செவ்வாய், 28 ஜூலை, 2020

உதீத மகா சித்த புருஷர் - தக்கோலம்!

சென்னை அருகே சென்னை – அரக்கோணம் இருப்புப் பாதையில் தக்கோலம் என்னும் சிவத்தலத்தில் பிரஹார மதில் சுவரின் மேல் சுதை ரூபத்தில் தரிசனம் தருகின்ற ஸ்ரீஉததீ மஹா சித்புருஷரின் உருவத்தையும், கோயிலின் உட்புறம் ஒரு இரகசிய சந்நிதி அறை போல் அமைந்துள்ள ஸ்ரீஉததீ மாமுனியின் ஜீவ சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்தியையும் பற்றி பார்ப்போம்.  உதீத மஹரிஷி என்று அழைப்பாரும் உண்டு. பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்ற தக்கோலத் திருத்தலத்தில் தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்து அருள்புரிந்து அன்றும் இன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் ஸ்ரீஉததீ சித்புருஷர் நமக்கு அருள்புரிகின்றார்.

தக்கோலம் சிவாலயத்தில் உள்ள ஜீவசமாதி ஆலயத்தில் உறைந்திருக்கும் ஸ்ரீஉததீ சித்புருஷரானவர் நமக்குப் பலவிதமான அருள்வழி முறைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.  கோயிலில் நுழைந்தவுடனேயே உயர்ந்த மதில் சுவரில் யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஉததீ மாமுனிவரை கழுத்தை உயர்த்தி வான் நோக்கி மேலே நாம் தரிசனம் செய்வதே வசுபூரண தரிசனமாகும்.. இதுவரையில் சமநிலையில் கண்களை நோக்கியவாறோ அல்லது பாதாளத்தில் இருக்கின்ற தெய்வ மூர்த்தியையோ (திருச்சி மலைக்கோட்டை பாதாள அய்யனார், திருஅண்ணாமலை ஸ்ரீரமண மஹரிஷி வழிபட்ட பாதாளலிங்கம், விருத்தாலசத்திலுள்ள ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்) ஆஜானுபாகுவாக 10, 20 அடி உயரமுள்ள தெய்வ மூர்த்திகளை நாம் தரிசிக்கின்றோமே தவிர, என்றேனும் அண்ணாந்து பார்த்து கோபுர தரிசனம் போல ஏதாவது சித்புருஷ தரிசனம் நாம் செய்துள்ளோமா? இதுதான் உததீ மாமுனியின் உத்தமப் பேறாகும். உததீ மாமுனிவர் பலரையும் அரிய திருப்பணிகளைச் செய்ய வைத்து தம்மை அண்டி வந்தோரை அவரவரின் கர்மவினைப் ப(ல)யன்களை எளிய முறையில் சீரமைத்துத் தந்து அவர்கட்கு நல்லருள் புரிந்தவராவார். அவர்தம் முக்கியத் திருப்பணி என்னவெனில் ஆலய கோபுரங்களில் ஊடு பயிராக விளங்குகின்ற மரங்களையும், செடிகளையும் நீக்கி ஆலய கோபுரங்களைப் பாதுகாப்பதாகும். ஆலய கோபுரத்தில் செடிகள் வேர்விட்டு முளைத்து விடுமாயின் அது ஆலய கோபுரத்தையே பதம் பார்த்து விடுமல்லவா? இது மட்டுமின்றி நட்சத்திர தியான முறையிலே நட்சத்திர யோகதரிசனம் எனும் அபூர்வ யோகாசனத்தில் அமர்ந்து இரவு பூஜையிலே சிறந்து விளங்கியவரே ஸ்ரீஉததீ மாமுனியாவார். பகலெல்லாம் பல ஆலயங்கட்கும் சென்று ஆலய கோபுர மற்றும் விமானத் திருப்பணிகளை ஆற்றி, இரவில் சற்றும் உறங்காது வானத்தில் உள்ள நட்சத்ராதி, கிரஹ தேவதை மூர்த்திகளைப் பலவிதமான துதிகளால் வணங்கி கண் துஞ்சாது, சிவ மந்திரங்களை ஓதியவாறு மிகச் சிறந்த தபோபலன்களைப் பெற்று, அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.

இங்கு விடியற்காலையிலும், மாலையும் இருளும் சேரும் நேரத்திலும், இங்கு அமர்ந்து நட்சத்திர தரிசனம் பெறுவது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இங்கு தான் இரவு நேர தியான முறையில் தாமும் தியானித்துப் பிறருக்கும் உபதேசித்து நல்வழி காட்டியவரே ஸ்ரீஉததீ முனிவர்! கலியுக மனிதனானவன் பகல் நேரத்திலே, தொழில், கல்வி, குடும்பம் போன்றவற்றிற்காகச் செலவழிக்கிறானே தவிர இறைத் திருப்பணிக்காகவோ, வழிபாட்டிற்கோ அவன் ஒதுக்கும் நேரம் சில நிமிடத் துளிகளேயாகும். இரவு நேரமோ, உறக்கத்திற்கும், பலவித தீயவழிகட்கும் ஆட்பட்டதாய் அமைந்து விடுகின்றது. பின் எவ்வாறு தான் ஒரு மனிதனானவன் தன்னுடைய தெய்வீக நிலையில் முன்னேறுவதற்காக, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளை நன்கு பயன்படுத்த இயலும்? இதற்கு இரவு நேர தியானங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.

சில குறிப்பிட்ட திதிகளிலும், நட்சத்திரங்களிலும், நாட்களிலும் சில குறிப்பிட்ட இரவு நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகள், தியானங்கட்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஆதலின் இப்பூஜைகளின் இந்த அபரிமிதப் பலன்களால் செய்யாமல் விடுபட்ட பூஜைகட்கும் நந்நேரத்தை வீணே கழித்தமைக்கும் பிராயச்சித்தமாக அமைகிறது... உததீ சித்புருஷர் கலியுக மக்களின் நேரப் பற்றாக்குறை, நேரத்தை வீணாக்கும் தன்மையையுணர்ந்து, தீர்க்க தரிசனத்துடன் தான் தன் ஜீவசமாதியில் உததீ சக்திகளைத் தன் தபோ பலன்களின் திரட்சியாகப் பதித்துள்ளார். எனவே, தக்கோலத்தில், குருவாரமாக விளங்குகின்ற வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6 முதல் , மாலை 1 முதல் 2, இரவு 8 முதல் 9) போன்ற குரு ஹோரை நேரங்களில் 21 முழு எலுமிச்சம் பழங்களாலான மாலைகளை வைத்து குரு மந்திரங்களை ஓதி (தட்சிணாமூர்த்தி நாமாவளி, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், கல் ஆலின் புடையமர்ந்து .. பாடல் .., திருமூலர், அப்பர், சம்பந்தர், மணிவாசகர் போன்றோரின் குரு துதிகளை)  நன்கு ஓதி குறைந்தது அரைமணி நேரமேனும் தியானித்து குரு பகவானுக்குரித்தான மஞ்சள் நிற எலுமிச்சம் பழம் அன்னம் போன்ற உணவுப் பண்டங்களை ஜீவசமாதிக்குப் படைத்து தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட எலுமிச்சை மாலையை இல்லத்தில் வைத்து பூஜையில் வைத்து மறுநாள் அதனை அன்னமுடன் கலந்து எலுமிச்சை சாதமாக தானமளிக்க வேண்டும்..

ஒவ்வொரு மனிதனும், இரவில் தான் பல தீய வினைகளையும், தீவினை சக்திகளையும் சேர்த்துக் கொள்கிறான்... முறையற்ற காமச் செயல்களால் விந்துக் குற்றங்களும், கொலை, கொள்ளை, போன்ற தீய செயல்களும் இரவில் தான் நிகழ்கின்றன. மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இவ்வாறாக இரவில் கூடுகின்ற தீவினை சக்திகளைக் களைய இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களாக சமுதாயத்தைப் புனிதப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.

உததீ மஹரிஷியின் ஜீவாலய சமாதிக்கு வியாழன், திங்கட்கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் மூலிகைக் காப்பிடுதல் மிகவும் விசேஷமானதாகும். மூலிகைகட்குரித்தானவர்கள் தானே சித்புருஷர்கள். அதிலும் உததீ மஹரிஷியானவர் மூலிகைத் தாவரங்களின் தெய்வீக சக்தியுணர்ந்து அவற்றின் சாற்றினை மூலிகா பந்தன முறைப்படி மாத சிவராத்திரி தோறும் அருகிலுள்ள ஆற்றில் கலந்து அதன் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் மகத்தான தெய்வீகப் பணியாற்றினார்.
குறிப்பாக மாத சிவராத்திரி தோறும் தக்கோலத்தில் பள்ளியறைப் பால் நைவேதனம், மூலிகைத் தைலக் காப்பு, எலுமிச்சை அன்னதானம், நட்சத்திர பூஜைகளை நடத்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும்... மது, முறையற்ற காமம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்கட்கு அடிமையானோர் வியாழன் தோறும், குருஹோரையில் உததீ சித்புருஷ லிங்க பிரதிஷ்டா மூர்த்தியை வணங்கி அவருடைய ஜீவ சமாதிக்கு அபிஷேக ஆராதனைகளையும் அவர் மிகவும் போற்றிய கீரைகள், மூலிகைகள் கலந்த உணவு பண்டங்களையும் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய தீயவழக்கங்கட்கும் உததீ மாமுனியின் குருவருளால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு அவை அறவே நீங்குவதற்கான நல்வழியும் கிட்டும் (தகவல் - http://www.kulaluravuthiagi.com/Feb1999.htm)

கருத்துகள் இல்லை: