குறைந்து வறியவரானார் ராமதாசர்.
அப்போதும் ராம பக்தர்களை உபசரிப்பதில் தவறவே இல்லை.
வறுமை வாட்டிய நிலையில் ராமதாசரை, அவரது தாய்மாமன்கள் வற்புறுத்தி ஹைதராபாத் மன்னர் தானி ஷாவிடம் தாசில்தாராக பணிக்கு சேர்த்தார்கள்.
ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வரி வசூலித்து மன்னருக்கு அனுப்புவதே ராமதாஸரின் பணியாக இருந்தது.
பத்ராசலத்தில் பாகால டாமக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள்.
அவளும் ராமனிடம் மிகுந்த பக்தி பூண்டவள்.
ஒரு சமயம் காட்டினுள் சென்ற டாமக்கா, ஒரு பாம்பு புற்றிலிருந்து ஒளி வெளிப்படுவதை கண்டு திகைத்தாள். உள்ளே தைரியமாகக் கைவிட்டுப் பார்த்தபோது, அவளுக்கு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் கிடைத்தன.
அவற்றை வைத்து அவளே ஒரு சிறிய கோயில் கட்டி வழிபட்டு வந்தாள்.
கோபன்னா நேர்மையில் சிகரமானவர். அதனால் எதிரிகளும் அவருக்கு அதிகம். அந்த எதிரிகளில் சிலர் இவரைத் தாக்கி காட்டில் போட்டு விட்டுச் சென்றனர்.
அச்சமயம் பாகால டாமக்கா அங்கு வந்து கோபன்னாவிற்குத் தேவையான சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்றினார்.
அப்போது அவள் உருவாக்கிய சிறிய ராமர் கோயிலைக் கண்ட கோபன்னா மிகவும் பரவசமடைந்தார்.
ராமபக்தியால், தன் மனைவி, மகனுடன் காட்டிற்கு வந்து இந்த ராமரை பூஜித்து வந்தார்.
ராமர் ஆலயம் மிகவும் பழுதடைந்து இருந்தது.
அதைக்கண்ட ராமதாசர் கவலை கொண்டார்.
அதை சீர் படுத்த மன்னரின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்ய ஆரம்பித்தார்.
ஆறு லட்சம் வராகன் பணத்தை செலவு செய்து ராமபிரானின் கோயிலை அழகாக புதுப்பித்தார்.
அரண்மனைக்கு பத்ராசலம் பகுதிக்கான வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்த மன்னர் தானி ஷா கோபம் கொண்டார்.
ராமர் கோயிலை கட்ட அந்த பணம் செலவானது என்று அறிந்ததும் மேலும் சினம் கொண்டு ராமதாசரை கைது செய்தார்.
விசாரணைக்குப் பிறகு 12 ஆண்டுகள் சிறைவாசம் விதித்து ராமதாசரை சிறையில் அடைத்தார்.
சிறையில் மிக அதிகமான கொடுமைகளை அனுபவித்த போதும் ராமதாசர் ராமநாமத்தை சொல்லி வந்தார்.
12 ஆண்டுகளாக வதைபட்டு, ராமனை எண்ணி பல உருக வைக்கும் பாடல்களை பாடினார்.
நீயே இனி காக்க வேண்டும் என்று கதறி சரண் அடைந்தார்
12 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமதாசரை காக்க ராமபிரான் திருவுளம் கொண்டார்.
மன்னர் தானி ஷா முன்னிலையில் ராமபிரானும், அவரது தம்பி லட்சுமணரும் வியாபாரிகளைப்போல வேடமிட்டு வந்தனர்.
ராமதாசர் கட்ட வேண்டிய ஆறு லட்சம் வராகன் பொன்னையும் மன்னரிடம் கட்டி விட்டு அதற்கான ரசீது சீட்டையும் பெற்றுக்கொண்டனர். பணம் கட்டிய ரசீதை ராமதாசர் அருகில் வைத்து விட்டு சென்றனர்.
மன்னர் தானி ஷா பணம் அளித்தது ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் மகிழ்ந்தார்.
உடனடியாக ராமதாசரை விடுவித்தார்.
மன்னருக்கு காட்சி தந்த ராமபிரான், தனக்கு காட்சி தரவில்லையே என்று ராமதாசர் மனமுருகி பாடலைப்பாட, அவருக்கு ஸ்ரீராமர் காட்சி தந்து,
,
"பக்தனே ஆனாலும் மக்கள் பணத்தினை எடுத்து மன்னருக்கு அறிவிக்காமல் தனக்கு கோயில் காட்டியது தவறு என்றும், அதனாலேயே சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது"
என்றும் கூறினார்.
ராமரின் திருக்காட்சியை தரிசித்த நாள் முதல் ராமதாசர் ஊர் ஊராக சென்று ராமநாமத்தை பாடி மக்களை பக்தி வழிக்கு திருப்பினார்.
மக்கள் அவரை அனுமனின் அவதாரம் என்று எண்ணி வணங்கினர்.
பதினேழாம் நூற்றாண்டில் ராமநாமத்தை பரப்பி மாபெரும் சமயப்புரட்சியை உண்டாக்கியவர் பத்ராசலம் ராமதாசர்.
இன்றும் அவரது நெஞ்சை உருக்கும் பல பாடல்கள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பாடப்பட்டு வருகிறது.
பத்ராசல ராமபிரான் கோவில் பற்றி...
பத்ராசல ராமபிரான், தான் திருமால் அவதாரம்தான் என்பதை விளக்கும் வகையில் சங்கு, சக்கரம் ஏந்தி ஒரு கையில் அம்பு, மற்றொரு கையில் வில்லுடன் சீதா தேவியை தனது மடியில் இருத்தி அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார்.
அருகில் இளையவன் நின்ற நிலையில் சேவை சாதிக்கிறார்.
இந்த மலைப்பகுதியில் பத்ரா என்ற முனிவரின் ஆஸ்ரமம் இருந்ததால், இத்தலம் பத்ராசலம் என்றாயிற்று.
இத்தலத்தில் ஸ்ரீராமநவமி மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடி ராமபிரானின் திருவருளைப் பெறுகிறார்கள்.
நிஜாம் காலத்தில், பெருமாளுக்கு நிஜாமே ஆபரணங்கள், வஸ்திரங்கள் கொண்டு வந்து சமர்ப்பித்து விழாவைச் சிறப்பாக நடத்த உதவி வந்தார்.
இன்றும் இத்தலத்தில் தினமும் இரவு ஏழரை மணிக்கு நடக்கும் தர்பார் சேவை பிரசித்தி பெற்றது. ராமச்சந்திர மூர்த்திக்கு ராஜ உடைகள் அணிவிக்கப்பட்டு, தர்பாரில் எழுந்தருளச் செய்து அன்றைய கோயில் வருமானம் முறைப்படி எண்ணப்படும்.
அப்போது ராமதாஸரின் கீர்த்தனைகள் இசைக்கப்படும்.
ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா?
ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா?
மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ
நீ நாமம் ஏமி ருசிரா?
த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன
பக்ஷி வாஹன! நீ நாமம் ஏமி ருசிரா?
அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு
நீ நாமம் ஏமி ருசிரா?
சதா சிவுடு மடி சதா பஜிஞ்சேதி சதானந்தமாகு
நீ நாமம் ஏமி ருசிரா?
சரநன்ன ஜனமுல சரகுண ரக்ஷிஞ்சு
பிருது கலிகின நீ நாமம் ஏமி ருசிரா?
கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா விபீஷணகுல காசின
நீ நாமம் ஏமி ருசிரா?
கதலி கர்ஜூரபல ரசமுல கதிகமு
பதித பாவன, நீ நாமம் ஏமி ருசிரா?
தும்புரு நாரதலு டம்பு மீராக
கானம்பு சேசேதி, நீ நாமம் ஏமி ருசிரா?
அரய பத்ராசல ஸ்ரீ ராமதாசுனி ப்ரேம நெளின
நீ நாமம் ஏமி ருசிரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக